லண்டன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் அம்பலமான நிகழ்வு!
பிரித்தானியாவில் தமிழ் மக்களின் உணர்வுகளும், பல தசாப்த கால ஈழப் போராட்டத்தின் குறியீடுகளும் பணத்துக்காகவும், சுயநல விசா தேவைகளுக்காகவும் எப்படி விலைபேசப்படுகின்றன என்பது லண்டன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் அம்பலமாகியுள்ளது.
லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பேரணியில், தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வந்த ஒரு குழுவினர் தங்களுக்குள் சிங்கள மொழியில் பேசிக்கொண்டதைக் கண்டு அங்கிருந்த தமிழர்கள் திகைத்துப் போயினர்.
ஸ்ரீலங்கா அரசு செய்த இனப்படுகொலையை சிங்களவர்கள் உணர்ந்துவிட்டார்களோ எனப் போராட்டக்காரர்கள் ஒரு கணம் நெகிழ்ந்ததன் பின்னணியில் இருந்த சுயநல நாடகம், அடுத்த சில நிமிடங்களில் வெளிச்சத்திற்கு வந்தது.
போராட்ட களத்திற்கு ‘சூட்’ அணிந்து வந்த ஒரு நபர், அந்த சிங்கள ஆண்களை தமிழீழக் கொடியுடன் நிற்கவைத்து விதவிதமாகப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.
விசாரித்தபோதுதான் தெரிந்தது, வந்தவர் ஒரு குடியேற்ற ஆலோசகர் (Immigration Advisor)! கொடியைப் பிடித்திருந்தவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் சிங்கள மாணவர்கள்!
லண்டனில் தமிழ் போராட்டங்களில் கலந்துகொண்டதால், இலங்கைக்குத் திரும்பினால் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து என பிரித்தானிய அரசிடம் பொய் கூறி, அகதித் தஞ்சம் (Asylum) பெறுவதற்காகவே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது.
சொந்த மண்ணில் சிங்கள பேரினவாத அரசால் ஈழத் தமிழர்கள் இன்றும் நில அபகரிப்புக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாகி வரும் நிலையில், அதே சிங்களவர்கள் பிரித்தானியாவில் சுகபோகமாக வாழ தமிழர்களின் போராட்ட அடையாளத்தைத் துஷ்பிரயோகம் செய்வது எவ்வளவு பெரிய வரலாற்று முரண்?
ஆனால், இதில் சிங்களவர்களை மட்டும் குறை கூற முடியாது. இந்த ஒட்டுமொத்தப் பின்னணியிலும், தஞ்சம் கோரும் வழக்குகளை (Asylum cases) நகர்த்துவதிலும் தமிழ் வழக்கறிஞர்களும், குடியேற்ற ஆலோசகர்களும் (Solicitors & Immigration Advisors) கூட்டுச் சேர்ந்து பெரும் லாபம் ஈட்டி வருகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.
ஈழப் போராட்டத்தின் வலியை, தங்களின் பணப் பெட்டியை நிரப்பும் ஒரு தொழிலாகவே இவர்கள் மாற்றி வைத்துள்ளனர்.
இதைவிடப் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், வதிவிட உரிமை (Visa) இல்லாதவர்களுக்குப் போலியான வழக்குகளைத் தயாரித்துக் கொடுக்கும் இந்த வணிகத்தில் தமிழ் தேசிய அமைப்புகளின் பெயர்களும் சிக்குவதுதான்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) போன்ற அமைப்புகள், பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு, தங்களின் அதிகாரப்பூர்வ இலச்சினை (Logo) பொறிக்கப்பட்ட கடிதங்களை (Support Letters) வழங்குவதற்கு பெருந்தொகையை பணமாகப் பெறுகின்றனர்.
போராட்டங்களில் கலந்துகொண்டதற்கான ‘அத்தாட்சி கடிதம்’ என்ற பெயரில், தார்மீகப் பொறுப்பற்ற முறையில் இந்த அமைப்புகள் காசுக்காகக் கடிதங்களை வாரி வழங்குகின்றன.
இதன் மூலம் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் வழக்குகளை விட, பண பலம் கொண்டவர்களின் போலி வழக்குகள் முன்னுரிமை பெற்று விசாக்களைப் பெற்று விடுகின்றன.
ஆயிரக்கணக்கான மாவீரர்களின் இரத்தத்தாலும், மக்களின் தியாகத்தாலும் உருவான ஒரு தேசியக் கொடியையும், தங்களின் அடையாளங்களையும் காசுக்காகச் சிங்களவர்களுக்கும், போலி அகதிகளுக்கும் விற்கும் இந்த விசா மாஃபியாக்கள் (Visa Mafias) ஈழப் போராட்டத்தின் புனிதத்தையே சிதைக்கின்றனர்.
அரசியல் தஞ்சம் என்பது உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான புகலிடம். அதை விசா வியாபாரத்திற்கான கருவியாக மாற்றி, சிங்களவர்களுக்கும் துணை போகும் இந்தத் தமிழ் துரோகிகளும், தமிழ் தேசியத்தின் பெயரால் கல்லா கட்டும் அமைப்புகளும் ஈழத் தமிழ் மக்களுக்குச் செய்யும் ஆகப்பெரும் துரோகமாகும்.
இவர்களைத் தமிழ் சமூகம் இனியாவது அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை