தவெக வின் உள் நுழைவு திமுகவை தோற்கடிப்பு!

 பிராந்திய, புவிசார் அரசியல் பின்புலத்தில் இன அழிப்பின் ஒரு கண்ணியாகச் செயற்பட்டது மட்டுமல்ல தொடர்ந்து நீதி மறுப்பு அரசியலின் ஒரு பகுதியாகத் தமிழகத் தளத்தில் தொடர்ந்து செயற்படும் திமுக தோற்கடிக்கப்படுவது எமது நீதிக்கான பயணத்தில் மிக முக்கியமானது.



தவெக வின் உள் நுழைவு திமுகவை கிட்டத்தட்ட தோற்கடித்துவிட்டதாகவே தெரிகிறது. நாளை மறு தினம் இதற்கான பதில் தெரிந்து விடும். 


தவெக விற்கு ஈழ நலன் தொடர்பாக எந்தப் புரிதலும் கிடையாது. ஆனால் ஈழத்திற்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வேண்டிய தேவையோ, வாய்ப்போ குறிப்பாக பிராந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் உள்ளடக்கமோ, ஆளுமையோ இல்லாத வெறும் மாநிலக் கட்சி இது. அதனால் நாம் அச்சப்பட ஒன்றுமேயில்லை. தமிழக மக்களுக்கு வேண்டுமானால் இந்தக் கட்சி தீங்கு விளைவிக்கலாம் - அது குறித்து எனக்கு போதிய விளக்கமோ, அறிவோ இல்லை.


தவெக அல்லது அதிமுக அல்லது இரண்டும் இணைந்து ஒரு ஆட்சி உருவாகலாம். 


அதை எப்படி ஈழ ஆதரவுத் தளத்திற்கு ஒத்துழைப்பாக மாற்றுவது என்று சிந்திப்பதே சாணக்கியம். அதை விடுத்து அவதூறுகளை வீசிப் பிளவுகளை உருவாக்குவது இன அழிப்பைச் சந்தித்து தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டு நீதி கேட்கும் பயணத்தைத் தொடரும் ஒரு இனத்தின் சாணக்கியம் அது கிடையாது.


🟥 பின் குறிப்பு: 


இங்கு நாம் தமிழர் கட்சி குறித்து எழுதவே அச்சமாக இருக்கிறது. யதார்த்தத்தை எழுதினால் கடித்து வைக்கிறார்கள். நம் எல்லோரினதும் விருப்பம் அது வெல்ல வேண்டும் என்பதுதான். ஈழத்திற்கான நம்பகமான ஒரு கட்சி இப்போதைக்கு அது மட்டும்தான். ஆனால் வெற்றிக்கான உத்திகளை வகுத்துக் கொள்ளாமல் ஆட்டத்திற்கு வெளியே போன ஒரு கட்சி குறித்துப் பேசுவது அயர்ச்சியாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் குறித்து எனக்கு ஒரு மதிப்பீடு இருக்கிறது. அதை யோசிக்கவே நடுங்குகிறது. ஏனென்றால் நாம் தமிழரின் வீழ்ச்சி தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியாக பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது. நாலாம் திகதிக்குப் பிறகு இதை விரிவாகப் பேசலாம். நன்றி)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.