யாழ். நூலக எரிப்பு!!

 


புத்தகங்கள் என்பவை, காலத்தால் உருவாக்கப்படுகிற அடையாளச் சின்னங்கள், அவை, எமது வாழ்வியலை, எமது வரலாற்றை எல்லாம் தனித்தனியே எடுத்தியம்பி எம்மை வழிநடத்திச் செல்லும் ஒளி விளக்குகள். புத்தகங்கள் மனதோடு பேசுகின்ற மகா அற்புதமான சொற்சித்திரங்கள்.

அந்த ஒளி விளக்குகளை, சொற் சித்திரங்களை, தடமின்றி அழித்துவிட்டால் ஒரு இனத்தை அழித்ததற்கு சமனானது எனும் எண்ணத்தில் கைகூலிகளால் எமது யாழ்ப்பாணம் நூலகம் 1981ம் ஆண்டு எரித்து அழிக்கப்பட்டது. 31 ம் திகதி பற்றவைக்கப்பட்ட தீயானது, முதலாம் திகதி வரை எரிந்து தணலாகி, சாம்பலாகி தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கிறது.

இந்த மிலேச்சத்தனமான செயலை, அரச கைக்கூலிகளே செய்திருந்தனர் என நம்பப்படுகிறது. வன்முறை என்பது, மனிதர்கள் மீது கட்டவிழ்க்கப்படுவது என்பதைத் தாண்டி,  புத்தகங்களோடு நிகழ்த்தப்பட்டமையே இந்த நூலக எரிப்பாகும், அதிலும் அறிவுப்பசியை அடக்கி,  சிந்தனைத் ஆற்றலை மழுங்கடித்து, ஒரு இனத்தின் அறிவியல் குரலை மழுங்கடிப்பதே இதன் நோக்கமாக இருக்கலாம்.  இந்த கொடிய செயலானது, உலக மக்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது என்பதும் தமிழ் மக்கள் என்றும் மறக்க முடியாத வரலாற்று துன்பியல் என்பதும் மறுக்கமுடியாத ஒன்று.

"இனவாதமும் இனவாத ஒடுக்குமுறையுமே பிரிவினைவாத அரசியலுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மூலகாரணமாக அமைகின்றன" இது உன்னத வரிகள்.

1800.ம் ஆண்டுக்கான பத்திரிகைகள், தென்னாசியாவில் இருந்து தேடிய அரிய பொக்கிஷங்கள் என்பவை இதன் போது, எரிக்கப்பட்டுள்ளன.

கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.

1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர். பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.

மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட"தமிழ் கலாசாரம்" எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.

தமிழ் இன அழிப்புக்கு முதல் அடியாக இந்த நூலக எரிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நாற்பத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டதெனினும் தமிழ் மக்களின் மனதில் அந்த வடு இன்னும் மறைந்தபாடாக இல்லை, இந்த கொடூரமான செயலின் தகிப்பு எப்போதும் மறையப்போவதும் இல்லை. 

தமிழ் மக்களின் ஆன்மாவாக விளங்கிய இந்த நூலக எரிப்பானது, எத்தகைய பாரதூரமானது என்பதற்கு, அந்த எரிப்பு நடந்த பொழுதில் அதனை, சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாடியில் இருந்து பார்த்த தாவீது அடிகளார், அந்த கணமே உயிரிழந்தார் என்பதே மாபெரும் சான்றாகும் என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தமது பதிவொன்றிலே குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இனத்தின் வரலாறுகளை அழித்துவிடுவது அந்த இனத்தை அடியோடு அழிப்பது போன்ற செயல்தானே, அதைத்தான் இதனைத் திட்டமிட்ட சூத்திரதாரிகள் செய்திருந்தனர்.

1930 ம் ஆண்டு ஜேர்மன் நாட்டின் பேளின் வீதியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் வீதி எங்கும் பரவியது எனவும், நாசிகளின் இனப்படுகொலைக்கு அது பெரும் எடுத்துக்காட்டு எனவும் அதன் வரலாறு கூறுகிறது.


வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களுக்குள் அடங்கியிருக்கிற வேதனையின் வெளிப்பாடு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அதன் ஓலக்குரல் ஒருபோதும் ஓயாது. 


ஒரு இறத்தின் வரலாறு மாற்றப்பட்டு பகிரப்படுமானால், அதன் பின்பு, மாற்றப்பட்ட அந்த வரலாறே  பேசப்படும் என்பது உண்மை, இதனைக் கருத்தில் கொண்டு, எமது வரலாறுகளைச் சரியான வகையில் ஆவணப்படுத்தி, சரியான வகையில் பேணிப்பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டியது எமது தலையாய கடமை ஆகும்.


கோபிகை






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.