மனப் பகுவல்!!

 



விடியற்காலையின்

வெண்மூச்சில்

விரல்நுனி வருடிச் செல்லும்

பனித்துகளென

என்னுள்

சத்தமின்றி கரைகின்றன

உன் நினைவுகள்


அலைந்து திரியும்

குளிர்காற்றின்

அரூப அணைப்பில்

மரங்களின் இலைகள் கூட

தமக்குள்

மெல்லிசை பேசிக்கொள்ளும்

இந்த நேரத்தில்

உன் மெளனத்தின்

மென்மை மட்டும்

என் தனிமையை ஆக்கிரமித்து

பகுவலாய்ப் படர்கிறது


நதிக்கரையோர

நாணற்புற்களில்

நனைந்து ததும்பும்

பனித்துளிகளைப் போல

கண்களோரம்

தொங்கிக்கிடக்கின்றன

சொல்லப்படாத ஏக்கங்கள்


தொலைதூர மலைகளின்

தோள்மேல் படர்ந்திருக்கும்

வெண்பனி போர்வையைப் போல

என் இதயத்தின்

ஆழ்ந்த காயங்களையும்

மெதுவாக மூடிவைக்கிறது

உன் நினைவு


அந்திப் பொழுதுகளில்

அடர்ந்த பனிக்குள்

வழி தெரியாமல் நின்றுபோகும்

பயணியாய்

உன் பார்வையின்

பொருள் தேடித் தவிக்கிறது 

என் மனம்


காலத்தின்

குளிர் பிடித்த பாதைகளில்

கைகோக்க யாருமின்றி

நடந்துகொண்டிருக்கும்

என் உயிருக்கு

தொலைவில் தெரியும்

ஒற்றை விளக்கென

நம்பிக்கை ஒளியாய் நீ


இதோ

இன்றிரவு மீண்டும்

சாளரக் கண்ணாடிகளில்

படர்ந்து உறையும்

பனிப்படலங்களின் மேல்

உன் பெயரை எழுதி அழிக்க

விழித்துக் கிடக்கிறது

என் குழந்தைமை


ஆயிரம் முறை வெட்டுப்பட்டாலும்

வடிவம் பிறழாத பகுவலாய் 

நீள்கிறது என் நேசம்


#வானதி_சந்திரசேகரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.