டொலர் மாற்றம் தொடர்பில் இலங்கையில் கடும் கட்டுப்பாடு!!


 இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு டொலர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அவசர மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமான முறையில் டொலர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அரசாங்கமும், இலங்கை மத்திய வங்கியும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

சுமார் 85 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாரிய வெளிநாட்டு நாணய மாற்று மோசடியொன்று அண்மையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பெயர்களை மாற்றிக்கொண்டு, சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கிவிட்டு, பின் மறைந்துவிடும் 105 உள்ளுர் நிறுவனங்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பொன்றே இந்த மோசடியின் பின்னால் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் எவ்விதப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், போலி மின்னுஞ்சல் மற்றும் தந்தி பரிமாற்றங்களை பயன்படுத்தி டொலர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளமை அம்பலமாகியுள்ளது. இச்செயற்பாடுகளுக்காக சட்டத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நிதி அமைச்சரினால் 2026 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, இறக்குமதியாளர் ஒருவரின் விபரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அவர் இலங்கை சுங்கத்தில் பதிவு செய்யப்படாவிட்டால், டொலர் முற்பணங்களை வழங்குவதற்கு வர்த்தக வங்கிகளுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் இனிமேல் இறக்குமதி சார்ந்த ஒவ்வொரு வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்திற்கும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

இந்தத் தரவுகள் இறக்குமதியாளரின் வரி செலுத்துவோர் அடையாள எண், வங்கி விபரங்கள் மற்றும் முகவரியுடன் உடனடியாக சுங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, போலி இறக்குமதிகள் கண்காணிக்கப்படும். முறையான வர்த்தகங்களைத் தடுக்காமல், வெளியேறும் ஒவ்வொரு டொலருக்கும் நிகரான பொருட்கள் நாட்டிற்குள் வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் புதிய கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதேவேளை, போலி நிறுவனங்களுக்கு உதவிய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களைக் கண்டறிவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுங்கம் ஆகியன இணைந்து கூட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட போலி நிறுவனங்களின் எஞ்சிய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நாணயங்களை உள்நாட்டிற்கு கொண்டு வருவதை ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கி 2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஏற்றுமதி வருமானத்தை நாட்டிற்கு கொண்டு வருதல் தொடர்பான விதிகளையும் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் தங்களின் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான கால அவகாசம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்கையான டொலர் தேவைகள் மற்றும் மோசடிகள் தடுக்கப்பட்டதன் காரணமாக, இலங்கை ரூபாவின் மதிப்பு ஸ்திரமடைந்து வலுவடைந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் இலங்கையின் நிதி நம்பகத்தன்மையை சர்வதேச நாணய நிதியம் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் உயர்த்தியுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த திடீர் கொள்கை மாற்றங்கள் காரணமாக முறையான இறக்குமதியாளர்கள் சுங்கப் பதிவுகளின் போது சில தாமதங்களை எதிர்கொள்வதாகவும், ஏற்றுமதியாளர்களின் நிறுவன நெகிழ்வுத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குறுகிய கால நிர்வாகத் தடைகளை பொருளாதாரம் உள்வாங்க வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.