கனக்கும் கதை!!
சில நாட்களுக்கு முன் முகநூலில் எனக்கு ஒரு தோழி அறிமுகமானார்.
முதலில் ஒரு Friend Request.அதற்குப் பிறகு ஒரு மெசேஜ்.
"உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படிக்கிறேன். சில விஷயங்களை நீங்கள் ரொம்பத் தெளிவாகவும், யாருக்கும் பயப்படாமல் நேராகவும் சொல்கிறீர்கள். அதனால் உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. என்னை நண்பராக ஏற்றுக்கொள்வீர்களா?"
நானும் ஏற்றுக்கொண்டேன்.
சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு மெசேஜ் வந்தது.
"முடிந்தால் எனக்கு ஒரு கால் பண்ண முடியுமா? யாரிடமாவது பேச வேண்டும் போல இருக்கிறது. உங்களிடம் பேசினால் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்."
ஒரு மனிதர் இவ்வளவு நம்பிக்கையோடு பேச வேண்டும் என்று நினைக்கிறார் என்றால், ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்து அவருக்கு கால் பண்ணினேன்.சாதாரணமாகத்தான் பேச்சு ஆரம்பித்தது.
வேலை,குடும்பம்,குழந்தைகள்,வாழ்க்கை... பிறகு அவர் மெதுவாக சொன்னார்.
"கொஞ்ச நாளாக ரொம்ப மன உளைச்சலாக இருக்கிறது. யாரிடமும் பேச முடியவில்லை. பேசினாலும் என்னை ஜட்ஜ் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு."
நானும் வழக்கம்போல ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன்.
"வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்சனைகள் வரும். தைரியமா இருங்க. மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிக்காதீங்க."
பிரச்சனை என்னவென்று தெரியாமலேயே அறிவுரை சொல்ல ஆரம்பித்தது தான் என் தவறு.
பிறகு அவர் தனது மகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
"என் மகள் அடம் பிடித்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினாள். அதற்குப் பிறகு அவளுடைய நடத்தையே மாறிப்போச்சு."
உடனே நான் என் பங்குக்கு ஆலோசனைகளை சொல்ல ஆரம்பித்தேன்.
"Screen Time குறையுங்கள்..."
"Restrictions வையுங்கள்..."
"Internet Usage Monitor பண்ணுங்கள்..."
"தேவையில்லாத Apps-ஐ Remove பண்ணுங்கள்..."
அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
பிறகு ஒரு வரி மட்டும் சொன்னார்.
"அதையெல்லாம் தாண்டிப் போயிடுச்சு."
எனக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
"என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்னை ஒரு நிமிடம் உறைய வைத்தது.
"என் மகள் ஒரு பையனோட வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்."
அந்த ஒரு வாக்கியத்தைக் கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.
"என்னங்க சொல்றீங்க?"
என்று என்னை அறியாமலே வாயிலிருந்து வந்தது.
சில விநாடிகள் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
பிறகு சுதாரித்துக் கொண்டு கேட்டேன்.
"எப்போது நடந்தது?"
"சில வாரங்களுக்கு முன்பு."
"இப்போ மகள் வீட்டுக்கு வந்துட்டாளா?"
"ஆமாம்."
அப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
"எப்படி நடந்தது?"
அவர் சொன்னார்.
"Instagram-ல அறிமுகமான ஒரு பையன். முதலில் பேச ஆரம்பிச்சாங்க. பிறகு நட்பு. அதுக்கப்புறம் ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க."
நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.
பிறகு கேட்டேன்.
"உங்க மகளுக்கு என்ன வயசு?"
அவர் சொன்ன பதில் என்னை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்தது.
"பத்து வயசு முடிஞ்சு மூணு மாதம்தான் ஆகுது."
அந்த ஒரு நிமிடம்...
என்னால் பேச முடியவில்லை.
என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஒரு பத்து வயது குழந்தை.
இன்னும் பொம்மைகளோடு விளையாட வேண்டிய வயது.
அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு ஐந்து நிமிடத்தில் மறந்து ஓடி வந்து கட்டிப்பிடிக்கும் வயது.
உலகம் என்றால் பள்ளியும் வீட்டும்தான் என்று நம்ப வேண்டிய வயது.
அந்த வயதில்...
Instagram-ல் ஆரம்பித்த ஒரு தொடர்பு...
வீட்டை விட்டு வெளியேறும் முடிவு...
இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?
சில நொடிகள் கழித்து கேட்டேன்.
"அந்தப் பையனுக்கு என்ன வயசு?"
"பதினாலு."
அப்போது அந்த அம்மா மெதுவாகச் சொன்னார்.
"பார்த்தீங்களா? உங்களுக்கே பேச முடியல. அதனால்தான் நான் யாரிடமும் இதை சொல்ல முடியல."
அந்த வார்த்தை என்னை உடைத்துவிட்டது.
ஏனென்றால் அந்த அம்மா என்னிடம் தீர்வு கேட்கவில்லை.
அறிவுரை கேட்கவில்லை.
தவறு யாருடையது என்று கேட்கவில்லை.
அவர் தேடியதெல்லாம் ஒரே ஒரு விஷயம்.
"யாராவது என் பிரச்சனையைக் கேட்பீங்களா?"
"என்னை ஜட்ஜ் பண்ணாமல், ஒரு நிமிஷமாவது நான் சொல்லுறதை கேட்பீங்களா?"
அவ்வளவுதான்.
அதற்குப் பிறகு சில நிமிடங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
என்னால் பெரிய தீர்வுகள் எதையும் சொல்ல முடியவில்லை.
சில நேரங்களில் மனிதர்களுக்கு அறிவுரைகள் தேவையில்லை.
ஆறுதல் தான் தேவை.
"நடந்ததை மாற்ற முடியாது. ஆனால் உங்களை நீங்களே குற்றவாளியாக நினைக்காதீங்க."
"உங்கள் மகள் பாதுகாப்பாக வீட்டுக்கு வந்திருக்கிறாள். அதுவே இப்போதைக்கு பெரிய விஷயம்."
"இனிமேல் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். ஆனால் இப்போ முதல்ல நீங்க உங்களை கவனிச்சுக்கணும்."
என்று என்னால் முடிந்த சில வார்த்தைகளை அவரிடம் சொன்னேன்.
அவரும் கொஞ்சம் அமைதியான குரலில் பேசினார்.
"நன்றி. யாரிடமாவது சொல்லணும்னு தோணிச்சு. அதனால்தான் உங்களை தொந்தரவு பண்ணேன்."
என்றார்.
"இதுல தொந்தரவு எதுவும் இல்லை. மனசு பாரமா இருந்தா பேசணும். அதுதான்."
என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.
ஆனால் அவர் வைத்த பாரத்தை மட்டும் என்னால் கீழே வைக்க முடியவில்லை.
பேச்சு முடிந்தது.
ஆனால் அந்த உரையாடல் இன்னும் என் மனதில் முடிவடையவில்லை.
இன்று நம்முடைய குழந்தைகள் வளர்வது நம்முடைய உலகத்தில் இல்லை.
நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு டிஜிட்டல் உலகத்தில்.
அங்கே நண்பர்கள் இருக்கிறார்கள்.
அங்கே அந்நியர்கள் இருக்கிறார்கள்.
அங்கே பாராட்டுகள் இருக்கின்றன.
அங்கே ஏமாற்றங்களும் இருக்கின்றன.
அங்கே ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
பிரச்சனை Phone இல்லை.
Internet இல்லை.
Social Media கூட இல்லை.
பிரச்சனை என்னவென்றால்...
ஒரு குழந்தையின் கையில் முழு உலகத்தையும் கொடுத்து வைத்து, அந்த உலகத்தில் பாதுகாப்பாக நடக்க கற்றுக் கொடுக்காமல் விட்டுவிடுவது.
நாம் குழந்தைகளுக்கு நல்ல பள்ளி தேடுகிறோம்.
நல்ல டியூஷன் தேடுகிறோம்.
நல்ல எதிர்காலம் தேடுகிறோம்.
ஆனால் அவர்கள் மனதில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள தினமும் பத்து நிமிடமாவது செலவிடுகிறோமா?
அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள்?
எதைப் பார்க்கிறார்கள்?
எதை நம்புகிறார்கள்?
எதைப் பயப்படுகிறார்கள்?
எதை மறைக்கிறார்கள்?
என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோமா?
குழந்தைகளுக்கு நாம் வாங்கிக் கொடுக்கும் மிக விலையுயர்ந்த பரிசு ஸ்மார்ட்போன் அல்ல.
நம்முடைய நேரம்.
நம்முடைய கவனம்.
நம்முடைய உரையாடல்.
நம்முடைய இருப்பு.
இந்தப் பதிவை அந்தச் சகோதரியின் ஒப்புதலுடன்தான் எழுதுகிறேன்.
யாரையும் குற்றம் சொல்ல அல்ல.
யாரையும் அவமானப்படுத்த அல்ல.
ஒரு பெற்றோராக, ஒரு மனிதராக, இன்னொரு மனிதரிடம் ஒரு கேள்வியைக் கேட்க மட்டுமே.
நாம் நம் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுக்கிறோமா?
அல்லது அவர்களுடைய குழந்தைப் பருவத்தையே, நம்முடைய கவனக்குறைவால், மெதுவாக இழந்து கொண்டிருக்கிறோமா?
இன்றிரவு உங்கள் குழந்தை தூங்குவதற்கு முன் ஒரு விஷயம் மட்டும் செய்யுங்கள்.
அவர்களுடைய போனைப் பார்க்காதீர்கள்.
அவர்களுடைய கண்களைப் பாருங்கள்.
ஒருவேளை அவர்கள் சொல்லாமல் வைத்திருக்கும் கதைகள் அங்கே இருக்கலாம்.
பகிர்வு

.jpeg
)





கருத்துகள் இல்லை