பிரதான பாதை வழியாக பேராதனைக்கு பயணிக்கும் ரயில் இயந்திரம்!
இலங்கை ரயில்வே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு தருணம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிட்வா பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதையை முழுமையாக மீளமைக்கும் பணிகளுக்காக, ரயில் இயந்திரம் ஒன்று முதல் முறையாக பிரதான பாதை வழியாக பேராதனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அனர்த்தத்தையடுத்து கடுகண்ணாவை மற்றும் கம்பொளை வரையிலான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு அப்பால் ரயில் பாதையை சீரமைப்பதற்காக சேவை ரயில் ஒன்றின் உதவி அவசியமாகியுள்ளது. இதற்குத் தேவையான ரயில் இயந்திரத்தை ரயில் பாதை வழியாக கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை காரணமாக, பிரதான பாதையூடாக எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை ரயில்வே துறைக்குச் சொந்தமான M5C 781 என்ற ரயில் இயந்திரம் நாளை (03) கனரக வாகனத்தின் மூலம் பேராதனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சுமார் 65 முதல் 70 டன் வரை எடையுடைய இந்த இயந்திரத்தை மலைப் பிரதேச சாலைகள் வழியாக எடுத்துச் செல்லும் நடவடிக்கை மிகவும் சவாலானதும், அதிக ஆபத்து நிறைந்ததுமாகக் கருதப்படுகிறது.
இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைய, இலங்கை ரயில்வே துறையின் அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
மலையக ரயில் பாதையை விரைவாக மீளமைத்து வழமையான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் பணியில் இந்த நடவடிக்கை முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#lka #SriLankaNews #Thamilarulnews #TamilNews

.jpeg
)





கருத்துகள் இல்லை