வரலாறு மறையாது!!



உங்களுக்கு #வந்தா #இரத்தம்! எங்களுக்கு வந்தா?


அரசியல்கைதி கணேசன் நிமலரூபன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கடந்த (ஜூலை) 4ஆம் திகதியோடு 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன.


கிராமசேவகர் பரீட்சை, எழுதுவிளைஞர் பரீட்சை, தொழில்நுட்பக் கல்லூரியினூடாக நிமலரூபன் தன் வாழ்க்கையைத் தேடிய  துடிப்பான இளைஞன்.


பயங்கரவாத சாயம் பூசப்பட்டு கொன்று புதைக்கப்பட்டான் என்பதே கசப்பான உண்மை!


2012 ஜூன் 27 வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல்கைதிகளில் ஒருவரான சரவணபவன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புபட்டவரகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தினார்கள். சாதகமான பதில் கிடைக்காத நிலையில் 3 சிறைச்சாலை அதிகாரிகளைப் பணயக்கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டார்கள். 


19 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் பணயக்கைதிகளை மீட்டெடுக்க 2012 ஜூன் 30ஆம் திகதி விசேட அதிரடிப் படையினர் சிறைச்சாலையினுள் புகுந்தனர். 


கொடூரமான தாக்குதல், சித்திரவதையின் பின்னர் மூவரும் மீட்கப்பட, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சிறைக்கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்கள். இலங்கையின் அரச பத்திரிகைகள் இந்தச் சம்பவத்தை, இறுதிப் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான தாக்குதல்/ மீட்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டிருந்தது.


அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள சிறைச்சாலையினுள் அடித்து துவம்சம் செய்யப்பட்ட நிமலரூபன் ஜூலை மாதம் 4ஆம் திகதி சிகிச்சை எதுவும் வழங்கப்படாமல் அநியாயமாக உயிரிழக்கிறான்.


சடலத்தைக் கூட சுமார் 20 நாட்கள் நீதிமன்ற வாசலெல்லாம் அலையவைத்தே  ஜூலை 23ஆம் திகதி கொடுத்தார்கள். உடல் கிடைக்கப்பெற்றவுடன் இனி இறுதிக் கிரியையாவது நிம்மதியாக செய்யலாம் என எண்ணியிருந்த பெற்றோரையும், உறவினர்களையும் சுற்றத்தாரையும் அரச பயங்கரவாதம் விடவில்லை. உடல் வவுனியா, நெளுக்குளம் கொண்டுவருவதற்கு முன்னரே பொலிஸார், இராணுவத்தினர் நிமலரூபனின் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இறுதிக்கிரியைகள் தொடர்பாக எவருக்கும் தெரிவிக்கக்கூடாது.சத்தமிட்டு அழக்கூடாது  என அளவற்ற நிபந்தனைகள்!


அவர்களைப் பார்த்து தாயார் இராஜேஷ்வரி ஆக்ரோஷமாகப் பேசினார்.


“பிள்ள வெளிய வந்துரும். கல்யாணத்த பண்ணி வைக்கலாமுனு இருந்தன். ஆனா இப்படி நடந்துருச்சே… உங்கள அடித்துக்கொல்லச் சொல்லி எந்தச் சட்டத்தில இருக்கு? எத்தனையாவது சட்டத்தில இருக்கு? என்ட பிள்ளைய கொன்றிருக்காங்க. நீங்க யாராயிருந்தாலும் பரவாயில்ல. என்ன வந்து சுட்டுப்போட்டு போகலாம். நான் பயப்படமாட்டன். ஒரு மனுஷனுக்கு நீதி, நியாயம், உண்மைதான் தேவை. மிருகங்கள்… நீதியில்லாம.. என்ட வயிறு எரியிறமாதிரி உங்கட வயிறு எரியும். இந்தக் கிழவன் உழைச்சிதான் மகன வளர்த்தார். கொலை செய்து, கொள்ளையடித்து என்ட மகன நான் வளர்கல. நன்மையில்ல, தீம… என்ன சுடு பயமில்ல… மற்றவன்ட நெஞ்சில குண்டு பாயிற மாதிரி என்ட நெஞ்சிலயும் குண்டு பாயலாம்… மற்றவனுக்கு நோகுற மாதிரி எனக்கும் நோகலாம்… 12 வருஷம் தவமிருந்து பெற்ற என் பிள்ளை… ஆசையா என் பிள்ளைய வளர்த்தன். குற்றம் செய்திருந்தால் தண்டனை கொடுத்திருக்கனும். கொலைசெய்யனும்னு எந்த சட்டத்தில இருக்கு? எங்க இருக்கு? ஒழிச்சி வச்சி என்ட மகன கொலை செய்திருக்கினம். ஆயிரக்கணக்குல துவக்கோடு என்ட வீட்ட சுத்தி இருக்கினம். எங்கிட்ட ஒன்னுமே இல்ல. முடிஞ்சா வா… எனக்கு முன்னாடி என் மகன கொலை செய்திருக்கனும், அப்ப தெரிஞ்சிருக்கும் நான் யார் என்டு.”


அந்த சாபம் எங்கோ விதைக்கப் பட்டுத்தான் இருக்கிறது.அது பெருவிருட்சமாகித் தானா இன்றைய இந்த அவலங்கள்?


சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதால் நிமலரூபனின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அவரது தரப்பு  சட்டத்தரணி தெரிவித்தார். அதற்கு நீதியரசர்,


 “சிறை முற்றுகையிலிருந்து அதிகாரிகளைக் காப்பாற்ற பாலர் பாடசாலை சிறுவர்களை அனுப்பவில்லை. காயங்கள் ஏற்படுவது வழமை.”என்று கடும்போக்காக பதிலளித்தார்.


இன்றும் அதே பதில் தானா நீதியரசரே?


பணயக்கைதிகளாக இருக்கும் அதிகாரிகளை மீட்க ஒரு சில நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே நிமலரூபனும் ஒரு இதயநோயாளி. மீட்பு நடவடிக்கையின்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்.”


இப்படி ஒரு சோடிக்கப்பட்ட தீர்ப்பை சொல்லி விஷயத்தை முடிக்கிறார்கள்.


மகனின் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் பல இருப்பதைக் கண்டேன். தலையிலிருந்து, நெஞ்சிலிருந்து இரத்தம் வடிந்திருந்தது. கால், கைகள் உடைக்கப்பட்டிருந்தன. கால்கள் இரண்டும் கட்டப்பட்டு இருந்தன. மகனின் உடலிலிருந்து நாற்றம் வந்தது. உடம்பில் ஒரு துணிக்கூட இருக்கவில்லை.”

பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னர் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மகனின் உடலை பார்த்த பின் வயதான தந்தை தெரிவித்த கருத்து இது.


 சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மகனுக்கு நீதி வழங்குமாறு உயர்நீதிமன்ற வாசல்படியேறிய தந்தை கணேசனை, 


“பிள்ளையை வளர்க்கத் தெரியாதவர்” என்றார் நீதியரசர்.


இப்படித்தான் தமிழனின் பல வழக்குகள் தீர்ப்பிடப்பட்டன. ஆனாலும், காலம் சக்கரம் போன்றது.அது அதன் சுழற்சியில் கர்மாவின் பயனை அதே குலத்தின் அடுத்த சந்ததிக்கு கொடுத்துச் சென்றுள்ளது.


இன்று சபிக்கும் தாய்க்கும் நிமலரூபனின் தாய்க்கும் ஒரே வித்தியாசம் தான் !அவள் தமிழ் என்பதால் பிள்ளையைப் பறிகொடுத்தவள்! இவள் சமூகத்தின் பெரும்பீடையைப் பறி கொடுத்தவள். 


இருப்பினும் உயிர்வலி அனைவருக்கும் சமமானதே! இப்போதாவது புரிந்திருக்கும் முறுகல்கள், முரண்பாடுகள் இனம்சார்ந்தவை அல்ல!

அவை எண்ணம் சார்ந்தவை!


ஒழுக்கமற்ற குணத்தால் உங்கள் இனத்தாலேயே இதைக் கலவர மாதமாக்கி அழுகோலம் பூண்டீர்களே! இதா கெளதமன் சொல்லித் தந்த அதி உத்தமாச்சார்ய நீதி?


கேவலமான போதையால் இன்னும் என்னென்ன செய்து நாட்டை ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி போல இறங்கினாலே வழிப்பறி, விபச்சாரம் என்று ஆக்கத்தான் போகிறார்கள் போல!


அருமை சகோதர மொழித் தம்பி ஒருத்தன் வெள்ளவத்தை கடற்கரையில் நினைவேந்தலுக்கு போனவர்களை கண்டபடி கேட்டு தனது பின்புறத்தை வேறு காட்டினான். 


நீயே கண்ணாடியில பார்த்துக் கொள்ளு ராசா ! உன் இனம் படும் பாட்டை😁


மோ.கோகுலன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.