ஒரு தாயின் தேடல்!!
மகனின் டாக்டர் கனவு.. வெள்ளை வான் கடத்தலில் முடிந்த சோகம்
"வைத்தியராக வர வேண்டும் என்பதே என் மகனின் வாழ்நாள் கனவு. அதற்காக இரவு பகலாக படித்தான். உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் முடிந்திருந்தன. மறுநாள் விமானத்தில் புறப்பட இருந்த என் மகன், அதற்கு முந்தைய இரவே கடத்தப்பட்டான். அந்த ஒரு இரவில் என் குடும்பத்தின் வாழ்க்கையே தலைகீழாக மாறி விட்டது," என காணாமல் ஆக்கப்பட்ட ராஜீவ் நாகநந்தனின் தாய் சரோஜினி நாகநந்தன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற 11 இளைஞர்கள் கடத்தல் சம்பவத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவரான ராஜீவ் நாகநந்தன், கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்வி கற்றார்.
வைத்தியராக வேண்டும் என்ற இலட்சியத்துடன், உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்லத் தயாராகி இருந்த நிலையில், 2008 செப்டம்பர் 17ஆம் திகதி அவர் கடத்தப்பட்டார்.
அன்று இரவு, மகனின் வெளிநாட்டுப் பயணத்தை முன்னிட்டு வீட்டில் நண்பர்களுக்காக பிரியாவிடை விருந்து நடைபெற்றதாக சரோஜினி நாகநந்தன் கூறினார்.
"விருந்து முடிந்ததும், ராஜீவ் நண்பர்களுடன் காரில் வெளியே சென்றான். சிறிது நேரத்தில் அவன் என்னைத் தொலைபேசியில் அழைத்தான். 'அம்மா... சிலர் எங்களை வழி மறித்து நிறுத்தியிருக்கிறார்கள்' என்று மட்டும் சொன்னான். நான் பதறிப் போய் மீண்டும் மீண்டும் அழைத்தேன். ஆனால் அவனது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது." என்று அவர் வேதனையுடன் நினைவு கூர்ந்தார்.
மறுநாளே பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், மகனை உயிருடன் கண்டு பிடித்துத் தருமாறு எல்லா இடங்களிலும் கெஞ்சியதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஒவ்வொரு கதவையும் தட்டினோம். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சென்றோம். யாராவது எங்கள் மகனை காப்பாற்றுவார்கள் என்று நம்பினோம். ஆனால் எங்களுக்கு கிடைத்தவை வாக்குறுதிகள் மட்டுமே," என்று அவர் கூறினார்.
கடத்தப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிய பின்னர், 2009 டிசம்பர் 14 ஆம் திக்தி எதிர்பாராத விதமாக ராஜீவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக சரோஜினி நாகநந்தன் தெரிவித்தார்.
"அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை அறிந்த அந்த சில நிமிடங்கள், எங்கள் குடும்பத்துக்கு மீண்டும் உயிர் கிடைத்தது போல இருந்தது. எவ்வாறு பிடித்துச் சென்றார்கள்? என்பதையும், முதலில் வெலிசரவில் தடுத்து வைத்து பின்னர் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமுக்கு மாற்றியதாகவும் அவன் கூறினான். அந்த தகவல்களை உடனடியாக பொலிஸாரிடம் தெரிவித்தோம். இப்போதாவது வனை காப்பாற்றி விடுவார்கள்' என்று நம்பினோம். ஆனால் அந்த நம்பிக்கையும் உடைந்து போனது. அதன் பிறகு என் மகனின் குரலை நான் மீண்டும் ஒரு போதும் கேட்கவில்லை," என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
அதன் பின்னர், குடும்ப நண்பரான முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் உதவியுடன், அப்போதைய கடற்படைத் தளபதியின் பிரத்தியேக செயலாளரான ஷெமல் பெர்னாண்டோவை சந்தித்து, ராஜீவின் அடையாள அட்டையையும், அவன் கூறிய தகவல்களையும் வழங்கியதாகவும் கூறினார்.
"விசாரணை நடத்தப்படும் என்று எங்களுக்கு உறுதி அளித்தார்கள். பின்னர் போர்க் கால சூழ்நிலை காரணமாக நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பின்னர் இந்த விவகாரத்தைப் பார்ப்பதாகவும் கூறினார்கள். ஆனால் ஆண்டுகள் கடந்து விட்டன. என் மகன் மட்டும் திரும்பி வரவில்லை," என்றார்.
"ஒரு தாயாக நான் தினமும் கதவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு நாள் என் மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையை இன்னும் முழுமையாக இழக்கவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு கிடைத்தது காத்திருப்பும் கண்ணீரும் மட்டுமே. என் மகனுக்கு என்ன நடந்தது? என்பதை அறிந்து கொள்ளும் உரிமையாவது எங்களுக்கு கிடைக்க வேண்டும்," என்று சரோஜினி நாகநந்தன் உருக்கமாக தெரிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை