வாசிப்பை நேசிப்போம்!!

 



வாசிப்பு போன்ற செயல்பாடுகளில் அதிலும்  புத்தகங்களின் வழியே வாசிப்பு எப்படியான   உன்னதமான  மனிதச் செயல்பாடு என்பதைக் காலையில் ஒரு கட்டுரையில் வாசித்துக்கொண்டிருந்தேன். 


எந்தவொரு புத்தகத்தையும் ஒவ்வொரு முறையும் திறப்பதும் வாசிப்பதும் உங்கள் மூளையின் செயல்மிகுத்  திறனை இன்னும் கூட்டுகிறது என்கிறது அக்கட்டுரை. கட்டுரை எடுத்துரைக்கும் முக்கியமான செய்தி, நீங்கள் காட்சிப் பதிவுகளைப் பார்ப்பதற்கும் புத்தகங்களை வாசிப்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை அடிப்படையில் மூளை உணர்ந்துள்ளது என்பதுதான். 


சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய காட்சிப் பதிவுகளை மனிதர்களின் மூளையால் எளிதாகவே செரித்துக்கொள்ள இயலும். ஆனால் புத்தகங்கள் வழியான வாசிப்பு வழியே உருவாகும் காட்சிகள், முகங்கள், சூழல்கள் போன்றவற்றை உருவாக்க மூளையின் அடிப்படைக் கட்டமைப்பில் திறன்கள் உள்ளனவா என்பது இன்னும் ஆய்வுக்குரியது. எனவே மேலே சொன்ன புத்தக வாசிப்பு சார்ந்த விவகாரங்களை உங்களுக்கு உருவாக்கித் தர மூளைத் தன்னை மீண்டும் மறுகட்டமைப்பு செய்திட வேண்டும். இச்செயல் மூளையின் மறுகட்டமைப்பு மட்டுமின்றி, ஒருவகையில் உங்கள் வாழ்வின் மறுகட்டமைப்பு.


எந்தவொரு புத்தக வாசிப்பும் மூளையை மறுவடிவமைக்கிறது. புத்தகம் படிக்கும்போது நினைவாற்றல் வலுவடைகிறது; ஆழ்மனதிலுள்ள உணர்வுகள் மேம்படுகின்றன; நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது; கவனம் இன்னும் கூர்மையடைகிறது; புதிய புதிய  நரம்பியல் இணைப்புகள் மூளையில் உருவாகின்றன.


புத்தக வாசிப்பு மூளைக்கான கடுமையான உடற்பயிற்சி. ஏனெனில் அது காட்சிகளை உருவாக்கும் மூளையின் முக்கியப் பகுதியான கார்டெக்ஸைத் தீவிரமாகப் பயிற்றுவிக்கிறது. இதனால் அதிகம் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களால்  சிக்கலான காட்சித் தகவல்களையும் புதிய முகங்களையும் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களை விடச் சிறப்பாக அடையாளம் கண்டுகொள்ள இயலும்.


புத்தக வாசிப்பு உள்ளவர்களுக்கு நினைவாற்றலும், நீண்ட நேரம் கவனம் செலுத்தும் திறனும் நீண்டு, இயல்பான விமர்சனச் சிந்தனையும் நிர்வாகப் பகுத்தறிவும், பேசும் மொழியை வேகமாகப் புரிந்துகொள்ளும் திறனும் மேம்படுகிறது. ஏற்கனவே கூறியவாறு, நுட்பமான புத்தகங்களைப் படிக்கும்போது மூளையின் நெகிழ்வுத்தன்மை உயர்ந்து தானியங்கியாகி, அதனூடாக உயர்நிலைப் பகுத்தறிவு வளர்கிறது.


அச்சுப் புத்தகங்கள் மற்றும் எண்மம்( டிஜிட்டல்) திரை உருட்டல் வாசிப்பு ஆகிய இரண்டிற்கும் மிகப்பெரிய மாறுபாடுகள் உண்டு. புத்தகங்களை வாசிக்கும்போது மூளை அதைத் தீவிரமான செயல்பாடு என்று கருதி அதிக முயற்சி எடுக்கிறது. பல அமைப்புகளை ஒரே நேரத்தில் ஈடுபடுத்தவும் மூளை முயல்கிறது. ஆனால் சமூக ஊடகங்கள் மற்றும் குறுகிய இணைய  உரைகள், செய்திகள் போன்றவற்றை வாசிக்கும்போது மூளை ஆழமற்ற செயலாக்கத்தையே உருவாக்குகிறது.


அதனால் புத்தகத்தில் மூழ்கி நேரம் செலவிடுவது வெறும் இவ்வுலகிலிருந்து  தப்பித்தல் அல்ல;  அதுவொரு மூளையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த பயிற்சி. அதனால் புத்தகங்களுடன் நேரத்தை அதிகம்  செலவிடுவதும் உண்மையில் நமது உடலுக்கும் மனதிற்கும் நாம் தினமும் செய்யும் இன்னொரு உடற்பயிற்சியே.


உங்கள் மூளையின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் தொடர்ந்து புத்தகங்களைத் தேடித்தேடிச் சென்றடையுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.