பட்டம் விடுவோருக்கான அறிவுறுத்தல்!!

 



விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


தற்போது நிலவும் பட்டம் விடும் பருவகாலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டம் விடுவது கணிசமாக அதிகரித்துள்ளது.

உலகளவில் இடம்பெறும் விமான விபத்துகளுக்கு, ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் விடுவது ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடி இடையூறாகவும் அமைகிறது.

இலங்கையின் கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களைச் சூழவுள்ள வான்பரப்பில் இவ்வாறு அதிகளவில் பட்டம் விடப்படுவது தற்போது பெரும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது.

விமானத்தின் எஞ்சினுக்குள்ளோ அல்லது அதன் முக்கிய செயல்பாட்டு அமைப்புகளுக்குள்ளோ பட்டத்தின் நூல்களோ அல்லது பட்டத்தின் பாகங்களோ சிக்கிக்கொண்டால், ஒட்டுமொத்த விமானமும் விபத்துக்குள்ளாகும் நேரடி ஆபத்து உள்ளது.

இதன்மூலம் பாரிய உயிர்ச்சேதங்களும் சொத்துச்சேதங்களும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும்.

எனவே, வான்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், இத்தகைய வான் பாதுகாப்பு வலயங்களுக்குள் பட்டம் விடுவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.