வீர வரலாறு!!


 ஆற்ற முடியாத ஒரு வலி என்னை வதைத்து கொண்டிருக்கிறது. இனம் தெரியாத ஒரு வெற்றிடம் மனம் முழுவதும் நிறைந்து வழிகிறது. 


கண்ணீர் விட்டு கதறி அழ  வேண்டும் போல இருக்கிறது. 


எங்கு சென்று 

எவரிடம் எதனை என்று கூறி 

எவ்வாறு அழுது ஆறுவது!


உள்ளத்தில் அலை மோதும் எண்ணங்களை எவ்வாறு என்று மொழிபெயர்ப்பது!


கடிகார முட்கள் போல நானும் அவனும் பழகிய நாட்களை சுற்றி சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறது எனது நினைவுகள்.


எவ்வளவு ஆனந்தமான 

நாட்கள் அவை.


இவன் எனது நண்பன். 


*மேஜர் கமல்* என்ற பெயர் அவனுக்கு வருவதற்கு முன்னர் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவன் எனது நண்பன். 


இவனது விடுதலை வேட்கை, இவன் ஆற்றிய வீர சாகசங்கள் பற்றி இன்னொரு இடத்தில் விபரமாக நிட்சயம் எழுதுவேன்.


இப்போது நான் கூற விரும்புவது எனது பள்ளித்தோழன் அச்சன் பற்றி…

 

இவனது முழுப்பெயர் துரைரத்தினம் வண்டலூர் பரமேஸ்வரராஜா. 


பரமேஸ்வரராஜாவின் தந்தை துரைரத்தினம் அவர்கள்  பருத்திநகரின் பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தவர். 


வண்டலூரில் அமைந்த ஒரு திருத்தலத்தில் வேண்டி இவன் பிறந்ததனால் அவனது பெயரில் வண்டலூர் என்ற பெயரை சேர்த்து கொண்டதாக அவன் கூறிய நினைவு உண்டு. 


இவனை வீட்டில் அச்சன் அன்று செல்லமாக அழைப்பார்கள். 


நானும் அவனை அவ்வாறே அழைப்பேன்.

 

பரமேஸ்வரராஜா ஹாட்லி  கல்லூரியில் எமது வகுப்பில் ஆறாம் வகுப்பு தொடக்கம் எமது கல்வி பொது உயர்தர வகுப்பு வரை பயின்று வந்தவன். 


இவனை நான் அதிகம் அறிந்தது , இவனுடன் அதிகம் பழகியது,  நல்ல நட்பு மலர்ந்தது 1979- 1982 காலப்பகுதிக்குள் தான்.

 

இவனும் நானும் உயர்தர வகுப்பில் வணிகத்துறையில் ஒன்றாக பயின்று வந்தோம். 


இவன், நான், நாம் பறிகொடுத்த இன்னொரு நண்பன் குமரகுருபரன் (குரு ) பின் வரிசையில் அமர்வது வழக்கம். 


எங்கள் மூவரின் நட்பும் பரஸ்பரம் வளர்ந்து கொண்டே போனது.

 

அந்த நாட்களில் பள்ளி நண்பர்கள் வீடு வரை சென்று குடும்ப நண்பர்களாக இருப்பது என்பது மிக மிக குறைவு. 


நாங்கள் மூவரும் வீடுவரை  சென்று பழகும் அளவுக்கு எமது நட்பு வளர்ந்திருந்தது.

 

பரமேஸ்வரராஜாவுடன் பழகிய நினைவுகள் இன்னும் எனது நெஞ்சில் பதிந்து போயிருக்கிறது. 


அவனது குடும்பத்தவர்கள் தாய் தந்தை அண்ணன்கள், அக்கா, தங்கை, உறவினர்கள், நண்பர்கள் பற்றி அவனது வாய்மொழி மூலமாக அறிந்த விபரணங்கள் கல் மேல் எழுதிய எழுத்துக்களாக இன்று வரை நினைவுகளில் நிழலாடுகின்றன.

 

வார்த்து வைத்த கரும்சிலை போன்ற அவனது கம்பீரமான தோற்றம், அழகான கண்கள், வசீகரமான முகம், தேனிலும் இனிமையான பேச்சு, இளகிய மனம் என்பன பழகிய எவரையும் எளிதாக அவன் பால்  ஈர்த்து விடும்.....

 

வாழ்வு தொடர்பாக எத்தனை எத்தனை கனாக்களை அவனது மனதில் வைத்திருந்தான். 


தனது காதலை எனக்கு வரி வரியாக விபரித்து இருக்கிறான். 


அந்த காதலை எந்தளவிற்கு உயிராய் காதலித்து கொண்டிருந்தான் என்று அறிய வைத்திருக்கிறான்.   


வாழ்வை அவன் நேசித்த அழகு அஜந்தா ஓவியம் போன்று அற்புதமானது.


கால்லூரி எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்கும் பக்குவத்தை நாம் அடையாத அந்த நாட்களில்  (1979 -82 காலப்பகுதிகளில்) அவன் விபரித்த எதிர்கால திட்டடங்கள் எனக்கு அவன் மேல் ஓர் அபிமானத்துடன் கூடிய ஆழ்ந்த நட்பினை ஏற்படுத்தி இருந்தது. 

 

கல்வியை நிறைவு செய்ததன் பின்னர் திருமலையில் ஓர் உல்லாச விடுதியை அமைக்க வேண்டும், கடல் கடந்து நாடு நகரங்களை சுற்றி பார்க்க வேண்டும், இன்னும் எங்கள் நட்பினை அடுத்த படிக்கு நகர்த்தி சென்று உறவுகளை உருவாக்கி கொள்வது என்று நூறு நூறு திட்டங்கள். எல்லாம் இன்று வெறும் கனாக்களாக பழம்  கதையாக மாறி நெஞ்சத்தை கூர்வாள் கொண்டு பிளக்கின்றது.


நாங்கள் எங்கள் வகுப்பு நண்பர்களாக பல கேளிக்கைகள் திருவிழாக்கள் என்பனவற்றிற்கு ஒன்றாக செல்வது வழக்கம். சன்னதி முருகன் தேர், வல்வெட்டித்துத்துறை அம்மன் சப்பறம்,  வல்லிபுர ஆழ்வார் தீர்த்த திருவிழா.

 

மேலும் வகுப்புக்களுக்கு மட்டம் அடித்து விட்டு யாழ் நகருக்கு சென்று திரைப்படங்கள் பார்க்க போன நினைவுகள்  இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. 


அந்த நாட்களில் தமிழ் திரையுலகிற்கு வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்த காலம். 


குறிப்பாக *பாலைவனச்சோலை, அழியாத கோலங்கள்* போன்ற திரைப்படங்களை ஒன்றாக பார்த்திருக்கிறோம். 


இவற்றில் எல்லாம் நடுநாயகமாக இருந்து எமது நண்பர்களை ஒருங்கிணைப்பது எமது நண்பன் அச்சன் தான்.

 

 அவ்வாறு எம்முடன் ஒன்றாக இருந்தவர்களில் வசந்தராஜ், சுதா, ஆனந்தன், அருந்தவமூர்த்தி போன்றவர்கள் இன்னும் எம்முடன் எமது தொடர்பில் இருப்பது மனதிற்கு சற்று ஆறுதல் தருகிறது.

 

இவன் பற்றி ஒவ்வொன்றாக சொல்லி கொண்டிருப்பதானால் நான் நீண்ட ஒரு நூலை எழுத  வேண்டி இருக்கும்.

 

1982 ஆம் ஆண்டு எமது உயர்தர பரீட்சை எழுதிய பின்னர் எமது வகுப்பு நண்பர்களுக்கு எனது வீட்டில் (துரையன்  வளவில்) ஓர் பிரியாவிடை ஒன்றுகூடல் ஒழுங்கு செய்திருந்தேன். எங்கள்  நண்பர்கள் வசந்தராஜ், சுதா கூட வந்திருந்தார்கள். 


இனிமையான அந்த ஒன்றுகூடலில் அச்சன் பாடிய 'மயக்கமா கலக்கமா’ என்ற வரியில் ஆரம்பிக்கும் பாடல் எனது மனதில் எப்போதும் எதிரொலித்து கொண்டே இருக்கிறது. 


இந்த பாடலை கேட்கும் நேரங்களில் கண்களால் வழியும் கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை..


இந்த மரணம் உன்னையும் என்னையும் நிரந்தரமாக பிரித்து விடவில்லை. மனதின் ஒரு மூலையில் எப்போதும் உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறேன். 


*அன்பு நிறைந்த நண்பா*!


உன்னுடன் பேசுவதற்கு மனம் நிறைய நிறைய விடயங்களை சேர்த்து வைத்திருக்கிறேன். காலம் உன்னிடம் என்னை அழைத்து வரும். அன்று நானும் நீயும் ஆற அமர  இருந்து பேச தவறிய விடயங்களை மனம் விட்டு பேசலாம். 


அப்போது சொல்கிறேன்;

உனது பிரிவு என்னை எவ்வாறு உடைத்து சுக்கு நூறாக்கியது என்று...


அப்போது சொல்கிறேன்;

இருள் சூழ்ந்திருக்கும் பகல் சுமக்கும் இந்த புலம்பெயர் மண்ணில் உன்னை எண்ணி நான் எவ்வாறு உருகினேன் என்று....


அப்போது சொல்கிறேன்;

அடக்க முடியாமல் வெடித்து சிதறிய எனது விம்மல் ஒலிகள் இங்கு வரும் இரவுகளில் எவ்வாறு கரைந்து போனது என்று...


அது வரை அமைதியாக உறங்குவாயாக என் அன்பு நண்பா...


(நண்பனின் நினைவாக சில வருடங்களுக்கு முன்னர்  நான் இட்ட பதிவு)

++++++++++++++++++++++

1987 யூலை - 5 நண்பன் தன்னுயிரைத் தான் நேசித்த மக்களுக்காக தந்த நாள்.

++++++++++++++++++++


நடா சுப்பிரமணியம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.