மொழி வளம்!!

 


இலங்கைத் தமிழுக்கும் -  இந்தியத் தமிழுக்குமிடையில், குறிப்பிடத்தக்க சில வித்தியாசங்கள் உள்ளன. அந்த வகையில், இலங்கை தமிழ் ஊடகங்கள் பயன்படுத்தும் பல சொற்கள் தனித்துவமானவை.


ஆனால், அண்மைக்காலமாக இந்தியத் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்தும் சொற்களை, இலங்கை ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


இணையங்களில் வரும் ஆங்கிலச் செய்திகளை, கூகுள் மூலம் தமிழில் மொழிபெயர்க்கும் போது, அவை - இந்திய சொற்கள் சார்ந்தே மொழிபெயர்க்கப்படுகின்றன. 


ஆனாலும், அவற்றில் இலங்கை ஊடக மரபுக்கு ஏற்றால் போல் - மாற்றங்களைச் செய்யாமல், பல ஊடகங்கள் - அப்படியே மொழிபெயர்ப்புகளை வெளியிடுகின்றன. 


எடுத்துக்காட்டாக, இந்தியத் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்தும் சொற்களுக்கு மாற்றீடான இலங்கை சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்;


● மருத்துவமனை - வைத்தியசாலை

● அமல் - அமுல் 

● மருத்துவர் - வைத்தியர் 

● கனமழை - அதிக மழை 

● ஆய்வாளர் - பரிசோதகர் 

● ஓட்டுநர் - சாரதி என, இந்த சொற்களின் பட்டியல் நீளமானது.


இதேபோன்று, ஆங்கிலச் சொற்களையும் இந்தியத் தமிழ்  உச்சரிப்புக்கேற்ப - இலங்கை ஊடகங்களும் எழுதி வருகின்றன.


எடுத்துக்காட்டாக, இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலச் சொற்கள் உச்சரிக்கப்படும் வித்தியாசத்தை கீழே காணலாம்.


● நவம்பர் - நொவம்பர் 

● ஆகஸ்ட் - ஓகஸ்ட்

● ஆரஞ்சு - ஒரென்ஜ் 

● ஆப்பரேஷன் - ஒபரேஷன் என, பல்வேறு சொற்கள் உள்ளன.


இலங்கையில் தமிழ் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, அவற்றுக்குரிய பிரதம ஆசிரியர்களும் பொறுப்பாளர்களும் - இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள். 


இலங்கையின் மூத்த பத்திரிகையான வீரகேசரியின் ஸ்தாபகரும் அதன் பிரதம ஆசிரியருமான பெரி. சுப்பிரமணிய செட்டியார் கூட, இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவர்கள் செய்திகளை எழுதும்போது, ஆங்கிலச் சொற்களை - இந்திய உச்சரிப்பிலேயே தமிழில் எழுதினர். அது, இன்று வரை தொடர்கிறது. 


ஆனால் தமிழ் சொற்களை எழுதும் போது, இலங்கையில் - வழக்கிலுள்ள சொற்களையே பயன்படுத்தினார்கள்.


 அதாவது, இலங்கைத் தமிழ் பத்திரிகைகளின் - பிரதம ஆசிரியர்களாக இந்தியர்கள் பணியாற்றிய காலங்களில் கூட, இலங்கைக்குரிய சொற்களையே செய்திகளில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆனால் இப்போது google மொழிபெயர்ப்பை அதிகம் சார்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள், தமிழில் செய்திகளை எழுதும்போது, இந்திய தமிழ் சொற்களையே இலங்கையிலும் பயன்படுத்தி வருகின்றார்கள்.


இந்த நிலைமையானது, ஊடகத்துறையில் இலங்கைக்குரிய தனித்துவத்தை இல்லாமல் செய்து விடக் கூடிய - ஓர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.


#india #srilanka #language #tamil #media #ulmabrook

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.