இருட்டில் தொலைந்தவர்கள்!
கந்தக மணத்தைக்
காவிய
சாம்பல் புகை
சுவாசமாகியிருந்த
போர் நாளொன்றில்
கைவிடப்பட்டிருந்த அவனை -
அவள் கண்டாள்
முகட்டைப்
பிளந்து தளத்தில்
மோதிச்
சிதறிய விமானக் குண்டு
விட்டுச் சென்ற
இரண்டு சுவர்களுக்குள்
நிகழ்ந்து கொண்டிருந்தன
அறுவைகள்
அறுத்தகற்றப்பட்ட
விரல்களும்
கால்களும்
கைகளும்
குடல்களும்
கைவிடப்பட்ட
அவனைப் போலவே
ஆங்காங்கே
கிடந்தன
காயத்தின் வகைக்கேற்ப
பிரித்தபொழுது
இனித்தப்ப முடியாதவனான
அவன்
சிதிலமடைந்த சுவரொன்றின்
ஓரத்தில் கிடத்தப்பட்டிருந்தான்
கைக்குண்டொன்றின்
வெடிப்பாக இருக்கலாம்
இரும்புத்துண்டுகள்
இடதுபக்க
முதுகினூடே புகுந்து
முன்பறமாகவும்
கமக்கட்டினூடாகவும்
வெளியேறியிருந்தன.
மூச்சை இழுக்கும் போதும்
இழக்கும் போதும்
இரத்தம்
சுற்றிக்கட்டிய பழைய
துணிப்பேழைத்
துவாரங்களுள்
புதிய மழையை
நிலமுறிஞ்சும்
குமிழிகளாய்
வெதும்பின.
அவனருகில் அமர்ந்தவள்
தலையைத் தூக்கித் தன்
மடியில் கிடத்தினாள்
குழந்தையொன்றின் சிறு
அணுங்கலைத் தவிர
அவனிடமிருந்து எதுவுமில்லை
சிதிலமடைந்த அக்கட்டிடத்தின்
கடைநிலைச் சிப்பந்தியா அவள்?
வைத்தியர்களையும் தாதியர்களையும்
இன்னோரன்ன மனிதர்களையும்
அழைக்கும் குரல்களுக்கிடையில்
அவளின் பெயர்
அழைக்கப்படவேயில்லை
கிழிந்து தொங்கும்
தனதுடையின்
நனைந்திருந்த ஈரத்தைப்
பிழிந்த பின்
அத்துணியால் அவன்
உதடுகளை ஈரப்படுத்தினாள்
ஏதோவோர் மலர்ச்சியை
அவன் முகத்திலெங்கோ
அவள் கண்டுகொண்டாள்...
இனிச்சாவதில்
அர்த்தமிருப்பதாய்
அவனுக்குப் பட்டிருக்கலாம்
அம்முறை உயர்ந்த நெஞ்சு
அடங்கியது -பின்
உயரவுமில்லை
அடங்கவுமில்லை
இறுதியாக ஒருமுறை
அவனின் உதடுகளை
அவள்தன்
உதடுகளால்
ஈரப்படுத்தினாள்
இறுதியாக
ஒரேயொருமுறை...
‘‘இந்த முத்தம் உனக்கானதல்ல
என்பதை
உணர்வாய் மாவீரனே!
எங்கோ இக்களத்தில்
காயப்பட்டு வீழ்ந்து
காணாமல் போய்விட்ட
என் துணையைக் கண்டுசொல்
காய்ந்தலர்ந்த
அவன் உதடுகளை
நான்
இறுதியில்
முத்தமிட்டேன் என்று‘‘
அதற்குப் பிறகும்
அவளை யாரும்
தேடவில்லை...
மாயன்
18.08.2026

.jpeg
)





கருத்துகள் இல்லை