சின்ன சின்ன ஆசை. - திரைப்பார்வை!!
காசிக்கு சுற்றுலா வந்து, வந்த இடத்தில் சுற்றுலாக் குழுவினரோடு ஒன்றமுடியாமல் தாமாகவே குழுவிலிருந்து தொலைந்து யாருடைய தொந்தரவும் இன்றி இந்த ஒரு நாள் காசியை சுற்றிப் பார்க்க முடிவெடுக்கிறார் ஐம்பத்தியிரண்டு வயதான லீலா. துரதிர்ஷ்டவசமாக அவரது பணப்பையும் அலைபேசியும் திருடுபோய்விடுகிறது. மொழி தெரியாத இடத்தில் இப்போது மீண்டும் சுற்றுலாக் குழுவினரோடு சென்றுசேர வழியும் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் லீலாவை மாதவன் மாஸ்டர் சந்திக்கிறார். லீலாவின் குழுவினரோடு சேர்த்துவைக்க உதவிசெய்ய முன்வருகிறார். இதற்கடுத்து அந்த ஒருநாள் முழுக்க அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடலும், புரிதலும், பகிர்தலும் வழியாக உண்மையில் லீலா என்பவள் யார் எனத் தெரிந்து கொள்கிறோம்.
லீலா போன்ற பெண்கள் இருக்கிறார்கள். வாழ்வில் ஒருமுறை கூட காதலிக்கப்படாத பெண்கள். யாருடைய வாழ்விலும் முக்கியமானவராக இல்லாத பெண்கள், அன்பின் அருமை புரியாதோர்க்கே அதனை வாரி வாரித் தந்த பெண்கள், எதற்கிந்த வாழ்வென்றே தெரியாமல் வாழ்ந்துமுடித்து திகைத்து நிற்கும் பெண்கள். தனக்குப் பிடித்தமாதிரி வாழ்வை ஒரேயொரு நாள் வாழ்ந்துவிடுவதற்குக் கூட தர்மசங்கடம் கொள்ளும் பெண்கள். அவ்-அனைவர்க்குள்ளும் ஒரு சிறுமி இருக்கிறாள். அந்தச் சிறுமியை ஏமாற்றி ஏமாற்றிதான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.
நிஜமாய் பெண்மனம் விரும்பவதெல்லாம் என்ன? குழந்தைத்தனம் நீங்கிக் போகாத கண்களோடு, அத்தனை சிறுபிள்ளைத்தனங்களையும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒரு பனித்துளி ஆன்மாவைத்தானே!
நிஜமாய் அஞ்சுவது எதற்கு? உள்ளில் மறைத்து வைத்திருக்கும் இந்தக் குழந்தைத்தனத்தை யாரும் காயப்படுத்தி விடுவார்கள் என்றுதானே! யாரிடமும் வெளிக்காட்டாத ஒரு பிள்ளைமனத்தை பத்திரமாக வைத்துக்கொள் என்று கைகள் நடுங்க எவரிடம் ஒப்படைக்கிறோமோ! எவர் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறாரோ அவர்தானே தேவதை! அவர்தானே தெய்வம். அப்படியொரு தேவதையாகத்தான் லீலாவுக்கு மாதவன்மாஸ்டர் இருக்கிறார். அவர்மீது லீலாவுக்கு அன்பு பெருகியதில் ஆச்சர்யமே இல்லை!
இயக்குனர் வர்ஷா நல்ல திறமைக்காரி, நிறைய காட்சிகளை மிகத் திறம்பட இயக்கியிருக்கிறார். மனைவியின் அஸ்தியை கங்கையில் கரைக்க வருகின்ற கணவனின் காட்சியெல்லாம் தேர்ந்த முதிர்ச்சியான இயக்கம். அந்தக் காட்சியில் ஒரு முக்கியமான செய்தி ஒளிந்திருக்கும் "குழந்தை பிறந்த பிறகு அவள் எனக்கு அலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் நான் குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டால் அவள் கோபப்பட்டு கத்துவாள்" - குழந்தை எப்படி இருக்குதுன்னு கேட்டியே! குழந்தைய பெற்ற நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டாயா? அவளுடைய உடல்நலம் பற்றி கவலைகொண்டாயா என்பதுதான் அக்கேள்வி. அவன் அவ்வாறு கேட்காமல் விட்டதற்குத்தான் உடைந்து உடைந்து அழுவான்.
தீபம் விற்கின்ற சிறுமி, யாசகம் போல தரப்பட்ட நூறு ரூபாயை மறுத்து, "உன் பணம் எனக்கு வேண்டாம், தீபம்
வேண்டுமானால் வாங்கிக்கோ, ஒரு தீபம் அஞ்சு ரூபாய்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் செல்வாள். சின்னக் காட்சி ஆனால் அழகு!
ஜாஃபர் சாதிக் வருகின்ற பகுதிகளும் நன்று.
சிறுவயது முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு வாழ்க்கை லீலாவை நடனத்தை விட்டே விலக்கி வைத்திருக்கும். காசியின் இரவில் நடனமாடி அதற்கு சிறுதொகை பரிசாகவும் பெற்ற பிறகு, அதை மாதவன் மாஸ்டரிடம் தருவாள். "என் முதல் சம்பளம், நீங்க வச்சிக்கங்க" ஐம்பத்திஇரண்டு ஆண்டுகளில் முதன் முதலில் சம்பளம் என்று பெற்ற ஒன்றை மாதவனிடம் தருகின்ற நன்றிக்குப் பெயர் காதல்.
ஐம்பது வயதைக் கடந்த இருவர் பேசிக்கொண்டே வாரணாசியை வலம்வருவதை இரண்டுமணி நேரம் அலுக்காமல் நம்மால் பார்க்கமுடிகிறது.
சண்டை, அருவா, ரத்தம், துப்பாக்கி, பழிவாங்கல், பரபரப்பு இல்லாமல் மிக அமைதியான ஒரு படம் பெருவாரியாக பாராட்டுப் பெறுகிறது என்பது இயக்குனர்களுக்கு ஒரு செய்தி.

.jpeg
)





கருத்துகள் இல்லை