வேலையை விட்டு விலகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!!




 பொலிஸ் திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 பொலிஸார் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு விலகியவர்களில் 3,936 ஆண் பொலிஸாரும் 372 பெண் பொலிஸார் என்றும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர் கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே விலகியுள்ளனர்.

அந்த ஆண்டில் மட்டும் 838 ஆண் அதிகாரிகளும் 49 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 887 பேர் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 758 அதிகாரிகள் விலகியுள்ளனர்.

தமது சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஓய்வு பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் பங்களித்துள்ளன.

இது தவிர, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் -ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக 658 அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் மொத்தம் 30,815 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதில் சாதாரண பொலிஸ் சேவையில் 28,164 வெற்றிடங்களும், விசேட அதிரடிப்படையில் (STF) 2,651 வெற்றிடங்களும் அடங்கும்.

வழக்கமான ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்ற நடைமுறைகளுக்கு அமைவாக இந்தக்வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.


அத்துடன், பொலிஸ் அதிகாரிகளின் சேவையை மேம்படுத்துவதற்கான மனவலிமையை உயர்த்துவதற்கும் பொலிஸ் திணைக்களம் பல வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், விடுதி வசதிகளை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் மற்றும் தரமான மருந்துகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.