விராஜ் மென்டிஸ் நினைவு நாள்!!
விராஜ் மென்டிஸ், தமிழீழ விடுதலையை நேசித்த சிங்களத் தோழர் - நினைவுநாள் (16 August 2024)
விராஜ் மென்டிஸ் அவர்கள் 1984 ஆம் ஆண்டிலிருந்தே தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் உடனிருந்து வந்தவர். ஜேர்மன் பிரமனிலுள்ள பன்னாட்டு மாந்த உரிமைகள் அமையம் ஒன்றினைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இருவேறுபட்ட கருத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டு பயணிப்பவராவார். தமிழினவழிப்பின் பின்பாக தமிழரிற்குக் கிடைக்கக் கூடிய நயன்மையான தீர்வு தமிழீழத்தை அடைவது மட்டுமே என்பதில் இவர் மாறுபடாத கருத்துக் கொண்டவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பன்னாட்டளவில் முடக்கித் தனிமைப்படுத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைக்குத் தலைமைதாங்கி தமிழீழ நடைமுறை அரசை நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துத் தமிழினவழிப்பை நிகழ்த்தும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியமானது 2006 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்த போது அதை எதிர்த்து அரசியல் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும் தொடர்ந்து போராடி வருபவர்களில் விராஜ் மென்டிஸ் முதன்மையானவராவார்.
சுவிஸ் அரசானது முன்னாள் விடுதலைப் புலிகளைக் கைது செய்தபோது அதை எதிர்த்து இவர் தீவிரமாகப் போராடினார். “விடுதலைப் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு அல்ல; மாறாக தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதை முதன்மை நோக்காகக் கொண்ட விடுதலை அமைப்பு” என்று சுவிசின் உச்ச நீதிமன்றமானது 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததற்குப் பின்னால் விராஜ் மென்டிசின் கடுமையான உழைப்பு இருக்கிறது.
“டேவிட் கமரூனுடன் தேனீர் அருந்துவதைப் பாரிய அடைவாகக் கொள்பவது நகைப்பிற்கிடமானது. உங்களால் அவர்களை மாற்ற முடியாது. மாறாக, மேற்குலகின் அதிகார நடுவங்கள் தான் தமிழர்களை ஏமாற்றி, திசைமாற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகச் செய்யும்” என்று இடித்துரைப்பதன் மூலம் மேற்குலகின் சூழ்ச்சிக்குத் தமிழர் பலியாகக் கூடாது என்று தமிழர்களிடத்தில் எச்சரிக்கை உணர்வை விராஜ் மென்டிஸ் ஏற்படுத்தி வந்தார்.
ஐரோப்பாவில் தமிழ் ஏதிலிகளையும் தமிழீழ விடுதலைக்குப் பங்காற்றுபவர்களையும் சிறிலங்காவிற்கு நாடுகடத்த அந்தந்த நாடுகளால் எடுக்கப்படும் முயற்சிகட்கெதிராகப் போராடி அம்முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதில் முன்னின்று பாடாற்றும் விராஜ் மென்டிஸ் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் அளவற்ற மதிப்பும் பற்றும் வைத்திருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையையும் கருத்து மாறுபாடின்றி நேசிக்கும் நல்லதொரு சிங்களத் தோழராக இருந்தவர்.
நன்றி: காகம் இணையம்
தமிழீழ விடுதலையை நேசிக்கும் சிங்களத் தோழர்கள் குறித்த முழுமையான பதிவைப் படிக்க முதலாவது இணைப்பில் செல்க.

.jpeg
)





கருத்துகள் இல்லை