சலேவின் உடல்நிலை குறித்து சந்தேகம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை.
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் வழங்குமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இன்று (15) இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையைக் கவனத்தில் கொண்டே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பாரிய அறுவை சிகிச்சைகளின் பின்னர் கூட 7 நாட்களில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பும் நிலையில், சுரேஷ் சலே மாத்திரம் 100 நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டமையானது, பாரிய சந்தேகத்தை எழுப்புவதாகவும் திலீப பீரிஸ் இங்கு சுட்டிக்காட்டினார்.
வைத்திய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி சூழ்ச்சி இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் நீதிமன்றம் ஆராய வேண்டுமென அவர் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
சந்தேகநபர் தனது சட்டத்தரணிகள், உறவினர்களை வைத்தியசாலையிலிருந்தவாறே சந்திக்கின்றார். தமது பல், கண், காது தொடர்பான மேலதிக சிகிச்சைகளையும் செய்துள்ளார் எனவும் திலீப பீரிஸ் இங்கு நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி, அரச புலனாய்வுத்துறையில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகரான ரஞ்சன் செனரத் பண்டார என்பவர் விசாரணைக்கு அத்தியாவசியமானவர் என்பதாலும், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் அபாயம் காணப்படுவதாலும், அவர் வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுத்து நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.
#SureshSallay #SIS #ColomboNationalHospital #CourtNotice #TravelBan #ColomboFortMagistrate #DileepaPeiris #LKA #LegalUpdate #SriLanka #SL

.jpeg
)





கருத்துகள் இல்லை