அழகு கலை நிபுணரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்!!
கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உள் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
45 வயதான சூலாபத்மேந்திர பிலியந்தல, தும்போவிலவில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில், 31 ஆம் திகதியன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த தொழிலதிபருடன் அவர் காதல் உறவில் இருந்ததாகவும், 30 ஆம் திகதி பத்தரமுல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்தை தொடர்ந்து, 31 ஆம் திகதி அதிகாலை பிலியந்தலவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் அங்கு அறையில் உறங்கச்சென்ற நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயன்றபோதும், அவர் பதிலளிக்காததால் 1990 ஆம்புலன்ஸ் அவசர சேவை வரவழைக்கப்பட்டுள்ளது
இதன்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மற்றும் உயிரிழந்தவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை தெரிவித்த பின்னர், பதில் நீதவான் சம்பவ இடத்தையும் உடலையும் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், களுபோவில போதனா வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பிலியந்தல பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த குலசிங்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை