அனோஜன் விவகாரம் எப்படி கையாளப்படும்!!

 




சவுதி மன்னர் தொடர்பு: இந்தியாவைப் போன்ற இராஜதந்திரக் கட்டமைப்பு இலங்கையிடம் இல்லை!

--- --- ---

* பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பணிபுரிவோரைக் காக்கும் பொறிமுறை இல்லை!


* சிங்களத் தலைவர்கள் ஏற்க வேண்டிய கசப்பான உண்மை! அநுர அரசாங்கத்தின் புதிய முயற்சி.. 


* இஸ்லாமிய ஷரியா சட்டத்தைச் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தும் சவுதி! 

--- --- ---

சவுதி அரேபியாவின் கடுமையான இஸ்லாம் மத நிந்தனைச் சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.


ஐநா மனித உரிமைச் சபை மற்றும் மத சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர்கள் (Special Rapporteurs), சவுதியின் மத நிந்தனைச் சட்டங்கள் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் பிரிவு 19 (கருத்துச் சுதந்திரம்) மற்றும் பிரிவு 18 (மதச் சுதந்திரம்) ஆகியவற்றிற்கு முரணானது என்று பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறிப்பாக இஸ்லாமிய மதம் சார் நிந்தனை (Blasphemy), கருத்து சுதந்திரக் கட்டுப்பாடுகள் மற்றும் மரண தண்டனைகளைப் பயன்படுத்தும் முறையையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன. 


வன்முறையற்ற குற்றங்களுக்கு, குறிப்பாக இணையப் பதிவுகளுக்கு மரண தண்டனை வழங்குவது சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிரானது என்று ஐ.நா. பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.


குறிப்பாக, சர்வதேச விதிகளின்படி "மிகவும் பாரதூரமான குற்றங்களுக்கு" (Most Serious Crimes) - கொலை போன்ற குற்றங்கள்) மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.


ஆனால், சவுதி அதனை மீறி மதக் கருத்துக்களுக்கும் இதனைப் பயன்படுத்துவதாக ஐ.நா. சாடியுள்ளது.


சவுதி அரேபியா தனது சட்ட முறைமையைக் கொண்டு எவ்வாறு மாற்றுக் கருத்துடையவர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்களை ஒடுக்குகிறது என்பது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகிய அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ள விரிவான வருடாந்த அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன.


அதேநேரம், சவுதி அரேபியா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தங்களைப் பாதுகாத்துப் பேசும்போது, தங்களது "இஸ்லாமிய ஷரியா சட்டம்" புனிதமானது என்றும், அதில் தலையிட வெளிநாடுகளுக்கு உரிமை இல்லை என்றும் வாதிட்டு வருகிறது. 


ஆகவே சிவராசா அனோஜன் எதிர்கொள்ளும் மரண தண்டனை 'இணையக் குற்றம் மற்றும் மத நிந்தனை' சூழலை ஒத்த விவகாரத்தை கையாள்வதில் இலங்கை அரசாங்கத்துக்குச் சங்கடங்கள் உண்டு.


ஏனெனில், சிவராசா அனோஜன் விவகாரம் 'மத நிந்தனை' சார்ந்த பொது உரிமை (Public Right) குற்றச்சாட்டின் கீழ் வருவதன் காரணமாக, இதில் சவுதி மன்னரைத் தவிர வேறு எவருக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இல்லை.


ஆகவே இலங்கை அரசாங்கம் நேடியாக மன்னரை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்..


ஆனால், இவ்வாறான மிகக் கடுமையான கருத்தியல் வழக்குகளை எதிர்கொள்வதற்கும், சவுதி மன்னர் அரண்மனையுடன் (Royal Court) மிக நெருக்கமான, உயர்மட்ட இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவதற்கும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை.


இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது சவுதி அரேபியா உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு வருமானமாகும் (Remittances). 


எனினும், அந்த நாடுகளில் பணிபுரிவோர் எதிர்பாராத சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான போதிய விழிப்புணர்வையோ அல்லது வலுவான சட்டப் பாதுகாப்பையோ வழங்குவதற்கு "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பு ஒரு முறையான, ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்புப் பொறிமுறையை இதுவரை உருவாக்கத் தவறியுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.


இந்தக் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளை இலங்கையின் அரசியல் தலைவர்கள் முதலில் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். 


குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தங்களது கடந்த காலப் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது.


ஏனெனில், இவர்களது ஆட்சிக் காலங்களில் தான் சவுதி உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு மிக அதிகளவிலான வெளிநாட்டு வருமானம் ஈட்டப்பட்டது. 


ஆனால், அந்தத் தொழிலாளர்களின் அடிப்படைப் பாதுகாப்புக்கான தீர்க்கமான பொறிமுறைகள் எவையும் ஸ்தாபிக்கப்படாமல் அலட்சியம் செய்யப்பட்டன.


இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கங்கள் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களின் உயிரைக் காக்க, அரசாங்க நிதியிலிருந்தோ அல்லது பெரும் தொழிலதிபர்கள், பொது அமைப்புகள் மூலமாகவோ மிகக் குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான 'இரத்தப்பணத்தை' (Blood Money) திரட்டும் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.


ஆனால், இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் போன்ற அமைப்புகள் இருந்தும், இவ்வாறான அவசரச் சட்டச் சிக்கல்களின் போது பாரிய நிதி அல்லது இராஜதந்திர அழுத்தங்களை உடனடியாகப் பிரயோகிப்பதற்கான பிரத்தியேகமான அவசரக்கால நிதியக் கட்டமைப்பு (Emergency Legal Fund) இன்னும் வலுவாக உருவாக்கப்படவில்லை.


அத்துடன், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் உள்ளதைப் போல, சவுதி அரண்மனையுடனும் (Royal Court) அந்நாட்டு மன்னருடனும் நேரடியாக இராஜதந்திர வழிகளில் தொடர்புகொண்டு அணுகக்கூடிய அளவிலான வலுவான இஸ்லாமியக் தொண்டு நிறுவனங்களோ அல்லது இஸ்லாமிய சிவில் சமூகக் கட்டமைப்புகளோ (Islamic Civil Society Network) இலங்கையில் இல்லை


இந்தச் சூழ்நிலையில், கடந்த காலத் தவறுகளை உணர்ந்துள்ள தற்போதைய அநுர அரசாங்கம், இந்த இராஜதந்திரப் பின்னடைவை நிவர்த்தி செய்யத் தீவிரமாக முற்பட்டு வருகிறது. 


சவுதி உயர் நீதிமன்றத்தில் உரிய மேல்முறையீட்டை மேற்கொள்வதற்கும், அனோஜனுக்கான புதிய சுயாதீன சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வெளிவிவகார அமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இதற்கமைய, கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்துடன் இலங்கை அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.


சவுதி மன்னரின் சிறப்பு இராஜதந்திர மன்னிப்பைப் (Royal Pardon) பெற்றுக்கொள்வதற்கான உயர்மட்ட முயற்சிகளையும் அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது..


அதேநேரம், சவுதியின் இக் கடுமையான சட்ட முறைகள் மனித உரிமை மீறல் என்று நன்கு தெரிந்தும் முற்று முழுதாக  புவிசார் அரசியல் (Geopolitics) மற்றும் பொருளாதார நலன்களை மையப்படுத்தயே, அமெரிக்கா செயற்படுகிறது. 


சவுதி அரேபியா உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகவும், அமெரிக்காவின் மிக முக்கிய மூலோபாய ஆயுதக் கொள்முதல் சந்தையாகவும் திகழ்கிறது. 


அதேவேளை, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானின் பிராந்திய மேலாதிக்கத்தையும், புவிசார் அரசியல் செல்வாக்கையும் சமநிலைப்படுத்த (Geopolitical Counterweight) அமெரிக்காவிற்கு சவுதியுடனான 'மூலோபாயக் கூட்டணி' (Strategic Alliance) அவசியமானது.


இத்தகைய 'அதிகார அரசியல்' (Power Politics) மற்றும் 'புவிசார் பொருளாதார' (Geo-economics) நலன்கள் காரணமாக, உலக அரங்கில் பிரதிநிதித்துவமற்ற, இறையாண்மையற்ற தேசங்களுக்கும் (Stateless Nations), மேற்கு ஆசியாவின் கடுமையான உள்நாட்டுச் சட்டங்களால் பாதிக்கப்படும் அனோஜன் போன்ற தனிநபர்களுக்கும் சர்வதேசச் சட்டங்களின் கீழ் நியாயமான 'நீதியைப் பெறுவது' (Access to Justice) என்பது எட்டாக்கனியாகவே தொடர்கிறது.


இதன் காரண- காரியமாக, ஏனைய நாடுகளின் மனித உரிமை மீறல்களைச் சர்வதேச அரங்குகளில் மிகக் கடுமையாகக் கண்டிக்கும் வல்லரசு நாடுகள், சவுதியின் கொடூரமான உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 'இரட்டை நிலைப்பாட்டை' (Double Standards) அல்லது திட்டமிட்ட மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் கசப்பான உலகளாவிய யதார்த்தம்.


பிற்குறிப்பு 

--- --- ---

சில வருடங்களுக்கு முன்னர், சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியப் பிரஜையான நிம்பல் ஹரிதாஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் சிலர், தூதரகங்களின் தீவிர இராஜதந்திர முயற்சிகள், இஸ்லாமியக் தொண்டு நிறுவனங்களின் தலையீடுகள் மற்றும் 'இரத்தப்பணம்'  செலுத்துதல் மூலமாக மரண தண்டனையிலிருந்து தப்பி, விடுதலை பெற்று தாயகம் திரும்பியுள்ளனர்.


அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்- 

#saveanojan #JusticeForAnojan #AbolishDeathPenalty #UNHRC #srilankaforeignpolicy #சிவராசாஅனோஜன் #இலங்கை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.