பிரான்ஸ் கொந்தளிக்கிறது .. இருள் சூழும் வேளையில் வெடிக்கும் வன்முறைகள்!
(பாரிஸ், 24.10.2026 Ⓒ sci)
-சிவ சின்னப்பொடி-
தற்ப்போது நேரம் சரியாக இரவு 19:00
மணி. இன்று பகல் முழுவதும் ஒருவித அமைதியோடு கடந்து சென்ற பிரான்ஸ் வீதிகள், தற்போது இருள் சூழத் தொடங்கியதும் கலவர பூமியாக உருமாறிக் கொண்டிருக்கின்றன! நாடு முழுவதும் 70,000 காவற்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், பல நகரங்களில் நிலைமை தற்போது முற்றிலுமாகக் கைமீறிச் சென்று கொண்டிருக்கிறது.பாரிஸின் 'வன்சென்' (Porte de Vincennes) பகுதி முழுவதும் தற்போது அடர்ந்த புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது! 'இத்தாலி' நுழைவாயிலில் அமைதியாகத் தொடங்கிய அந்த மாபெரும் மக்கள் சுனாமி, அதன் இறுதி இலக்கை அடைந்ததும் மாபெரும் கலவரமாக வெடித்துள்ளது. கூட்டத்தைக் கலைப்பதற்காகக் காவற்துறையினர் தொடர்ச்சியாகத் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் (Canons à eau), கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் சரமாரியாக வீசி வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன்பு கூட, இதே வீதியில் உள்ள 'Audi' சொகுசு கார் ஷோரூமைச் சூறையாட முயன்ற ஒரு வன்முறைக் கும்பலை அதிரடிப்படையினர் மிக நூலிழையில் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாரிசில் மட்டும் இதுவரை 65 க்கும் மேற்பட்டோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்புத் தகவல் கிடைத்துள்ளது.
பாரிஸ் மட்டுமின்றிப் பிரான்சின் பிற மாகாணங்களில் இருந்து வரும் செய்திகளும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. கிரெனோபில் (Grenoble) நகரில் நிலைமை மிக விபரீதமாக மாறியுள்ளது; அங்கு முகமூடி அணிந்த சுமார் 400 'பிளாக் பிளாக்ஸ்' (Black blocs) வன்முறையாளர்கள் கூட்டத்திற்குள் ஊடுருவி, காவற்துறையினர் மீது கொடிய தாக்குதல்களை நேருக்கு நேர் தொடுத்து வருகின்றனர்.
லியோன் (Lyon) நகரில் தடையை மீறி 10,000 பேர் திரண்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவற்துறையினர், வேறு வழியின்றித் தற்போது 'சென்டார்' (Centaure) கவச வாகனங்களை வீதிகளில் இறக்கியுள்ளனர். அங்குப் போராட்டக்காரர்கள் காவற்துறையினர் மீது தொடர் பட்டாசுத் தாக்குதல்களை நடத்தி முட்டி மோதுகின்றனர்.
தெற்கே துலூஸில் (Toulouse) கூட்டத்தைக் கலைக்கும் போது ஏற்பட்ட பெரும் வன்முறையில் ஒருவருக்குக் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சென் -எட்டியென் (Saint-Étienne) நகர மையத்தில் கடைகள் உடைத்துச் சூறையாடப்பட்ட அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகி உள்ளன.
பெர்பிக்னான் (Perpignan) நகரில் அமைதியாகச் சென்ற பேரணியில் இருந்து பிரிந்த 500 பேர் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல், நகர மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றபோது காவற்துறையினரால் அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, 21 பேர் கைதாகியுள்ளனர்.
இன்று வீதிகளில் இறங்கியுள்ள 8 லட்சம் பேரைக் கண்ட சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஒலிவியே ஃபோர், இது வெறும் போராட்டமல்ல, ஒரு "மக்கள் சுனாமி" (marée humaine) என வர்ணித்துள்ளார்.
இடதுசாரித் தலைவர் மெலன்சோனோ மக்களின் இந்த எழுச்சியை வரலாற்று வெற்றி என முழங்கியுள்ளார்.
இதற்கிடையே அரசாங்கத்திற்குப் புது நெருக்கடியாக, கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவற்துறையின் கையில் சிக்கிப் படுகாயமடைந்த புகைப்படக் கலைஞர் விவகாரத்தில், IGPN (காவற்துறையின் காவற்துறை) தனது தீவிர விசாரணையை இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
பிரான்சின் வீதிகளில் தற்போது இருள் முழுமையாகச் சூழ்ந்துவிட்டது. கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் வன்முறையாளர்கள் நள்ளிரவு வரை மாபெரும் தாக்குதல்களைத் தொடுக்கலாம் எனப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதால், பிரான்ஸ் மக்கள் உச்சக்கட்டப் பீதியில் உறைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையான நாளையும் ஒர்லேயனில் (Orléans) பெரும் மோதல்கள் வெடிக்கலாம் என நகர முதல்வர் பகிரங்கமாக அச்சம் தெரிவித்துள்ளார். எந்த நொடியிலும் எதுவும் நிகழலாம், நாட்டை உலுக்கும் இந்த நீண்ட இரவின் ஒவ்வொரு நகர்வையும் நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து வழங்குவோம்

.jpeg
)





கருத்துகள் இல்லை