நெத்தன்யாகஹுவுக்கு விழுந்த பேரிடி!
உலகின் மிகவும் சக்திபடைத்த அதிதீவிர தேசியவாதக் கொள்கையும், இன உணர்வும் கொண்ட ஒரு தலைவரே பெஞ்சமின் நெத்தன்யாஹு.
இஸ்ரேல் அரசியலில் அசைக்கமுடியாத சக்தி நெத்தன்யாஹு. ஆனால், முதன்முறையாக அரசியலில் ஆட்டம் கண்டுள்ளார். இந்நிலை, இஸ்ரேலிய அரசியல் வரலாறில் புதிய திருப்புமுனை
நெத்தன்யாஹு எந்த அளவுக்கு சக்திப்படைத்தவர் என்றால், அமெரிக்கக் கூட்டாட்சி மன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் (Congress) அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராகவே பிரச்சாரம் செய்யும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.
பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியை எதிர்த்தோ? அல்லது அடுத்து வரப்போகும் தேர்தலில் போட்டியிடும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வெல்லக்கூடாது என்றோ? அமெரிக்கக் கூட்டாட்சி மன்றத்தில் பிரசங்கம் செய்யும் அளவுக்கு அதிகாரம் படைத்த வேற்று நாட்டின் தலைவர் நெத்தன்யாஹு.
இன்று உலகில் தொடரும் பெரும்பாலான போர்களுக்கும், பதட்டங்களுக்கும், அரசியற் குழப்பங்களுக்கும் பின்னணி ஆணிவேர் இஸ்ரேல் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இதில் சுமார் 18 ஆண்டுகள் (மூன்று வெவ்வேறு காலகட்டங்கள்) இஸ்ரேலின் பிரதமராக இருந்து கொள்கை வகுப்புகளைச் செய்து, கடும்போக்கு முடிவுகளை எடுத்த சக்தி வாய்ந்த தலைவர் நெத்தன்யாஹு.
இவ்வாறு இஸ்ரேல் அசுரபலம் கொண்டு விளங்குவதற்கான ஒற்றைக் காரணம், அமெரிக்கா என்ற வல்லரசு இஸ்ரேலுக்கும் நெத்தன்யாஹுவுக்கும் கண்ணை மூடிக்கொண்டு தமது ஆதரவை அள்ளி வழங்குவதே.
இதுவரையில் நெத்தன்யாஹுவைத் தட்டிகேட்பதற்கு அல்லது அவரோடு முரண்படுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பறாக் ஒபாமாவைத் தவிர மேற்குலகின் எந்தத் தலைவரும் முனையவில்லை (அதுவும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவு மட்டுமே).
பொதுவிலே சொல்லப்போனால் இஸ்ரேலைத் தட்டிக்கேட்பதற்கு இந்த உலகத்தில் எந்த வல்லரசும் துணியவில்லை. அவ்வாறு இதுவரையில் துணிந்த அரபு வட்டகை அரசுகள் அழிக்கப்பட்டன அல்லது அடக்கப்பட்டன.
அதற்கு விதிவிலக்காகவே, சமகாலத்தில் தனியொரு சக்தியாக இரான் தேசம் நிமிர்ந்து நிற்கிறது. இஸ்ரேலின் புலனாய்வுப் பாண்டித்தியம், போரியல் தந்திரோபாயங்கள், அரசியல் மூலபாயங்கள் என்பன தோற்றுப்போன களம் இரான். ஆயினும், இரானின் தாக்குப்பிடிக்கும் திறன் எவ்வளவு கால நீட்சி கொண்டது என்பதை இப்போது சொல்வது கடினம்.
பலஸ்தீனர்களின் முள்ளிவாய்க்காலாக அமைந்த Gaza வைத் துவம்சம் செய்து 20,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட சுமார் 75,000 பொதுமக்களைக் கொன்றுக்குவித்து Gaza வைச் சுடுகாடாக்கிய
நெத்தன்யாஹு சற்று முடங்கிப்போனது இரான் போரில் மட்டுமே.
ஆனால், அங்கும் திமிரோடும் வீரியத்தோடும்
இஸ்ரேல் நிற்பதற்குக் காரணம், மதம்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உம் அவரது இரானை அழித்துவிடும் போர் வெறியுமாகும்.
இருப்பினும், இந்த இரண்டு வல்லசக்திகளின் தலைமைகளும் கட்டிப்பிடித்து உருண்டபோதிலும், இரானை இதுவரையில் வீழ்த்த முடியவில்லை. மேலும், அமெரிக்க -இஸ்ரேல் நேசசக்திகள் இந்தப்போரில் நேரடிப் பங்கேற்காதமையும் நெத்தன்யாஹுவுக்கு (இஸ்ரேலுக்கு) விழுந்த பலமான அடியாகும்.
இந்தநிலையில், இஸ்ரலில் October 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரபு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரபுக் கூட்டணி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
19 ஆசனைங்களைப் பெற்ற அரபுக் கூட்டணி, இஸ்ரேலின் அடுத்த ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நெத்தன்யாஹு தலைமையிலான Netanyahu Block 53 ஆசனங்களையும், Gadi Eisenkot தலைமையிலான மாற்றத்திற்கான எதிரணிக் கூட்டணி Change Block 48 ஆசனங்களையும், அரபுக்கூட்டணி ( Arab Parties) 19 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
எனவே, ஆட்சியமைப்பதற்குத் தேவையான 61 ஆசனங்கள் கிடைக்காத காரணத்தினால், பிரதான இரண்டு கூட்டணிகளும் ஆட்சிமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவை இரண்டும் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதும் இப்போதைக்குச் சிக்கலான தெரிவாகவே உள்ளது.
இத்தேர்தல் முடிவுகள் நெத்தன்யாஹுவுக்கு ஒரு பலத்த அடியாகவே கருதப்படுகிறது. இதுவரை இல்லாத சிக்கலை அவர் எதிர்கொள்கிறார்.
அரபுக் கூட்டணியுடன், நெத்தன்யாஹு கூட்டணி அமைப்பது சாத்தியமற்றது. அதேபோல் Gadi Eisenkot தலைமையிலான மாற்றத்திற்கான எதிரணிக் கூட்டணியும் (Change Block) தீவிர வலதுசாரி அணியாக இருப்பதனால், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும் இலக்குவில் சாத்தியமற்றது.
அவ்வாறு ஏதேனும் கூட்டணி அல்லது தேசிய அரசு அமைவதாக இருந்தால் பல நெருக்கடியான சமரசங்களைச் செய்யவேண்டி இருக்கும். அது தீவிர வலதுசாரி யூத அரசுகளின் கொள்கை / கோட்பாடுகளில் கைவைக்கும் விவகாரமாக உருவெடுத்துவிடும்.
இவ்வாறு இஸ்ரேலிய அரசியலில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பது பெரும்பாலும் பலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலிய-அரபுக் குடிகளே.
இஸ்ரலிய குடியுரிமை பெற்ற / வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களில் 80% அரபு வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்தமையே அரபுக் கூட்டணி 19 ஆசனங்களைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டுத் தேர்தலில் அரபு வாக்காளர்களின் வாக்களிப்பு விகிதம் 53.2% என்ற நிலையில் இருந்து இதுவொரு பாரிய பாய்ச்சல்.
இவ்வாறான அதிகூடிய வாக்களிப்பு வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளமை ஐந்து தசாப்தங்களின் பின்னர் இதுவே முதல் முறை. (Average voting of Arabs 83.3% I 1949 -1973)
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரபு மக்களின் வாக்களிப்பு விகிதம் இஸ்ரேலிய அரசியலில் பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இதற்கு Gaza வில் இடம்பெற்ற இரக்கமற்ற போர் மற்றும் படுகொலைகள், இரான் மீது தொடுக்கப்பட்டுள்ள போர், அதனால் ஏற்பட்ட சர்வதேச அரசியல் - பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நெத்தன்யாஹு அரசின் கடும்போக்குக் கொள்கைகள் என்று கூட்டுக் காரணிகள் அமைந்துவிட்டன.
எனவே, இந்தத் தேர்தல் முடிவு ஒரு படிப்பினையாக உலகத்திற்குச் சொல்லப்பட்டுள்ளது. மக்கள் சக்தி மகத்தானது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுபியுள்ளன.
தேர்தலில் வாக்களிப்பைப் முன்னிலைப்படுத்தி மக்கள் வாக்களித்தமையின் ஒரு வெளிப்பாடுதான் இந்த வரலாற்றுத் திருப்பதிற்குக் காரணமாக அமைந்துள்ளது.
எனினும், நெத்தன்யாஹு முழுமையாகத் தோற்றுவிட்டார் என்று இப்போது கருதமுடியாது. மீண்டும் ஒரு தேர்தல் வருவதற்கான வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன.
அதனைத் தவிர்ப்பதற்கு தேர்தலின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் தந்ததிரோபோயத்தை நெத்தன்யாஹு கையில் எடுத்துள்ளார். Qatar, துருக்கி போன்ற வேற்று நாடுகளின் தலையீடு இத்தேர்தலில் தாக்கம் செலுத்தியதாக தனது ஆட்டத்தைத் ஆரம்பித்துள்ளார்.
ஆகவே, இது அரபு மக்களுக்குக் கிடைத்த ஒரு குறியீட்டு வெற்றி மட்டுமே. இது அரபு மக்களின் வாழ்வியலில் அல்லது பலஸ்தீன மக்களின் உரிமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை. ஒரு தற்காலிக இடைவெளியை உருவாக்கவும், கடும்போக்கு நெட்டன்யாஹுவுக்கு நெருக்கடி கொடுப்பதற்குமான ஒரு சந்தர்ப்பம் மட்டுமே.
இதன்மூலம் நெட்டன்யாஹுவை பதவியில் இருந்து அகற்றி மாற்று அரசியற் தலைமையை உருவாக்க முடிந்தால் மட்டுமே அது அவர்களுக்கான ஒரு சிறிய வெற்றி.
ஆனால், இத்தேர்தல் முடிவுகள் சர்வதேச ரீதியாக ஒரு பலமான செய்தியைப் பறைசாற்றியுள்ளது. இன ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்களின் வாக்குத் திரட்சி என்பது யானையை எலி மிரட்டுவது போன்ற காத்திரமான அரசியல் அரசியல் சக்தியாக வெளிப்பட்டுள்ளது.
நடைமுறையில் ஜனநாயகப் பண்புகளைப் பின்பற்றவேண்டிய அரசியற் கட்டமைப்புக்களைக் கொண்ட நாடுகளில் மக்களின் வாக்குப்பலம் என்பது அரசியற் பேரம்பேசலுக்கான ஒரு ஆயுதமாக அமையமுடியும் என்பதை, அரபு மக்களின் வாக்களிப்புப் புரட்சி வெளிப்படுத்தியுள்ளது. (சில நாடுகளில் தேர்தற் புறக்கணிப்பும் அரசியற் பேரம்பேசலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.)
இந்நிலையில், தேர்தல் முடிவின் எதிரொலியும்,
நெத்தன்யாஹுவுக்கு விழுந்த அடியும் அமெரிக்காவில் நடக்கவுள்ள இடைத்தவணைத் தேர்தலில் (Midterm Elections) எவ்வாறு எதிரொலிக்கும் என்பதே இப்போது உள்ள கேள்வி?
Trump - Netanyahu கூட்டாளிகளின் அட்டகாசங்களைப் பார்த்துச் சலித்துவிட்ட அமெரிக்க மக்கள், தமது பங்கிற்கு ஒரு புரட்சி செய்வார்களா? என்று ஆவலோடு எதிர்பாக்கப்படுகிறது.
இஸ்ரேல் தேர்தல் முடிவுகளின் தாக்கம், அமெரிக்க அரசியலில் எதிரொலிக்குமாக இருந்தால், அது தற்போதைய சர்வதேசப் பதட்ட நிலைமைகளில் ஒரு தணிவை ஏற்படுத்தலாம் எனவும், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் ஆட்டத்திற்கு ஒரு கடிவாளமாக அமையலாம் எனவும் சில எதிர்வுகூறல்கள் உண்டு.
அது பலிக்குமா? இல்லையா? என்பதை உற்று அவதானிப்போம்.
அது ஓரளவேனும் பலிக்கும் என்பது நமது கணிப்பு. ஆச்சரியங்களுக்கும் வாய்ப்புண்டு.
(குறிப்பு:- November 3 ஆம் திகதி அமெரிக்க இடைத்தவணைத் தேர்தல் நடைபெறவுள்ளது. November 4 ஆம் திகதி இஸ்ரேலில் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் உறுதிசெய்யப்படும்.)
நன்றி,
உதயன் S. பிள்ளை
October 30, 2026
@followers

.jpeg
)





கருத்துகள் இல்லை