அன்பின் மடல்!!

 



அன்புள்ள மித்ரா!!

நானும் நீங்களும் சந்தித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. ஒரு அழகான கனவாக எனக்குள்ளே வந்த நீங்கள், என் முழு வாழ்க்கையாக மாறிப்போனது அதிசயம் தான்.  ஆனால் ஒன்று, உங்களுடனான ஆரம்ப உரையாடலே, என்னைப்பொறுத்தவரை, ஒரு பிரிக்க முடியாத பந்தமாகத்தான் இருந்தது.  


கால ஓட்டம், எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது, ஒருபோதும் நாங்கள் ஒன்றாக முடியாதவர்கள், நான் உங்களுக்கு ஆனவள் இல்லை,  சில உறவுகளை கடவுள், காலம் தாண்டி இணைத்து விடுகிறார், சேரக்கூடாத காலத்தில் நாங்கள் சந்தித்து விட்டோம். 


என் எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும் என் கனவுகளை கலைத்து போடவும் எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது, நீங்கள் எனக்கே எனக்கான உரிமையுடையவர் என்பது ஆழ்மனதில் பதிந்து போனதால் தான், நிறைய சண்டைகள், நிறைய வாக்குவாதங்கள், நிறைய வார்த்தையாடல்கள்....


காலம் கரைந்து தான், அந்த உண்மையை எனக்கு உணர்த்தியது,  நான் உயிருக்குள் வைத்து பூஜிக்கவும் என்னை தன் உயிராக நேசிக்கவும் எனக்கு ஒரு உறவு, ஒரு இனிய துணை வேணும் எனவும் நான் எனக்காக கொஞ்சகாலம் வாழவேண்டும் எனவும் ஆசைப்பட்ட காலத்தில் தான் நீங்கள் என் வாழ்க்கையில் வந்தீர்கள். அதனால் என் தவத்திற்கு கிடைத்த வரமாகவே நான் உங்களை நினைத்தேன், அதனால்தான் எனக்கு உங்கள் மீதான ஏக்கம், பாசம், காதல், எதிர்பார்ப்பு, உரிமை உணர்வு எல்லாம் அதிகமாக இருந்தது, 

நானே உங்களுடைய உலகத்தை அலங்கரிக்க வேண்டும் என்றும் என்னைவிட உங்களுக்கு யாரும் முக்கியமானவர்களாக ஆக கூடாது என்றும் எத்தனை பிரயத்தனங்கள், எவ்வளவு கோபங்கள்....


மித்ரா!!

, பல விடயங்களில் நாங்கள் ஒன்றாக இருந்தாலும் சில முக்கிய விடயங்களில் நாங்கள் வேறுவேறானவர்கள்,  இந்த சமூக சுழலுக்கு ஒவ்வாதவர்கள், தனிப்பட்ட எதிர்பார்ப்புகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் வேறு,  ஆண் பெண் எனும் கணிப்பீடுகளில் வரையறுக்கப்பட்ட ஒரு நியதி காலம் காலமாக இருக்கிறது, அதில் நாங்களும்  விதிவிலக்கானவர்கள் இல்லை, சுருக்கமாக சொன்னால், உங்கள் எண்ணங்களுக்கு நான் ஏற்றவள் இல்லை, 


 கைகள் கோர்த்து நடக்கவும் தோள் சாய்ந்து ஆறுதலடையவும் ஒளிவு மறைவற்ற ஒரு பந்தம் வேண்டும், அது அற்ற நிலை, மிகவும் பரிதாபமானது, அதை அனுபவிப்பவர்களுக்கே அந்த வலி புரியும். 


நான் கண்டு கடந்த நம்பிக்கையீனங்கள்,  மீண்டும் மீண்டும் ஏமாற வேண்டாம் என அச்சுறுத்தினாலும் அப்பப்போ பொழிகிற அன்பின் சுனையில் நனைகிற போது, நானும் ஆசுவாசப்பட்டு போகிறேன். 'அதற்கென்ன, நீந்தி மகிழ்வோமே' என எண்ணி விடுகிறேன், 


எனக்கு இப்போது புரிகிறது,  தானாக பொங்கி வழிகிற அன்பினால் அன்றி யாரையும் இழுத்து வைத்து அன்பை யாசிக்க முடியாது, அப்படி  அன்பு கிடைக்கவும் கிடைக்காது,  நமக்கான பாதைகளை நாம் செவ்வை பண்ணுவதை தவிர நம்மால் ஆவது, ஒன்றும் இல்லை. 


சில நேரங்களில் மனதுக்கு நெருக்கமாக வந்து யாவுமாகிறீர்கள், சில நேரங்களில் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறீர்கள்.   


விலகவோ விலக்கவோ முடியாத இணைப்பில் கட்டுண்டு கிடக்கிற இந்த உறவில், ஏனோ, கேள்விகள் யாவும் பதிலற்றதாகவே இருக்கிறது,  எதிர்பாராத நேரங்களில் வந்து விழுகிற அன்பின் ஆகர்ஷிப்பு,  சொர்க்கத்தின் உச்சியில் இருத்தி வைக்கிறது என்பது மட்டும் உண்மை.



இது எதுவாகவேனும் மாறட்டும், ஆனால் ஒன்று மட்டும் உண்மை, 


என் மூச்சுக்காற்று  இருக்கும் இந்த உலகில், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதே எனக்கு போதுமானது...


உங்கள் கனவுகளை நானும் சுமப்பேன், உங்களுக்காக யாவும் செய்வேன், உங்கள் ஆசைகளே எனது விருப்புகளும்.



எப்போதும் நீங்கள் நிறைந்த மனதோடு வாழ்ந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி....


இப்படிக்கு 

அன்புடன் 

சுஜா.



பகிர்வு




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.