உயிர் தப்பிய மரண தண்டனை கைதி!!
அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் ஓருவர் உயிர் பிழைத்த விசித்திர சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போதிலும் அதிலிருந்து பிழைத்த 50 வயதான கிரிஸ்டா பைக் என்ற பெண், தற்போது சுயநினைவு திரும்பிப் பேசி வருவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அவருக்கு இரண்டு முறை நச்சு ஊசி செலுத்தப்பட்ட போதிலும் அவர் உயிருடன் தப்பினார்.
மரண தண்டனைக்காக நச்சுப்பொருள் உடலுக்குள் செலுத்தப்பட்ட பின்னரும் ஒருவர் உயிருடன் பிழைத்திருப்பது மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாகும்.
கைவிலங்கு இடப்பட்ட நிலையிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடலிலிருந்து செலுத்தப்பட்ட இரசாயனங்களை அகற்ற மருத்துவக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர். இதன் மூலம் சில நாட்களாகச் சுயநினைவின்றி இருந்த அவர், தற்போது குணமடைந்து பேசத் தொடங்கியுள்ளார்.
இதற்கு முன் 7 கைதிகள் மரண தண்டனையிலிருந்து தப்பியிருந்தாலும், அவர்களின் நரம்புகளுக்குள் ஊசி செலுத்தப்படவில்லை. ஆனால் உடலுக்குள் நச்சுப்பொருள் செலுத்தப்பட்ட பின்னரும் பிழைத்த ஒரே நபர் கிரிஸ்டா பைக் மட்டுமே என ஃபோர்ட்ஹாம் சட்டப் பள்ளியின் குற்றவியல் பேராசிரியை டெபோரா டென்னோ ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பைக்கின் உடலுக்குள் செலுத்தப்பட்ட ‘பென்டோபார்பிட்டல்’ என்ற இரசாயனம் நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலக்காமல், தோலுக்குக் கீழே உள்ள திசுக்களில் பரவியதே அவர் பிழைத்ததற்குக் காரணமாக இருக்கலாம் என மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஜோயல் ஜிவோட் தெரிவித்துள்ளார்.
மேலும் பைக்கிற்கு இருந்த இரத்த உறைதல் பாதிப்பு மற்றும் மெல்லிய நரம்புகள் காரணமாக அவரது கைகளில் கடுமையான காயங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவத்தையடுத்து, டென்னசி மாநில ஆளுநர் பில் லீ இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான அனைத்து மரண தண்டனை நிறைவேற்றங்களையும் இடைநிறுத்தியுள்ளார்.
அம்மாநிலச் சிறைத்துறைத் தலைவரும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளார். கிரிஸ்டா பைக்கிற்கு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அவரது வழக்கறிஞர்கள் நேஷ்வில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி செய்தியாளர் சந்திப்பையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை