சிந்தனைக்கு!!

 எனது பதிவுகள் கட்சிகளுக்காக அல்ல. தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக.


எனது பதிவுகளைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவர்களுக்கு, நான் எந்த நோக்கத்துடன் எனது கருத்துகளை முன்வைக்கிறேன் என்பது நிச்சயமாகப் புரிந்திருக்கும்.


நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் திருப்திப்படுத்துவதற்காகவோ, எந்தவொரு அரசியல் தலைவரையும் மகிழ்விப்பதற்காகவோ, யாருடைய அரசியல் செல்வாக்கையும் உயர்த்துவதற்காகவோ எனது கருத்துகளைப் பதிவு செய்வதில்லை.


எனது பதிவுகளின் அடிப்படை நோக்கம், வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் உரிமைகள், ஒற்றுமை, அரசியல் பொறுப்புணர்வு மற்றும் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிய பயணம் என்பவையே.


எனவே, எனது கருத்துகளைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அணுகாமல், அவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


01. அரசியல் தலைவர்களின் ஆளுமையை நான் மறுக்கவில்லை.


தமிழர் அரசியலில் உள்ள ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் ஆளுமையற்றவர்கள் என்றோ, அவர்களுக்குச் சரியான அரசியல் அறிவு இல்லை என்றோ நான் கூற வரவில்லை.


அவர்களுடைய அரசியல் அனுபவம், ஆளுமை, அறிவு, செயற்பாடுகள் மற்றும் அரசியல் தெளிவுகள் தொடர்பாக எனக்குத் நன்கு தெரிந்தவையே.


ஆனால், ஒரு தலைவருக்கு அரசியல் அறிவு இருப்பதும், ஓர் அரசியல் கட்சி தேர்தல்களில் வெற்றிபெறுவதும் மட்டுமே ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாகிவிட முடியாது.


ஒரு தலைவரின் உண்மையான அரசியல் ஆளுமையை அளவிட வேண்டியது, அவர் எத்தனை தேர்தல்களில் வெற்றிபெற்றார் என்பதைக் கொண்டு மட்டுமல்ல. அவர் தனது மக்களின் உரிமைகளுக்காக எத்தகைய நிலையான மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதைக் கொண்டும்தான்.


அதேபோல், ஒரு கட்சியின் பலத்தை அளவிட வேண்டியது அதன் தேர்தல் வெற்றிகளாலும் மக்கள் செல்வாக்காலும் மட்டுமல்ல. மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அது எத்தகைய நடைமுறைத் திட்டங்களை முன்வைத்துச் செயற்படுகிறது என்பதையும் கொண்டுதான்.


எனவே, எனது விமர்சனங்கள் தனிநபர்களின் ஆளுமைக்கு எதிரானவை அல்ல. அவை அரசியல் செயற்பாடுகளின் போதாமைகள் குறித்தும், தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான பொறுப்புணர்வு குறித்தும் முன்வைக்கப்படுபவையாகும்.


02. யுத்தம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் நாம் எங்கே நிற்கிறோம்.


2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து இன்று 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.


இந்தக் காலப்பகுதியில் வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள் எத்தனையோ மாற்றங்களையும் சவால்களையும் சந்தித்துள்ளனர்.


உயிரிழப்புகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், நில இழப்புகள், வாழ்வாதாரப் பாதிப்புகள், போரினால் ஏற்பட்ட உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள் என எமது சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.


இத்தகைய சூழலில், தமிழர் அரசியல் முன்னெப்போதையும் விட அதிகமான பொறுப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டிருக்க வேண்டும் அல்லவா.


ஆனால், இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வி இதுதான்:


யுத்தம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான ஒருமித்த அரசியல் அணுகுமுறையை எம்மால் உருவாக்க முடிந்திருக்கிறதா.


ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் வலுவான அரசியல் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோமா.


தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைத் தெளிவாக முன்வைத்து, அவற்றை அடைவதற்கான நடைமுறைச் செயற்திட்டத்தையும் காலவரையறையையும் கொண்ட ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையை உருவாக்கியிருக்கிறோமா.


இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் இருக்கிறது.


இத்தனை ஆண்டுகள் கடந்தும் எமது மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை நாம் சுயவிமர்சனத்துடன் ஆராய வேண்டும்.


கடந்த காலத் தியாகங்களைப் பெருமையாகப் பேசுவதுடன் நின்றுவிடாமல், அந்தத் தியாகங்கள் எதற்காகச் செய்யப்பட்டனவோ, அந்த இலக்குகளை நோக்கி நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பதையும் நேர்மையாக மதிப்பிட வேண்டும்.


03. ஒற்றுமையைவிடப் பிரிவினைகளே மேலோங்கி நிற்கின்றன.


இன்று தமிழர் அரசியலில் என்னை அதிகமாகக் கவலைப்படுத்துவது, ஒற்றுமையான அரசியல் செயற்பாடுகளுக்குப் பதிலாக முரண்பாடுகளும் போட்டிகளும் மேலோங்கி நிற்பதுதான்.


கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கட்சிகளுக்குள்ளும் தலைமைத்துவம், கொள்கைகள், அணுகுமுறைகள் தொடர்பாக முரண்பாடுகள் இருக்கலாம்.


ஜனநாயக அரசியலில் இத்தகைய வேறுபாடுகள் இயல்பானவை.


ஆனால், அந்த வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலம் தொடர்பாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.


துரதிர்ஷ்டவசமாக, இன்று பல சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான முயற்சிகளைவிட, தனித்தனியாகச் செயற்படுவதற்கான முயற்சிகளே முன்னிலைப்படுத்தப்படுகின்றன.


யார் பெரிய தலைவர்- யாருடைய கட்சிக்கு அதிக செல்வாக்கு- யார் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றிருக்கிறார்- யார் அரசியல் தலைமையை ஏற்க வேண்டும்.


இத்தகைய போட்டிகளுக்கு மத்தியில், தமிழர்களின் நீண்டகால அரசியல் இலக்குகள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றனவா.என்ற கேள்வி எழுகிறது அல்லவா.


தலைமைத்துவத்திற்கான போட்டிகள் இருக்கலாம். ஆனால் அந்தப் போட்டிகள் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் நிலைக்கு ஒருபோதும் சென்றுவிடக் கூடாது.


ஒரு கட்சியால் மட்டும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது என்பதை அரசியல் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.


எனவே, தனித்தனி கட்சிகளின் அரசியல் அடையாளங்களை அழிப்பது எனது நோக்கமல்ல. அவற்றின் தனித்துவங்களை மதித்துக்கொண்டே, தமிழர்களின் பொதுவான அரசியல் இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எனது வலியுறுத்தலாகும்.


04. நினைவேந்தல்களிலும் அரசியல் செல்வாக்குப் போட்டிகளா.


எமது மக்களின் வரலாற்றில் நினைவேந்தல்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு.


உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதும், அவர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் எமது சமூகத்தின் வரலாற்றுக் கடமையாகும்.


ஆனால், இத்தகைய நிகழ்வுகள் தொடர்பாகவும் யார் முதலில் நடத்துவது, யார் அதிகமான மக்களைத் திரட்டுவது, யார் அதிக செல்வாக்குடையவர்கள் என்பதை நிரூபிப்பது போன்ற போட்டிகள் முன்னிலைப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கவலை ஏற்படுகிறது.


நினைவேந்தல்கள் யாருடைய தனிப்பட்ட அரசியல் சொத்தும் அல்ல.


அவை எமது மக்களின் வரலாற்றையும் வலியையும் தியாகங்களையும் நினைவு கூரும் பொதுவான உரிமையுடன் தொடர்புடையவை.


தியாகங்களை நினைவு கூர்வதில் போட்டியிடுவதைவிட, அந்தத் தியாகங்கள் எதற்காகச் செய்யப்பட்டனவோ, அந்த இலக்குகளை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பதில்தான் உண்மையான அரசியல் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும்.


நினைவேந்தல்களை நடத்துவது தவறல்ல. அரசியல் கட்சிகள் அவற்றில் பங்கேற்பதும் தவறல்ல.


ஆனால், நினைவேந்தல்களின் அடிப்படை நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவை அரசியல் செல்வாக்கை நிரூபிப்பதற்கான களங்களாக மாறிவிடக் கூடாது.


எமது வரலாற்றையும் தியாகங்களையும் மதிப்பது என்பது, அவற்றை நினைவு கூர்வதுடன் முடிந்துவிடுவதல்ல; அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் அரசியல் நோக்கங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதுமாகும்.


05. இனியும் மௌனமாக இருக்க முடியாது.


இன்றைய சூழலில், வடக்கு–கிழக்கு தமிழ் மக்களாகிய நாம் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் நிற்கிறோம்.


அரசியல் கட்சிகள் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பொதுவான அரசியல் அணுகுமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.


அதேவேளை, அரசியல் கட்சிகளுக்கு வெளியே உள்ள சமூக ஆளுமைகளும் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவாகும்.


குறிப்பாக,


முன்னாள் போராளிகள் - தமது அனுபவங்களையும் வரலாற்றுப் புரிதலையும் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.


கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் - உணர்ச்சிகளுக்கு அப்பால், ஆதாரங்கள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் அரசியல் தீர்வுகளுக்கான வழிமுறைகளை முன்வைக்க வேண்டும்.


மதத் தலைவர்கள் - சமூகத்தில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் அறநெறிசார் அரசியல் பண்பாட்டை வளர்க்க உதவ வேண்டும்.


சிவில் சமூக அமைப்புகள் - மக்களின் உண்மையான தேவைகளையும் அபிலாஷைகளையும் அரசியல் விவாதங்களின் மையத்திற்குக் கொண்டுவர வேண்டும்.


இளைஞர்கள் மற்றும் பெண்கள் - தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியல் செயற்பாடுகளில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும்.


பொதுமக்கள் - கட்சி விசுவாசத்தைவிடக் கொள்கைகள், பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


இவர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் தனித்தனியாகச் செயற்படுவதுடன் நின்றுவிடாமல், பொதுவான அரசியல் இலக்குகளை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.


இந்தக் கட்டமைப்பு எந்தவொரு தனிப்பட்ட கட்சியின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது. அதேபோல், எந்தவொரு தனிநபரின் தலைமையையும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகக் கருதக்கூடாது.


அனைவருக்கும் கருத்துரிமை, பங்கேற்புரிமை, விமர்சன உரிமை மற்றும் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்.


ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதல்ல.கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் பொதுவான இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயற்படுவதுதான்.


06. எமக்குத் தேவை தேர்தல் வெற்றி மட்டுமல்ல.  நிரந்தரமான அரசியல் தீர்வு.


தேர்தல்கள் ஜனநாயகத்தின் முக்கியமான ஓர் அங்கமாகும்.


மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் தேர்தல்கள் அவசியமானவை.


ஆனால், தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே தமிழர் அரசியலின் இறுதி இலக்காகிவிட முடியாது.


தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் என்ன செய்யப்போகிறோம்.


தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான திட்டம் என்ன.


அந்தத் தீர்வை அடைவதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும்?


மக்களின் நில உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான நீதி, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் அணுகுமுறை என்ன.


இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைக் கொண்ட அரசியல் வேலைத்திட்டம் நமக்குத் தேவை.


கட்சிகள் தத்தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதுடன் நின்றுவிடாமல், பொதுவான பிரச்சினைகளில் இணைந்து செயற்படக்கூடிய நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும்.


அந்தச் செயற்பாடுகளின் முன்னேற்றம் வெளிப்படையாக மதிப்பிடப்பட வேண்டும். மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கான பொறுப்புக்கூறல் முறையும் இருக்க வேண்டும்.


எமது அரசியல் பயணம் தேர்தல் வெற்றியுடன் முடிவடையக் கூடாது. தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான நிலையான தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.


07. 75 ஆண்டுகாலப் போராட்ட வரலாறு எமக்குச் சொல்லும் பாடம்.


எமது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.


பல தசாப்தங்களாக எமது மக்கள் பல்வேறு வழிகளில் தமது உரிமைகளைக் கோரிப் போராடி வந்துள்ளனர்.


சத்தியாக்கிரகப் போராட்டங்கள், மறியல் போராட்டங்கள், சட்டமறுப்புப் போராட்டங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள், ஆயுதப் போராட்டங்கள் எனப் பல்வேறு வரலாற்றுக் கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறோம்.


இந்தப் போராட்டப் பாதையில் எண்ணற்ற உயிர்களை இழந்திருக்கிறோம். குடும்பங்களை இழந்திருக்கிறோம். உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட துயரத்தைச் சுமந்திருக்கிறோம். உடல் உறுப்புகளை இழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் எனப் பெரும் சமூக விலையைக் கொடுத்திருக்கிறோம்.


எமது மக்களின் வரலாறு என்பது வெறும் அரசியல் தலைவர்களின் வரலாறு மட்டுமல்ல.


அது மக்களின் தியாகங்களாலும், போராட்டங்களாலும், இழப்புகளாலும், நம்பிக்கைகளாலும் எழுதப்பட்ட வரலாறாகும்.


அந்த வரலாற்றின் வழியாக வந்தவர்கள் நாம்.


எனவே, கடந்த காலத்தை நினைவு கூர்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், அதிலிருந்து பாடங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.


கடந்த காலத்தில் எமது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட வெற்றிகளையும் தோல்விகளையும் நேர்மையாக ஆராய வேண்டும்.


எமது பலவீனங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.


கடந்த காலத் தியாகங்களை மதிப்பதற்கான சிறந்த வழி, அவற்றை அரசியல் போட்டிகளுக்கான கருவியாகப் பயன்படுத்துவது அல்ல. அடுத்த தலைமுறைக்கு ஒரு தெளிவான அரசியல் பாதையை உருவாக்கிக் கொடுப்பதுதான்.


அந்தப் பொறுப்பு இன்றைய தலைமுறையினரான எம் அனைவருக்கும் இருக்கிறது.


08. எனது கருத்தின் இறுதி நோக்கம் என்ன.


எனது பதிவுகளைப் படிப்பவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் அழிக்க வேண்டும் என்று கூறவில்லை.


எந்தவொரு அரசியல் தலைவரும் அரசியலில் இருக்கக்கூடாது என்றும் கூறவில்லை.


மாறாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்கு அப்பால் சென்று, தமிழ் மக்களின் பொதுவான அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்த வேண்டும் என்றே வலியுறுத்துகிறேன்.


கட்சிகள் இருக்கட்டும். தலைவர்கள் இருக்கட்டும். அரசியல் போட்டிகளும் இருக்கட்டும்.


ஆனால், அவற்றுக்கு மேலாக எமது மக்களின் உரிமைகளும் எதிர்காலமும் இருக்க வேண்டும்.


தனிப்பட்ட தலைமைத்துவத்தைவிடக் கொள்கை மேலானதாக இருக்க வேண்டும். கட்சி நலனைவிட மக்கள் நலன் மேலானதாக இருக்க வேண்டும். தேர்தல் வெற்றியைவிட நிரந்தரமான அரசியல் தீர்வு மேலானதாக இருக்க வேண்டும்.


இதுவே நான் வலியுறுத்தும் அரசியல் அணுகுமுறை.


வடக்கு–கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், முன்னாள் போராளிகளும், கல்விமான்களும், புத்திஜீவிகளும், மதத் தலைவர்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும், இளைஞர்களும், பெண்களும் பொதுவான அரசியல் இலக்குகளை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.


கருத்து வேறுபாடுகளைக் கலந்துரையாடல்களின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் போட்டிகளை ஆரோக்கியமான ஜனநாயகப் போட்டிகளாக மாற்ற வேண்டும். மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.


அதன் மூலம், தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் எதிர்காலத்தையும் முன்னிறுத்தும் வலுவான, ஜனநாயகமான, பொறுப்புக்கூறக்கூடிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடியும்.


அந்தக் கட்டமைப்பின் ஊடாகவே, எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான நிரந்தரமான தீர்வை நோக்கி நாம் ஒருங்கிணைந்த பயணத்தை முன்னெடுக்க முடியும்.


இதுவே எனது நிலைப்பாடும் கருத்தும் இறுதியாக நான் சொல்லிக் கொள்வது.


எனது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு, நான் எதை வலியுறுத்துகிறேன் என்பது நிச்சயமாகப் புரிந்திருக்கும்.


நான் எழுதுவது யாரையும் மகிழ்விப்பதற்காக அல்ல. யாரையும் பகைத்துக்கொள்வதற்காகவும் அல்ல.


எனது எழுத்துகள் சிலருக்கு உடன்பாடாக இருக்கலாம்; சிலருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். அது இயல்பானதே.


ஆனால், எனது கருத்துகளை அரசியல் கட்சி சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டும் அணுகாமல், அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.


எனது கேள்வி எந்தக் கட்சியிடம் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்பதல்ல. எமது மக்களின் உரிமைகளுக்காக நாம் எவ்வளவு தூரம் ஒன்றிணைந்து பயணித்திருக்கிறோம் என்பதுதான்.


எனது கவலை யார் தலைவராக வர வேண்டும் என்பதல்ல. எமது மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வலுவான கட்டமைப்பை யார், எவ்வாறு உருவாக்கப்போகிறார்கள் என்பதுதான்.


எனது இலக்கு தேர்தல் வெற்றி மட்டுமல்ல. எமது மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளுக்கான நிரந்தரமான தீர்வை நோக்கிய பயணமாகும்.


75 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் போராட்ட வரலாற்றையும், எண்ணற்ற உயிர்த் தியாகங்களையும், அளவிட முடியாத இழப்புகளையும் சுமந்து நிற்கும் ஒரு சமூகமாக நாம் இன்னும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டும், தலைமைத்துவப் போட்டிகளில் சிக்கிக்கொண்டும் காலத்தைக் கடத்த முடியாது.


இனியும் மௌனமாக இருப்பதோ, எமது அரசியல் பலவீனங்களைப் பார்த்துக்கொண்டு கடந்து செல்வதோ தீர்வாகாது.


ஒற்றுமை வேண்டும்.

பொதுவான அரசியல் கொள்கை வேண்டும்.

தெளிவான செயற்திட்டம் வேண்டும்.

பொறுப்புக்கூறக்கூடிய தலைமைத்துவம் வேண்டும்.

எமது மக்களின் உரிமைகளுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிய பயணம் வேண்டும்.


இதற்காகவே முன்னாள் போராளிகள், அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது மௌனங்களைக் கலைத்து, ஜனநாயக வழியில் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.


இது எந்தவொரு கட்சிக்கும் எதிரான அரசியல் அல்ல. எமது மக்களின் எதிர்காலத்திற்காக முன்வைக்கப்படும் எனது அரசியல் சிந்தனை.


எனது எழுத்துகள் தனிநபர்களை உயர்த்துவதற்காக அல்ல. எமது மக்களின் அரசியல் எதிர்காலத்தை உயர்த்துவதற்காகவே.


நான் முன்னிறுத்துவது தனிப்பட்ட வெற்றியை அல்ல. எமது மக்களின் உரிமைகளையும் ஒற்றுமையையும் நிரந்தரமான அரசியல் தீர்வையும் நோக்கிய பொதுவான பயணத்தையே.


இதுவே எனது நிலைப்பாடு. இதுவே எனது பதிவுகளின் அடிப்படை நோக்கம்.


#இப்படிக்கு_போராளி_கர்த்தகன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.