தமிழ்த் தேசியம் புலிகளின் தனியுடைமையல்ல; புலி எதிர்ப்பும் தமிழ்த் தேசிய மறுப்புக்கான உரிமமுமல்ல!

 


தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் புலித் தேசியவாதிகள் அல்லர். புலித் தேசியவாதிகள் அனைவரும் தமிழ்த் தேசியவாதிகளும் அல்லர். படியுங்கள் – விவாதியுங்கள்!


தமிழ்த் தேசியம் புலிகளின் தனியுடைமையல்ல; புலி எதிர்ப்பும் தமிழ்த் தேசிய மறுப்புக்கான உரிமமுமல்ல!


தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் புலித் தேசியவாதிகள் அல்லர். அதேபோன்று புலித் தேசியவாதிகள் அனைவரும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் அடிப்படைகளை உள்வாங்கியவர்களும் அல்லர்.


இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள மறுப்பதிலிருந்துதான் நமது அரசியல் உரையாடல்களின் பெரும்பாலான முரண்பாடுகளும், அபத்தங்களும், அவதூறுகளும் தொடங்குகின்றன.


தமிழ்த் தேசியத்தையும் புலித் தேசியத்தையும் ஒன்றாக்கி, ஒன்றின் அடையாளத்தை மற்றொன்றின் மீது வலிந்து திணித்து, அதற்குள் நின்றுகொண்டு முட்டி மோதுவதையே அரசியல் விவாதமாகக் கருதும் ஒரு விசித்திரமான சூழலுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


தமிழ்த் தேசியம் என்பது ஒரு மக்களின் அரசியல் இருப்பு, வரலாற்று அடையாளம், மொழி, பண்பாடு, நிலம், கூட்டுரிமைகள், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றோடு தொடர்புடைய அரசியல் கருத்தியல். புலித் தேசியம் என்பது அந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மேலாதிக்கம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் அரசியல், இராணுவ அணுகுமுறைகளையும் மையப்படுத்திய அரசியல் அடையாளம்.


இவை இரண்டும் வரலாற்றின் ஒரு கட்டத்தில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன என்பதற்காக இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.அப்படியான முடிவு வரலாற்றை மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தின் அரசியல் பரப்பையும் குறுக்கிவிடுகிறது.


தமிழ்த் தேசியத்தின் வரலாறு புலிகளோடு தொடங்கியதல்ல!


இலங்கைத் தமிழர்களின் தேசிய அரசியல் என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றத்தோடு ஆரம்பமான ஒன்றல்ல. காலனித்துவ ஆட்சியின் இறுதிக்கட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் மாற்றங்களிலும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம், மொழியுரிமை, சமத்துவம், பிராந்தியத் தன்னாட்சி போன்ற கோரிக்கைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்தன.


1956ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மக்களின் மொழியுரிமை தொடர்பான போராட்டங்கள், 1958ஆம் ஆண்டின் இனவன்முறைகள், 1961ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகப் போராட்டம், 1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பு ஏற்படுத்திய அரசியல் அதிருப்திகள் எனப் பல வரலாற்று அனுபவங்களின் ஊடாகத் தமிழ்த் தேசிய அரசியல் மேலும் வலுப்பெற்றது.


1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர்களின் அரசியல் சுயநிர்ணயக் கோரிக்கையைத் தனிநாட்டுக் கோரிக்கையாக வெளிப்படுத்திய முக்கியமான அரசியல் திருப்புமுனையாக அமைந்தது.


இவையெல்லாம் விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய அரசியலில் ஏகபோகச் செல்வாக்கைப் பெறுவதற்கு முன்னரே நிகழ்ந்தவை. ஆகவே, தமிழ்த் தேசியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஒரு தனி ஆயுத இயக்கத்திற்குள் அடக்கிவிடுவது வரலாற்றுரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் தவறானது.


தமிழ்த் தேசியம் என்பது ஒரே தலைவரால் உருவாக்கப்பட்டதோ, ஒரே இயக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டதோ, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திடீரெனத் தோன்றியதோ அல்ல.


அது பல தலைமுறைகளின் அரசியல் அனுபவங்களாலும், உரிமை மறுப்புகளாலும், எதிர்ப்புப் போராட்டங்களாலும், அறிவுசார் விவாதங்களாலும், மக்களின் கூட்டு உணர்வுகளாலும் வளர்ந்த கருத்தியல்.


அதன் உருவாக்கத்தில் அரசியல் தலைவர்களுக்கும் பங்குண்டு. ஆயுத இயக்கங்களுக்கும் பங்குண்டு. இடதுசாரிகளுக்கும் பங்குண்டு. மாணவர் இயக்கங்களுக்கும் பங்குண்டு. தொழிற்சங்கங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் பங்குண்டு.


அந்த வரலாற்றை ஒரே இயக்கத்தின் பெயருக்கு எழுதிக் கொடுப்பது ஏனைய அனைவருடைய பங்களிப்பையும் அழிப்பதற்குச் சமமானது.


புலிகளின் ஏகபோகமும் தமிழ்த் தேசியத்தின் சுருக்கமும்!


தமிழ் ஆயுதப் போராட்டம் பல்வேறு இயக்கங்களுடன் ஆரம்பித்தது. அவற்றுக்கிடையே அரசியல் கோட்பாடுகளிலும், போராட்ட வழிமுறைகளிலும், சமூகப் பார்வைகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் விடுதலைப் புலிகள் இராணுவ மேலாதிக்கத்தைப் பெற்றதுடன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பிரதான பிரதிநிதியாகவும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டனர். அந்த மேலாதிக்கம் தமிழ்த் தேசிய அரசியலிலும் ஏகபோக உரிமைகோரலாக விரிவடைந்தது.


தமிழ்த் தேசியத்தைப் பேசுவதற்கும், தமிழர் விடுதலையை வலியுறுத்துவதற்கும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும் புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளோடு உடன்பட வேண்டும் என்ற சூழல் உருவாக்கப்பட்டது. மாற்றுக் கருத்துகளுக்கான அரசியல் வெளியும் பல சந்தர்ப்பங்களில் சுருக்கப்பட்டது.


புலிகளின் ஆயுதப் போராட்ட வழிமுறைகளையும், உட்புற ஜனநாயக அணுகுமுறைகளையும், மாற்று இயக்கங்கள் மீதான வன்முறைகளையும், அரசியல் படுகொலைகளையும் விமர்சித்தவர்கள் தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். இங்கேதான் மிக முக்கியமான அரசியல் முரண்பாடு உருவானது.


ஒரு விடுதலை இயக்கத்தை எதிர்ப்பது, அந்த இயக்கம் போராடுவதாகக் கூறிய மக்களின் உரிமைகளை எதிர்ப்பதாகிவிடாது.


புலிகளின் அரசியல், இராணுவ வழிமுறைகளை நிராகரித்த ஒருவர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள முடியும்.


புலிகளின் ஏகபோக அரசியலை எதிர்த்த ஒருவர் தமிழ் மக்களின் தேசிய இன அடையாளத்தை உறுதியாக வலியுறுத்த முடியும்.


புலிகளின் மனித உரிமை மீறல்களை விமர்சித்த ஒருவர் இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளையும், பொதுமக்கள் மீதான வன்முறைகளையும், காணாமலாக்கல்களையும், அரசியல் அடக்குமுறைகளையும் அதே தீவிரத்துடன் எதிர்க்க முடியும்.


இதில் எந்த முரண்பாடும் இல்லை. உண்மையில், அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்தான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தைப் பாதுகாக்க முயன்றவர்களாகவும் இருக்க முடியும்.


புலிகளை எதிர்த்தால் தமிழ்த் தேசியவாதியாக இருக்க முடியாதா?


தமிழ் அரசியல் பரப்பில் நீண்டகாலமாக நிலவும் அபத்தமான கேள்விகளில் இதுவும் ஒன்று. தமிழ்த் தேசியக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதற்குப் புலிகளின் அனைத்துச் செயல்களையும் நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை.


அதேபோன்று புலிகளை எதிர்ப்பதற்காகத் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளையே நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த இரண்டிற்கும் இடையே மிகப் பரந்த அரசியல் வெளி இருக்கிறது.


அந்த வெளியில் இடதுசாரித் தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். ஜனநாயகத் தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்துபவர்கள் இருக்கிறார்கள். சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியபடியே ஆயுதப் போராட்டத்தின் வழிமுறைகளை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.


தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை அங்கீகரித்தபடியே தமிழ்ச் சமூகத்திற்குள் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, பாலின அசமத்துவம், அதிகார ஏகபோகம், அரசியல் வன்முறை போன்றவற்றையும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் புலி ஆதரவாளர்கள் அல்லது புலி எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பெட்டிகளுக்குள் அடைத்துவிட முடியாது.


தமிழ்த் தேசியம் என்பது ஒரு மக்களின் அரசியல் உரிமை தொடர்பான கோட்பாடு. அது எந்தவொரு இயக்கத்திற்குமான விசுவாசப் பரீட்சையல்ல. இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதவர்களால் தமிழ்த் தேசியம் பற்றிய ஆழமான அரசியல் உரையாடலை முன்னெடுக்க முடியாது.


அரசாங்கங்களின் பார்வையும் நமது அரசியல் வறுமையும்!


இலங்கையில் ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்களின் அரசியல் அணுகுமுறைகளில் தமிழ்த் தேசியக் கோரிக்கைகளையும் விடுதலைப் புலிகளின் அரசியலையும் ஒன்றாகப் பார்க்கும் போக்கு காணப்பட்டது.


தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுபவர்களும், அரசியல் அதிகாரப் பகிர்வை வலியுறுத்துபவர்களும், போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதிகோருபவர்களும் பல சந்தர்ப்பங்களில் புலி ஆதரவாளர்களாகவோ பிரிவினைவாதிகளாகவோ சித்தரிக்கப்பட்டனர். இது தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளைப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாற்றிப் பார்க்கும் அரசியல் அணுகுமுறைக்கு வழிவகுத்தது.


ஆனால் இதைவிட வேதனையான விடயம் என்னவென்றால், இதே அணுகுமுறை தமிழ்ச் சமூகத்திற்குள்ளும் ஆழமாக வேரூன்றியிருப்பதுதான்.

புலிகளை விமர்சித்தால் துரோகி.

தமிழ்த் தேசியத்தைப் பேசினால் புலி.


இந்த இரண்டு முத்திரைகளுக்கும் இடையே நமது அரசியல் விவாதங்கள் சிக்கித் தவிக்கின்றன. ஒருவர் என்ன அரசியல் கோட்பாட்டைப் பேசுகிறார் என்பதை ஆராய்வதைவிட அவர் புலிகளை ஆதரித்தாரா, எதிர்த்தாரா என்பதையே அவரது அரசியல் அடையாளத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலாக மாற்றிவிட்டோம். இதனால் சிந்தனைகளுக்கு இடையிலான விவாதங்கள் மறைந்து, மனிதர்களுக்கிடையிலான வசைபாடல்களே அரசியலாகிவிட்டன.


சோதி வாத்தியின் மரணம் மீண்டும் எழுப்பிய கேள்வி!


எனது நீண்டகால நண்பர் சோதி வாத்தியின் மறைவுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள விவாதங்களையும், அவருக்கு வழங்கப்படும் அரசியல் அடையாளங்களையும் பார்க்கும்போதுதான் இந்தப் பதிவை எழுத வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.


சோதி வாத்தியைப் பற்றிய எனது மதிப்பீடு வெறும் சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையில் உருவானதல்ல. 1970களிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகளுடனும், பின்னர் மக்கள் சார்ந்த அரசியல் செயற்பாடுகளுடனும் தனது வாழ்க்கையை இணைத்துக்கொண்ட ஒருவர் சோதி வாத்தி. தமிழ்த் தேசியம் பேசிய பலரும், தமிழர் விடுதலைக்காகப் போராடிய பலரும் புலம்பெயர்ந்த சூழலிலும் தனது மண்ணில், தனது மக்களுடன் வாழ்ந்து, அங்கேயே தனது இறுதிமூச்சையும் விட்டவர்.


இதனைப் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்காக நான் குறிப்பிடவில்லை. மாறாக, சோதி வாத்தியின் அரசியல் வாழ்வுக்கும் அவர் வாழ்ந்த சமூகத்திற்கும் இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டுவதற்காகவே குறிப்பிடுகிறேன்.


ஒருவரின் அரசியல் நேர்மையை அவர் வாழ்ந்த இடம் மட்டுமே தீர்மானிப்பதில்லை. ஆனால் அவர் தனது நம்பிக்கைகளுக்காக மேற்கொண்ட வாழ்க்கைத் தேர்வுகளையும் புறக்கணித்துவிட முடியாது. இத்தகைய ஒருவரை, அவர் தமிழ்த் தேசியத்தில் உறுதியாக நின்றார் என்ற ஒரே காரணத்திற்காகப் புலித் தேசியவாதியாக அடையாளப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?


அவரது அரசியல் கருத்துகளில் விமர்சிக்கப்பட வேண்டியவை இருந்தால் விமர்சியுங்கள். அவர் எடுத்த நிலைப்பாடுகளில் முரண்பாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அவர் பேசிய கருத்துகளையும், எழுதியவற்றையும், மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகளையும் ஆதாரங்களுடன் விவாதியுங்கள். ஆனால் அவரது முழு அரசியல் வாழ்க்கையையும் ஒரு வசதியான முத்திரைக்குள் அடைத்துவிடாதீர்கள்.


ஒரு மனிதனின் பல தசாப்த அரசியல் வாழ்க்கையை, அவரது மறைவுக்குப் பின்னர் ஒரு சொல்லுக்குள் சுருக்கிவிடுவது விமர்சனமல்ல. அது வரலாற்றைச் சிதைப்பது. இது சோதி வாத்திக்கு மட்டும் பொருந்தும் விடயமல்ல. தமிழ்த் தேசியத்தில் உறுதியாக நின்றபடியே புலிகளின் அரசியலோடு முரண்பட்ட பலரும் இன்றும் இத்தகைய முத்திரை குத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.


புலி எதிர்ப்புக் காய்ச்சலும் புலி விசுவாசக் காய்ச்சலும்!


இங்கே இரண்டு வகையான அரசியல் மனநிலைகள் குறித்து நாம் வெளிப்படையாகப் பேச வேண்டியுள்ளது.

ஒரு தரப்பினர் புலிகளை எதிர்ப்பதையே தமது அரசியல் அடையாளத்தின் மையமாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்கள். தமிழர் தாயகம் பற்றிப் பேசினால் புலி. சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசினால் புலி. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டால் புலி. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் கேட்டால் புலி. தமிழ் மக்களின் கூட்டு அரசியல் உரிமைகளை வலியுறுத்தினால் புலி.


இத்தகைய அணுகுமுறை புலிகளை விமர்சிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளையே சந்தேகத்திற்கு உள்ளாக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறது. இதனை நான் புலி எதிர்ப்புக் காய்ச்சல் என்றே அழைக்க விரும்புகிறேன்.


புலி விசுவாசக் காய்ச்சல்!

மறுபுறத்தில் இன்னொரு தரப்பினர் இருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை புலிகளின் அரசியல் முடிவுகளையும், போராட்ட வழிமுறைகளையும், வரலாற்றுத் தவறுகளையும் விமர்சிப்பவர்கள் அனைவரும் துரோகிகள். புலிகளின் ஏகபோக அரசியலை விமர்சித்தால் துரோகி. மாற்று இயக்கங்கள் மீதான வன்முறைகளைப் பேசினால் துரோகி. ஜனநாயக மறுப்புகளைச் சுட்டிக்காட்டினால் துரோகி. புலிகளின் அரசியல் முடிவுகளை வரலாற்றுரீதியாக மறுபரிசீலனை செய்ய முயன்றால் துரோகி. இது புலி விசுவாசக் காய்ச்சல்.


ஒரு தரப்பினர் புலிகளை எதிர்ப்பதற்காகத் தமிழ்த் தேசியத்தையே நிராகரிக்கின்றனர். மற்றொரு தரப்பினர் புலிகளைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தையே நிராகரிக்கின்றனர்.


இரண்டு தரப்பினரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் இறுதியில் சந்திக்கும் இடம் ஒன்றுதான். அது மாற்றுக் கருத்துகளுக்கான இடமின்மை. அது அரசியல் சகிப்புத்தன்மையின்மை. அது வரலாற்றைத் தமது வசதிக்கேற்பச் சுருக்கிக்கொள்ளும் மனநிலை.


தமிழ்த் தேசியத்தை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதப் பொருளாக்கவும் முடியாது!


இன்னொரு விடயத்தையும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ்த் தேசியம் என்பது வரலாற்று அனுபவங்களின் ஊடாக உருவான அரசியல் கருத்தியல் என்பதற்காக அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகிவிடாது. தமிழ்த் தேசிய அரசியலுக்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன.


சாதியம் பற்றிய அதன் அணுகுமுறை, பெண்களின் அரசியல் பங்கேற்பு, முஸ்லிம் மக்களுடனான உறவு, மலையகத் தமிழர்களின் தனித்துவமான அரசியல் அபிலாஷைகள், மாற்றுக் கருத்துகளுக்கான இடம், ஜனநாயகப் பண்பாடு, ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றுப் படிப்பினைகள் எனப் பல கேள்விகள் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியவை.


தமிழ்த் தேசியம் என்பது தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுக்கும் அரசியலாக மாறிவிடக்கூடாது. தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை வலியுறுத்துகின்ற அதேவேளையில், ஏனைய மக்களின் சம உரிமைகளையும் அங்கீகரிக்கும் ஜனநாயகப் பண்பு அதற்கு அவசியமானது. ஒரு மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் தமது சமூகத்திற்குள்ளேயே கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது அரசியல் முரண்பாடாகும். அதிகார ஒடுக்குமுறையை எதிர்க்கின்றவர்கள் தாமே அதிகார ஏகபோகத்தை நியாயப்படுத்த முடியாது.


விடுதலை என்பது ஒரு தேசிய இனத்தின் மீதான வெளிப்புற ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல. அந்தச் சமூகத்திற்குள்ளேயே நிலவும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடுவதாக இருக்க வேண்டும். அத்தகைய ஜனநாயக, சமூகநீதி சார்ந்த பார்வையுடன் தமிழ்த் தேசியத்தை அணுகுபவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடைத்துவிடுவது அறிவுசார் நேர்மையற்ற செயல்.


வரலாற்றை மறுப்பதற்குப் பதிலாக அதிலிருந்து கற்றுக்கொள்வோம்!


விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் சமகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் என்பதை மறுக்க முடியாது. அவர்களது ஆயுதப் போராட்டமும், அரசியல் செயற்பாடுகளும், தியாகங்களும், வெற்றிகளும், தோல்விகளும், தவறுகளும், அவற்றால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் ஏற்பட்ட விளைவுகளும் வரலாற்று ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டியவை. அந்த வரலாற்றை முழுமையாகப் புனிதப்படுத்துவதும் தவறு. முழுமையாக அழித்துவிட முயல்வதும் தவறு. புலிகளை விமர்சிப்பதற்காகத் தமிழ் மக்களின் வரலாற்று அநீதிகளை மறுக்க முடியாது.


அதேபோன்று தமிழ் மக்கள் எதிர்கொண்ட அநீதிகளை முன்னிறுத்திப் புலிகளின் அனைத்துச் செயல்களையும் நியாயப்படுத்தவும் முடியாது. ஒரு அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதும், ஓர் ஆயுத இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதும் ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகள் அல்ல. அவை இரண்டும் ஒரே ஜனநாயக அறநெறியின் வெளிப்பாடுகளாக இருக்க முடியும். அரசியல் நேர்மை என்பது நாம் ஆதரிக்கும் தரப்பின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல. நாம் ஆதரிக்கும் தரப்பு தவறு செய்யும்போதும் அதனைத் தவறு என்று சொல்லும் துணிவுதான் அரசியல் நேர்மை.


இறுதியாக...

சோதி வாத்தியின் மரணம் என்னுள் ஏற்படுத்தியுள்ள வெறுமையோடு, அவரது மறைவுக்குப் பின்னர் எழுந்துள்ள அரசியல் விவாதங்களும் என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டின. இது சோதி வாத்தியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக நிலை நிறுத்துவதற்கான முயற்சியல்ல. அவரது எல்லா அரசியல் கருத்துகளுடனும் நான் உடன்பட்டவன் என்பதற்கான பிரகடனமும் அல்ல. அவருடன் முரண்பட்டிருக்கிறேன். வாதிட்டிருக்கிறேன். அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் நம்பிய அரசியலுக்காகத் தொடர்ந்து சிந்தித்தவர், பேசியவர், செயற்பட்டவர் என்ற உண்மையை மறுக்க முடியாது.


அவரைப் போன்றவர்களின் அரசியல் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அவர்கள் எதிர்கொண்ட அரசியல் சூழலையும், அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளையும், அவர்கள் கொண்டிருந்த முரண்பாடுகளையும் சேர்த்தே பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக ஒருவரைப் புலி என்றும் மற்றொருவரைத் துரோகி என்றும் முத்திரை குத்துவது மிக எளிது. ஆனால் அந்த எளிமைதான் நமது அரசியல் சிந்தனையின் வறுமையை வெளிப்படுத்துகிறது.


தமிழ்த் தேசியம் புலிகளுக்கு முன்னரும் இருந்தது. புலிகளின் காலத்திலும் பல்வேறு கருத்தியல் முரண்பாடுகளுடன் இருந்தது. புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும் அது அரசியல் உரையாடல்களிலும் உரிமைசார் போராட்டங்களிலும் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. ஏனெனில் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையான அரசியல் கேள்விகள் ஒரு இயக்கத்தின் தோற்றத்தோடும் மறைவோடும் முடிந்துவிடுபவை அல்ல.


அதேநேரத்தில் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் அதன் கடந்தகாலத்தை மீண்டும் மீண்டும் உணர்ச்சி பூர்வமாகக் கொண்டாடுவதில் மட்டும் இல்லை. அந்த வரலாற்றை விமர்சனபூர்வமாக அணுகி, அதன் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, ஜனநாயகத்தையும் சமூகநீதியையும் அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் உரையாடலை உருவாக்குவதில்தான் இருக்கிறது.


புலிகளை எதிர்ப்பதற்காகத் தமிழ்த் தேசியத்தை எதிர்க்க வேண்டியதில்லை. - தமிழ்த் தேசியத்தை நேசிப்பதற்காகப் புலிகளின் அனைத்துச் செயல்களையும் நியாயப்படுத்த வேண்டியதில்லை.

புலிகளை விமர்சிப்பவர்கள் அனைவரும் தமிழின விரோதிகளல்லர். - தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துபவர்கள் அனைவரும் புலி ஆதரவாளர்களுமல்லர்.


இந்த எளிய அரசியல் உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு வர வேண்டும். ஒருவரின் அரசியல் கருத்தை அவரது சொந்த வார்த்தைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் மதிப்பிடுவோம். நாம் அவருக்கு வழங்க விரும்பும் முத்திரையிலிருந்து அல்ல. மாற்றுக் கருத்தைத் துரோகமாகவும், தேசிய உரிமைக் கோரிக்கையைப் பயங்கரவாத ஆதரவாகவும் சித்தரிக்கும் அரசியல் பண்பாட்டிலிருந்து வெளியே வருவோம்.


இறந்தவர்களின் அரசியல் வாழ்க்கையை அவர்களால் இனி பதிலளிக்க முடியாது என்ற துணிச்சலில் சிதைக்காமல், அவர்களது பங்களிப்புகளையும் முரண்பாடுகளையும் நேர்மையுடன் விவாதிப்போம். 


தமிழ்த் தேசியம் எந்தவொரு இயக்கத்தினதும் தனியுடைமையல்ல. அதேபோன்று புலி எதிர்ப்பு என்பது தமிழ்த் தேசியத்தை நிராகரிப்பதற்கான அரசியல் உரிமமும் அல்ல.


 இந்த இரண்டையும் பிரித்துப் புரிந்துகொள்ளத் தொடங்கும் நாளில்தான் நமது அரசியல் உரையாடல்கள் வசைபாடல்களிலிருந்து விடுபட்டு அறிவார்ந்த விவாதங்களாக மாறும். சோதி வாத்தியின் மறைவுக்குப் பின்னராவது அந்த அரசியல் பண்பாட்டை வளர்த்துக்கொள்ள முயல்வோம்.


ஒரு மனிதனை அவரது அரசியல் கருத்துகளுக்காக விமர்சிக்கலாம். ஆனால் அவரது வாழ்நாள் முழுவதுமான அரசியல் பங்களிப்பை ஒரு முத்திரையால் அழித்துவிட முடியாது. அதுவே சோதி வாத்தி போன்றவர்களின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களில் ஒன்று. அதுவே இந்தப் பதிவின் நோக்கமும்.


#நடராஜா_குருபரன் #ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalists #TamilNationalism #TamilPolitics #PoliticalPluralism #FreedomOfExpression #Democracy #SelfDetermination #SriLankanTamils #PoliticalHistory #SocialJustice


இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.