தாய் மகன் மரணம்!!

 



தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் சில மணி நேரத்திலேயே உயிரிழந்த அநுராதபுரம் ஊடகவியலாளர் இப்ஹாம் - சோகத்தில் மூழ்கிய ஊடகத்துறை!



அநுராதபுரத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் அப்துல் ஹமீட் முஹம்மட் இப்ஹாம் (வயது 44), தனது தாயார் காலமான சில மணி நேரத்திலேயே தாயின் பிரிவுத்துயரால் உயிரிழந்த சம்பவம், இலங்கை ஊடகத்துறையையும் அநுராதபுரம் பிரதேச மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


​நொச்சியாகம முஸ்லிம் வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபரான ஹசன் பீவி ஹமீட் (வயது 77) நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) காலமானார். தனது அன்புத் தாயாரின் திடீர் பிரிவால் ஏற்பட்ட அதிர்ச்சியையும், ஆழமான துயரத்தையும் தாங்க முடியாமல் இருந்த அவரது மகன் ஊடகவியலாளர் இப்ஹாம், இன்று திங்கட்கிழமை (நவம்பர் 16) காலை உயிரிழந்தார்.


​குடும்பப் பின்னணி மற்றும் கல்வி

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹமீத் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் ஹசன் பீவி தம்பதியினரின் புதல்வரான இப்ஹாம், 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி நொச்சியாகமவில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நொச்சியாகம அல்-ஹிக்மா மகா வித்தியாலயத்திலும், அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியிலும் கற்றார்.

​அநுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எச். தம்ஸீர் ஹமீட்டின் சகோதரரே காலமான இப்ஹாம் ஆவார். ஒரே குடும்பத்தில் தாயும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


​ஊடகப் பணியும் மக்கள் சேவையும்

14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு தேசிய ஊடகங்களில் பணியாற்றிய இப்ஹாம், குறிப்பாக 'நியூஸ் பெஸ்ட்' (News1st) ஊடக வலையமைப்பின் அநுராதபுரம் பிராந்திய செய்தியாளராகவும், மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.


​வெறுமனே செய்தி சேகரிப்புடன் தன்னைச் சுருக்கிக் கொள்ளாத இவர், சிரச ஊடக வலையமைப்பின் மக்கள் சேவைத் திட்டங்களில் முன்னின்று உழைத்தார். குறிப்பாக, 'கம்மெத்த' (Gammadda) மக்கள் சேவைச் செயற்பாட்டின் ஆரம்ப காலம் முதல் கமராவுடன் கிராம வீதிகளில் நடந்து சென்று, எளிய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இப்ஹாம் ஆற்றிய பங்கு அளப்பரியது.

​இறுதி நல்லடக்கம்


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் (16) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நொச்சியாகம ஜும்ஆ பள்ளி மையவாடியில் நடைபெற்றது.

​#IfhamHameed #JournalistIfham #Anuradhapura #News1st #Gammadda #Nochchiyagama #SriLankaNews #TamilNews #MediaTribute #SriLanka #LKA #HeartbreakingNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.