பொலிஸ்மா அதிபர் மீது குற்றச்சாட்டு!!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான மையம் கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குறித்த தீர்ப்பினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு அல்லது ஏனைய பொருத்தமான சட்ட வழிமுறைகளின் ஊடாக சட்டமா அதிபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய, சட்டமா அதிபரிடம் பாரிய பொறுப்புகள் பல ஒப்படைக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தல், பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்தல், குறித்த நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கமைய ஏனைய தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியன அப்பொறுப்புகளில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் விதிக்கப்பட்ட அந்தப் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற சட்டமா அதிபர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபருக்கு நினைவூட்டப்பட்ட போதிலும், அது தொடர்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வலியுறுத்தி சுற்றாடல் நீதிக்கான மையம் இந்தக் கோரிக்கைக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
அக்கடிதம் கிடைக்கப்பெற்ற தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ள பணிகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்கள் குறித்து எழுத்துமூலமான தெளிவுபடுத்தலை வழங்குமாறும் சட்டமா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் சட்டமா அதிபரினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான பொருத்தமான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், தேவைப்படின் சட்டமா அதிபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் நீதிக்கான மையம் வலியுறுத்தியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை