இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய அதிகாரிகளின் சிறிலங்கா பயணம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஒன்பது பேர், மீண்டும் கடந்தமாதம் சிறிலங்காவுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.
இவர்கள் ஒன்பது பேரும், காடக்வாஸ்லாவில் உள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அகடமியில் 37 ஆவது கற்கைநெறியில் இணைந்திருந்தவர்களாவர்.
பின்னர் 1987-89 காலகட்டத்தில் இவர்கள் இந்திய அமைதிப்படையில் சிறிலங்காவில் பணியாற்றியிருந்தனர்.
தற்போது ஓய்வுபெற்றுள்ள இந்த அதிகாரிகள் ஒன்பது பேரும்,  சிறிலங்காவுக்கு கடந்த பெப்ரவரி மாதம் பயணம் செய்தனர்.
இவர்களின் குழு சிறிலங்காவின் வடபகுதியில் 9 நாட்கள் தங்கியிருந்து வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டது.
அந்தக் காலகட்ட நினைவுகளில் இருந்து விடுபடுவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று, மேஜர் ஜெனரல் ஜோஸ் மணவாளன் தெரிவித்தார்.
“அங்கு போரின் எந்த தடயமும் இல்லை. நாடு மாறி விட்டது.” என்று கூறினார் மேஜர் ஜெனரல் ஜோஸ் மணவாளன்.
இவர் யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் இந்திய அமைதிப்படையில் மேஜர் நிலை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.
இவர் அடர்ந்த காட்டுக்கு நடுவே உள்ள புளியங்குளம் தொடருந்து நிலையத்துக்கு அருகே, இந்திய அதிகாரியான மேஜர் மைக்கல் லூயிசின் கல்லறை அமைந்திருப்பதை நினைவுபடுத்தினார்.
இந்தக் குழுவினர், முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளையும் சந்தித்துள்ளனர்.விமானத்தில் சிறிலங்காவுக்கு அடிக்கடி வந்து சென்ற தனது நினைவுகளை மீட்ட ஹைதராபாத்தை சேர்ந்த விங்கொமாண்டர் உன்னி கார்தா, விடுதலைப் புலிகளின் போரிடும் திறனை மெச்சினார்.
“அவர்கள் வலுவாக இருந்தனர். அவர்களின் இராணுவம் ஒழுக்கமானதாக இருந்தது என்று கூறுவதற்கு நான் தயங்கமாட்டேன்.
ஆரம்பத்தில் இந்திய அமைதிப்படையை சிறிலங்காவில் வரவேற்றார்கள். அரசியல் சூழ்நிலைகள் மாறியதால் அவர்களின் பார்வை மாற்றமடைந்தது.” என்று அவர் கூறினார்.
ஒரு சோதனை விமானியாக விங்கொமாண்டர் கார்தா, திருவனந்தபுரம் மற்றும் சூலூர் விமானப்படைத் தளங்களில் இருந்து, யாழ்ப்பாணத்தின் பலாலி விமான தளத்துக்கு போக்குவரத்து விமானங்களில் பயணித்துள்ளார்.
சிறிலங்காவில் வடபகுதியில் உள்ள மக்களுக்கு உணவுப் பொதிகளை வீசிய ஒப்பரேசன் பூமாலை நடவடிக்கைக்குத் திட்டமிட்டது பற்றியுமு் அவர் நினைவுபடுத்தினார்.
அந்தப் போர் அடிப்படையில் இந்தியாவினுடையதல்ல.  சிறிலங்கா அரசுக்கும்  அங்குள்ள போராளிகளுக்கும் இடையிலான போரே அது என்ற வாதங்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, இந்த வினா மூன்று பத்தாண்டுகளின் பின்னர் தனது மனதிலும் உள்ளது என்று  மேஜர் ஜெனரல் மணவாளன் ஒப்புக் கொண்டார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.