இரத்தத்தில் உறைந்துவிட்ட டாம்போ..!

"தம்பி நான் கரும்புலியா போறனடா...." இப்பிடி அவன் சொன்ன போது கூடப்பிறந்த தம்பியாரின் மனநிலை சொல்ல முடியாதது. அண்ணா இன்னும் சில மணிநேரங்களில் சாக போகிறான் என்று தெரிந்தும் விழிகள் கலங்காது நிற்கிறான் அந்த போராளி. எதுவும் பேசவில்லை. அவன் மறுபக்கம் திரும்பிக் கொள்கிறான். அந்த பிரதேசம் பெரும் அதிர்வொலியால் அமைதியிழந்து பின் சுதந்திரமாகப் போகிறது என்ற உண்மை தெரிந்தும், அதற்கு தன் சகோதரனே காரணமாக போகிறான் என்று தெரிந்தும், கலக்கமற்று அவனிடமிருந்து பிரிந்து செல்கிறான்.

தம்பியின் மனதை அந்த கரும்புலியும் அறியாதவன் அல்ல. தம்பிகள் இருவரும் தங்கை ஒருத்தியுமாக பிறந்த தமிழன் அவன். வீட்டை விட்டு உறவுகளை விட்டு வீரவேங்கையாக 1986 மத்திய பகுதியில் உருவெடுத்த புலி அவன். 1987 ல் நெல்லியடியில் தன் உடலை வெடியாக்கி காவியமாகி புது அத்தியாயத்தின் ஒரு பக்கமாக உருவெடுக்க வேண்டும் என்ற உணர்வோடு இருந்தான். அதனாலே கரும்புலிகள் என்ற பெரும் வரலாற்றின் மூன்றாவது பக்கத்தில் மேஜர் டாம்போ என்று பதிவாகி விடுகிறான்.

நான் பிறந்த மண்ணில நான் தான் சாதிக்க வேண்டும். என்ற உத்வேகமும் ஆசையும் கொண்டவனாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது இலக்குக்கான சந்தர்ப்பத்தை சண்டை போட்டு வாங்கி பெரும் வெடியாகி போனான். பெற்ற தாயையும் பிறந்த நாட்டையும் எதிரியின் வன்பறிப்பில் இருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழத்தின் மீட்பனாக வெடியோடு வெடியாகினான்.

"சிலாவத்துறை " மன்னார் மாவட்டத்தின் பிரதான முகாம்களில் ஒன்றாக இருந்த நேரம். 1991 காலப்பகுதி. அதை துடைத்தழிக்க படையணிகள் தயாராகிய போது. தேசியத்தலைவரின் அனுமதிக்காக அடம்பிடித்த டாம்போ அதில் வெற்றியும் பெற்றான். சக்கை வண்டி தயாராகியது. புன்னகை ததும்ப சாரதியாகினான் டாம்போ... சண்டைக்கான ஒருங்கிணைப்புத் தளபதி டாம்போவிற்கான அனுமதி வழங்க வாகனம் வேகம் கொள்கிறது. சிலாவத்துறை முகாம் தகர்ப்பின் தடையகற்றி புன்னகையோடு சென்று கொண்டிருந்தான்.

எமது காவலரன் வேலி தாண்டி சென்ற வாகனம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய போது சிலாவத்தை படை முகாம் எங்கள் ஆளுகைக்குள் வந்திருந்தது. அவன் மட்டும் அந்த வெற்றியை பெற்றுத்தந்து விட்டு எந்த சலனமுமற்று காற்றோடு காற்றாக மண்ணோடு உரமாக வானத்தில் விழிதிறந்து காத்திருக்கிறான் எங்கள் விடியலுக்காக எம் கொடி வானில் எழும் என்ற நம்பிக்கையோடு.
<strong>-இரத்தினம் கவிமகன்-</strong>

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.