ஜெ.வின் அத்தனை இலவச திட்டங்களும் என்னுடையதே.. ‘உரிமை கோரிய’ நடராஜன் கடைசி பேட்டி!

ஜெயலலிதா அறிவித்த, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அத்தனை இலவச திட்டங்களும் தாம் போட்டுக் கொடுத்தவைதான் என சில மாதங்களுக்கு முன்னர் நடராஜன் அளித்த கடைசி பேட்டியில் வாதிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தமிழக அரசியலில் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா எனும் தலைவரின் அத்தியாயம் தொடங்கியது. இதன் தொடக்கம் முதல் கடைசிவரை நீடித்தது நடராஜனும் அவரது குடும்பமும்தான்.
ஜெயலலிதா முதல்வரான நிலையில் நடராஜனின் ஒட்டுமொத்த குடும்பமே சொத்துகளை வாங்கி குவித்து சர்ச்சைகளின் சங்கமமாக இருந்தது. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவின் ஆலோசகராக நடராஜன் இருந்தாலும் அவரை சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார் ஜெயலலிதா.

கோதாவை விட்டு கொடுக்காத எம்.என்.

இதனால் ஒருகட்டத்தில் நடராஜனை ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. ஆனாலும் தாமே ஜெயலலிதாவின் அட்வைசர் என்கிற கோதாவை நடராஜன் ஒருபோதும் விட்டதில்லை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முற்றாக நடராஜனை ஒதுக்கி வைத்த பின் அவ்வப்போது அரசியலில் விஸ்வரூபமெடுப்பேன் என பேசிவந்தார்.

தீவிர அரசியல் ஆசை

ஆனால் அப்படி எதுவும் நடராஜன் குதிக்கவில்லை. கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்பு தானம் பெற்று மீண்டு வந்த பின்னர் தீவிர அரசியலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது தந்தி தொலைக்காட்சிக்கு ஒரு நீண்ட பேட்டி அளித்தார். நடராஜனின் கடைசி பேட்டி அதுதான்.

ஜெ.வுக்கு எல்லாமே நான்

அதில் நடராஜன், ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல வி‌ஷயம் நான் எழுதிக் கொடுத்த அனைத்து வி‌ஷயங்களையும் ஒரு கமா, புல்ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியை கண்டார். ஜெயலலிதா அறிவித்த, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அத்தனை இலவச திட்டங்களும் என்னுடையது என கூறியிருந்தார்.

நடராஜனுக்கு கடும் எதிர்ப்பு

இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதிமுகவின் மதுசூதனன் போன்றவர்கள் நடராஜனின் இந்த கருத்தை மிகக் கடுமையாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.