அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் சந்திப்பு அடுத்த மாதம்!

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, அடுத்த மாதம் முதல் தமது சந்திப்புகளை மீள ஆரம்பிக்கவுள்ளது.

 அதில் அங்கம் வகிக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  இந்த தகவலை வழங்கியுள்ளார்.   எதிர்வரும் எட்டாம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில், அதன் பின்னர் தமது கூட்டத்தை அரசியலமைப்பு வழிநடத்தல் குழு நடத்தவுள்ளது.

 எனினும் இதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், திகதியை தீர்மானிப்பதற்காக விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 இறுதியாக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்றிருந்தது.

 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி பிரதமர் தலைமையில் இந்த குழு முதலாவது கூட்டத்தை நடத்தி இருந்தது.   பிரதமருடன், 21 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவில், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, நிமால் சிறிபால டி சில்வா, ரவுஃப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், மனோகணேசன், மலிக் சமரவிக்ரம ஆகியோரும், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அனுரகுமாரதிஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க, டக்ளஸ் தேவாநந்தா உள்ளிட்டவர்களும் அடங்குகின்றனர்.

Powered by Blogger.