பிரதமரை வெளியேறச் சொல்பவர்கள் அதற்கு முன் தாம் வெளியேற வேண்டும்!

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசுக்கெதிரானதே, அதனை நாம் பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் என அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்திற்கெதிராக செயற்படுபவர்கள் அதிலிருந்து வெளியேறலாம். பிரதமரை வெளியேறச் சொல்பவர்கள் அதற்கு முன் தாம் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஐ. தே. கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமியும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளிக்க அமைச்சர், கட்சிக்குள் மறுசீரமைப்பு அவசியமென்பதில் நாமும் உறுதியாகவுள்ளோம். எனினும் அதை வைத்து சிலர் எமது கட்சியை அழித்துவிட்டு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இதனால் தான் பிரதமருக்கு மட்டுமன்றி அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரப் பார்க்கின்றனர். நாம் இதனைத் தோற்கடிப்போம்.
பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். கட்சியின் வெளியிலிருந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். எனினும் கட்சிக்குள்ளிருந்து எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் கட்சி மீது மட்டுமன்றி அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லாதவர்கள். அதேபோன்று அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசு மீது நம்பிக்கையில்லாவிட்டால் அவர்கள் அதிலிருந்து பயனில்லை. அரசாங்கத்திலிருந்தே வெளியேறலாம்.
பிரதமரை நாளை 11 மணிக்கிடையில் வெளியேறச் சொல்பவர்கள் முதலில் அவர்கள் வெளியேற வேண்டும். நான் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியுறச் செய்வது உறுதி. 2015 ஜனவரி 08 இல் எம்மோடு இருந்த ஜனாதிபதி இப்போதும் எம்முடனேயே உள்ளார். அதனால் இதில் எந்த சந்தேகத்திற்குமிடமில்லை. இரண்டு, மூன்று பேர் மட்டுமே எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அவர்கள் கட்சியை மட்டுமன்றி அரசாங்கத்தையும் சீர் குலைப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். அவர்களுட்பட இதனை எதிர்ப்பவர்களுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
எமது கட்சி ஏன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். எனினும் மொட்டுக் கட்சி அது தொடர்பில் கவலையடையத் தேவையில்லை. எம்மை நாம் பார்த்துக்கொள்வோம். எமது எதிரிகள், அரசியல் துரோகிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.
நாம் அதனைத் தோற்கடிப்போம். அதனையடுத்து எதிர்வரும் 7, 8 ஆம் திகதிகளில் கட்சிக்குள் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் டீல் போட்டுக்கொண்டுள்ள கும்பலே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறானவர்கள் தயவுசெய்து அரசாங்கத்திலிருந்து வெளியேபோக வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தகையோரது கனவு ஒருபோதும் பலிக்காது.
நேற்றுமுன்தினம் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்து ஒன்றரை மணித்தியாலமாக என்ன பேசினர் என ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ச டீ சில்வா, சமுகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகளான ஐ. தே. கட்சியும், ஸ்ரீல. சு கட்சியும் ஒருவகையில் ஒரு திருமண பந்தத்தையே மேற்கொண்டுள்ளது. அதனால், இத்தகைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது இயல்பு. எவ்வாறெனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். அதனை ஜனாதிபதியும் பிரதமரும் பார்த்துக்கொள்வர்.
அதற்கான பூரண ஒத்துழைப்பை நாம் வழங்குவோம். ஐ.தே.கட்சியிலுள்ளோர் காட்டிக்கொடுப்பவர்களல்லர். பல தடவை கட்சியை அழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது முடியாமற் போனது. அந்தவகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐ. தே. கட்சியினரால் கொண்டுவரப்பட்டதல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.