பிரான்சு பொண்டியில் தமிழ்ச்சோலை உதைபந்தாட்டப்போட்டி!

பிரான்சு பொண்டிப்பிரதேசத்தில் 12 முதல் 15 வயதுகொண்டவர்களும் 16 முதல் 19 வயது கொண்ட தமிழ்ச்சோலையில் கல்வி கற்கும் இளம் உதைபந்தாட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி தமிழீழத்தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் 30 வது ஆண்டு நினைவாக கடந்த (14.04.2018) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றன.  தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கும், மாவீரர்களின் பொதுப்படத்திற்கும் யாழ். கைதடிப் பகுதியில் 16.05.2000 அன்று வீரச்சாவடைந்த வீரவேங்கை முத்துச்செழியன் அவர்களின் சகோதரி ஏற்றி மலர்வணக்கம் செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன், பொண்டி தமிழ்சங்கம் இப்போட்டியை முன்னெடுத்திருந்தது. தமிழ்ச்சோலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் இந்த இளம் போட்டியாளர்கள் இரண்டு வயதுப்பிரிவுகளாக பிரிந்து போட்டிகள் நடைபெற்றன. திறான்சி, செல், லாக்கூர்னோவ், புளோமினல், சார்சல், பொண்டி ஆகிய ஆறு தமிழ்ச்சோலையின் மாணவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். ஒவ்வொரு இளம் வீரர்களும் தமது அணிக்கான உடையுடன் மிகவும் அழகாக மைதானத்தில் நின்றிருந்தனர். வயதுகுறைந்த இந்த இளம்வீரர்கள் மைதானத்தில் விளையாடும்போது பெற்றோர்களும், ஏனைய கழகவீரர்களும், பார்வையாளர்களும் மிகுந்த உற்சாகத்தை கரவொலி மூலம் கொடுத்திருந்தனர். காலை 10.30 மணி முதல் மாலை 19.30 வரை இப்போட்டிகள் நடைபெற்றிருந்தன. இப்போட்டிகளுக்கு இளம் வயது வந்த இளையதலைமுறை உதைபந்தாட்ட வீரர்களே மிகவும் நேர்த்தியாக தமது நடுநிலையை வகுத்திருந்தனர். மூன்றாம், இரண்டாம் முதலாம் இடத்திற்கான போட்டிகள் 15.04.2018 ஞாயிற்றுக்கிழமை பொண்டித் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை இல்லவிளையாட்டுப்போட்டியன்று மாலை முதல் இரவு ஒன்பது மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டுத்துறையினதும், பொண்டித் தமிழ்ச்சங்கத்தினதும் இம்முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எமது இளைய தலைமுறை அதற்குள் மூழ் கித்தத்தளிப்பதையும் அதிலிருந்து விடுபட முடியாது நிற்பதும் இதைக்கண்ணுற்ற பெற்றோர்களும் இவ்இளைய தலைமுறைய வளர்த்தெடுப்பதில் உள்ள சிக்கலில் இருந்து ஓரளவு விடுபட வைத்து அவர்களின் ஆரோக்கியத்திற்கு கைகொடுக்கும் ஒரு நல்ல செயற்பாடாகவே பெற்றோர்கள் இதனை கருதியிருந்தனர். இரண்டு நாட்களும் நேரடியாக கண்ணுற்ற வகையில் இதனை மிகவும் காத்திரத்துடன் பொறுப்புணர்ச்சியுடன் பெரும் திட்டமிடலுடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய பணியாகவே இது அமைந்திருந்தது . வருங்காலங்களில் அனைத்து தமிழ்ப்பாடசாலை இளம் மாணவர்களுக்கிடையே இப்போட்டிகள் இடம் பெற வேண்டும். நடைபெற்று முடிந்த உதைபந்தாட்டப் போட்டியில் 12 – 15 வயது வரை 1ம் இடத்தை செல் தமிழ்ச்சோலையும் 2ம் இடத்தினை சார்சல் தமிழ்ச்சோலையும் 3ம் இடத்தினை திரான்சி தமிழ்ச்சோலையும் பெற்றிருந்தனர். அதேபோல் 16 – 19 வயது வரை 1ம் இடத்தை பொண்டி தமிழ்ச்சோலையும் 2ம் இடத்தினை சார்சல் தமிழ்ச்சோலையும் 3ம் இடத்தினை திரான்சி தமிழ்ச்சோலையும் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பரிசில்கள் பொண்டி தமிழ்ச்சங்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தது.

           
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)
Powered by Blogger.