ஒட்டுசுட்டானில் மக்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கான நிரந்தரமாக பிரதேச செயலாளர் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த பிரதேச செயலாளர் மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், குறித்த வெற்றிடம் தொடர்ந்தும் நிலவுகின்றது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பதில் கடமையாற்றி வருகின்ற போதிலும், நிரந்தரமாக பிரதேச செயலாளர் ஒருவர் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நேற்று பிரதேச செயலகத்திற்கு சென்ற ஒட்டுசுட்டான் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். குறித்த செயலகத்தில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கடமையில் இல்லாத நிலையில் பலர் திரும்பி சென்றுள்ளனர்.
காலை 10 மணிவரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பு பலகையில், எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் கடமையில் இருக்கவில்லை என தெரிவிக்கம் வகையில் காணப்பட்டது.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து உதவி பிரதேச செயலாளர் கடமையில் இருப்பதாக குறித்த காட்சிப்படுத்தல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் நிர்வாக உத்தியோகத்தரிடம் வினவியபோது, பிரதேச செயலாளர் கடமை ஒப்பம் இட்டு சென்றுள்ளார் எனவும், அவர் கடமையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உதவி பிரதேச செயலாளர் நண்பகல் 12.30 மணியளவிலேயே அலுவலகத்திற்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்த மக்களை சந்தித்துள்ளார்.
புதன்கிழமைகளில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெறும் வேளையில் இவ்வாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மக்கள் நலன் சார்ந்து செயற்படாமை தொடர்பில் வருகை தந்திருந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் அங்கு பொறுத்தப்பட்டுள்ள காட்சி பலகையை யாரோ பொது மக்கள் வேண்டுமென்று மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமெராவை அவதானித்து விசாரணை மேற்கொள்ள முடியும் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பல்வேறு தூர பிரதேசங்களில் இருந்து பிரதேச செயலாளர ரை சந்திக்க வருகை தந்த மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து சேவையை வழங்க எந்தவொரு அதிகாரிகளும் அங்கு இல்லாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அங்கு முறைப்பாட்டு பெட்டியும் இல்லாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு மக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குறித்த பிரதேச செயலகத்திற்கான நிரந்தர பிரதேச செயலாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஒட்டுசுட்டான் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Powered by Blogger.