தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பான விவகாரத்திற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பேன்!

தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து உரிய நேரத்தில் மக்களுக்கு கூறவேண்டிய விடயங்களைக் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

 தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் தொனியிலான அறிவிப்பொன்றை வட மாகாண முதலமைச்சர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

 இது குறித்து   வினவியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு பதிலளித்தார்.  இதேவேளை, பட்டதாரிகளுக்கு தொழில்களை ஏற்படுத்திக் கொடுக்கும்போது வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

 கடிதம் ஒன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் பொருட்டு மாவட்டச் செயலகங்களின் ஊடாக பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சைகளை அரசாங்கம் அண்மையில் நடாத்தியிருந்தது.

 இந்த நேர்முகப் பரீட்சையின்போது உச்ச வயதெல்லை 35 வயதாக இருக்கும் என்றும், முதற் பட்டப்படிப்பின் பின்னர் பெற்றுக்கொண்ட மேலதிகக் கல்வி, விசேட தொழிற் தகைமை மற்றும் விளையாட்டுத் தகைமை போன்ற தகுதிகளுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 இவ்வாறு பெறப்படுகின்ற புள்ளிகள் நாடளாவிய அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுத் தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 இதனால் வடக்குக் கிழக்குப் பட்டதாரிகள் பாதிப்புக்குள்ளாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், வடக்குக் கிழக்குப் பட்டதாரிகளுக்கு யுத்தம் மற்றும் பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக கல்விக்கு கூடுதல் காலம் செலவிட நேர்ந்துள்ளமையால் ஆகக் கூடிய வயதெல்லையை 35 இலிருந்து 40 வரை அதிகரிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.


Powered by Blogger.