திருகோணமலை நகர சபை கூத்தமைப்பு வசம்!

திருகோணமலை நகர சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. நேற்று இடம் பெற்ற சபை அமர்வின் போது கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை. எம்.சலீம் தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் நாகராசா இராசநாயகம் தலைவராகவும் உபதலைவராக சேனாதிராஜா சிறிஸ்கந்த ராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் தெரிவின் போது பொது ஜன பெரமுனவின் சார்பில் பி.சுசந்த முன்மொழியப்பட்ட போதும் பகிரங்க வாக்கெடுப்பில் 4 வாக்குகளை மட்டும் அவர் பெற்றுக் கொண்டார்.  இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 02 பேரும் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட நாகராசா இராசநாயகத்திற்கு 17 வாக்குகள் கிடைத்து அவர் தலைவராக மாகாண உள்ளூராட்சி ஆணை யாளரால் பிரகடனப்படுத்தப்பட்டார்.
மொத்தம் 24 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 09 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஐன பெரமுன 04 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி 02 ஆசனங்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 02 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 01 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனம், தமிழர்களின் சமூக ஜனநாயக கட்சி 01 ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 01 ஆசனம் தமிழ் ஜக்கிய விடுதலை முன்னனி 01 ஆசனம் சுயேச்சைக்குழு 02 ஆசனங்கள் என இம்முறை இடம் பெற்ற கலப்பு தேர்தல் முறையின் மூலமாக 24 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முறை 12 உறுப்பினர்கள் சபையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் திருகோணமலை தமிழரசு கட்சியின் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.