ஈழத்தின் இறுதிப் போர் சாட்சியாய்...(1)


வருடங்கள் கடந்தாலும் குத்திக்கிழிக்கும் ரணங்களாக ஈழத்தின் இறுதிப்போர் அமைந்து விட்டது. வன்முறையால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நிரந்தர தீர்வுக்காய் இரவும் பகலும் தனிமையில் விம்மும்  எங்கள் கண்ணீரின் நிறுவைகள் இன்னும்? போதவில்லையா?
              எப்படிக் கடந்து போக முடியும்? இழந்து போனவை இரத்தமும் சதையுமாய் உயிரோடு உயிரூட்டிய உயிர்களல்லவா?
எத்தனை விதமான சாவுகள் கண்டோம்.
பதுங்குகுழியை மூடியது குண்டுகள்.
குற்றிகள் பாறிண்டு பிரண்டன. பாதுகாப்பு வலையங்கள் என அறிவித்த இடங்களில் தானே பதுங்குகுழிகளை அமைத்தோம். பிறகெப்படி குண்டுகளை கிபீர் விமானங்கள் கொட்டின? பாதுகாப்பு இடங்களை நோக்கி ஏன் ஆட்லறித் தாக்குதல்கள்.?
                   பதுங்குகுழிகளுக்குள் சமாதியாகியோர் ஆயிரமாயிரம். மூடிய குழிகளை கிண்டிக்கிளறி எடுத்து மீட்ட மூச்சுத்திணறியோரில் நானும் ஒருத்தி.
எந்த ஒரு காயமும் இல்லாமல் மயக்கத்தில் கிடந்த என் மகன் மயக்கம் தெளிந்து எழுந்த போது மகிழ்ச்சி மேலீட்டால் "அப்பா " என்ற ஒற்றைச் சொல்லுடன் ஏன் உயிர் விட்டான்.?
தீராத வேதனையை ஏன் எனக்குள் தந்தான்?
நடமாடும் பிணமானதே என் வாழ்வு.
அக்கினிக் குஞ்சுகளில் சிறிது பெரிது உண்டோ?  உயிரிலும் சின்ன உயிர் பெரிய உயிருண்டோ? காலங்கள் ஓடினாலும் வளராத தளிர்முகத்தின் கெஞ்சல்களும் குறும்புகளும் இரத்தத்தை சாகடிக்குதே.
                பதுங்குகுழி அமைக்க முன்னரே வெறும் பதுங்குகுழிக்குள் இறந்தவர் தொகை மடங்கு. மரங்களில் பறவைகள் தொங்குவது போல மனித அங்கங்கள் தசைத் துண்டங்கள் தொங்கியதை எப்படி மறப்பது. பாதுகாப்புக்காய் எழுந்து ஓடும் போது "சலுக் சலுக்" என கால்களைப் புதைத்த தசைத் துண்டங்கள் யாருடையவை? சாணியை மிதித்தது போல் தசைத்துண்டங்களை மிதித்து ஓடினோம். உடலில் உயிர் சுமந்த பிணங்களாய் ஆயிரம் ஆயிரம் அவலங்களை மன மயானத்தில் திரும்பத் திரும்ப தகனம் செய்யும் நடமாடும் சுடலையர் ஆனோம்.
இறந்தவரோடு இறக்காமல் எஞ்சிய எச்சங்களாய் நடந்தவற்றை சொல்லி இறந்தவரிற்கு நீதிகோரி நீதியை  நிலைநாட்ட எஞ்சினோமா?
                தலைபாறி விழுந்த தென்னைகளும்
வேரோடு சாய்ந்த விருட்சங்களும் கனப்பொழுதில் உருக்குலைந்த காட்சிகளும் கண்ட சாட்சியர் நாங்கள்.
                முள்ளிவாய்க்கால் கரையோர வீதியால் இறப்பர் சிலிப்பருடன் கொதிகொதிக்கும் வெயிலில் நடந்தொருநாள் வந்தேன். என்னுடன் முன்னும் பின்னும் பலர் வந்தனர்.சிலர் தெரிந்தவர்கள். எங்களைக் கடந்து ஒரு ரைக்ரரில்( உழவு இயந்திரத்தில்) காயப்பட்ட பலரை ஏற்றியபடி சென்று கொண்டிருந்தது.
பின்னால் காயப்பட்ட சிலர் விழுவது போல் தொங்கிக் கொண்டிருந்தார்கள். கைக்குழந்தையையும் அணைத்தபடி "அண்ணோய்.... அண்ணோய்.... எனக் கத்திக்கொண்டு என்னை மறந்து ஓடினேன். என்னுடன் இன்னொரு பெண்ணும் கத்தியபடி என்னருகில் ஓடி வந்தாள். செல்லுகள் தலையை உரசுவது போல் கூவிக்கொண்டு கடற்கரைகளில் வெடித்தன.
பிரக்ஜை அற்று ஓடினோம் கத்தியபடி.
எங்கள் கூவல்கள் கதறல்கள் ஓட்டுனருக்கு கேட்க வாய்ப்பில்லை. அவன் ஓட்டுனர் அவதானிப்புக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உழவியந்திரத்தை நிறுத்தினான்."அண்ணா இஞ்ச பின்னுக்கு ஆட்கள் கீழ விழப்போகினம் " எனக் கத்தினேன். என்னோடு வந்த பெண்ணும் கத்தினாள்.
"நீங்களும் சாகப் போறியளோ? நானும் எத்தினை பேரைத்தான் செத்தபின் தூக்குவது? இதெல்லாம் செத்த பிணங்கள். ஓடிப்போய் உயிர் தப்புங்கோ" எனக்கத்திப் பேசிவிட்டு உழவியந்திரத்தை நகர்த்தினான்.
                    ஆமி சரமாரியாக செல்லடிக்கத் தொடங்கினான்."அக்கா இஞ்ச வா...".என கையில் பிடித்திழுத்து பதுங்குகுழிக்குள் இறக்கினாள் ஆரணி. அவள் எனது செஞ்சோலைச்சகோதரி. முழக்கங்கள் குறைந்ததும் தேனீரூற்றித் தந்தாள். வேண்டாமடா இப்ப தான் குடிச்சனான் என பொய் உரைத்தேன்.
     என்ர அக்காவுக்கு பொய் சொல்லத்தெரியாதென சொல்லி தேனீருடன் ரெட்டியும் தந்தாள். அமிர்தமாய் இருந்தது. எனது பையில் இருந்து எனக்கு சலுகை அடிப்படையில் கிடைத்த திரிபோசா பைக்ககற்றில் ஒன்றை அவள் வேண்டாம் வேண்டாம் என மறுக்க கொடுத்துவிட்டு நகர்ந்தேன். சாப்பிட்டது உற்சாகமாக இருந்தாது. என் வரவுக்காய் காத்திருக்கும் எனக்காக எஞ்சியிருந்த இரண்டு உயிர்களின் முகங்களைக் காண ஓட்டமும் நடையுமாக இருப்பிடம் நோக்கி நகர்ந்தேன்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
2018/05/03

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.