20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எந்த தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு தயார்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எந்த தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு தயார் என தெரிவித்துள்ள ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறித்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான குழுநிலையின் போது அதில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கம்பஹா பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதன்போது தெரிவித்துள்ளதாவது;
20ஆவது திருத்தம் பிரதமர் ரணிலுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கான முயற்சியே எனக் கூறுவது முற்றாகத் தவறானது. 2020 ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னரே 20ஆவது அரசியலமைப்பின் கீழான ஜனாதிபதியும் , பிரதமரும் உருவாக்கப்படுவார்கள். இதன்படி 2020 ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர்தான் பிரதமருக்கு மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும் என்பதனை கூறிக்கொள்கின்றோம்.
எவ்வாறாயினும் படைகளின் தலைவர் என்ற ரீதியில் அவசரகால சட்டத்தை பிரகடப்படுத்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் எந்தவித மாற்றமுமின்றி தொடரும். எனினும் இந்த விடயத்தில் ஜனாதிபதியும் , பிரதமரும் உரை கல்லை உரசிப் பார்ப்பதை நிறுத்தி தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். நாங்கள் பௌத்த தேரர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்கத் தயார். ஆனால் தவறான நோக்கங்களை கொண்ட குழுவினருடன் எமக்கு எவ்வித கொடுக்கல் வாங்களும் கிடையாது. கருத்தாடல்களை ஏற்படுத்தி தவறுகளை சுட்டிக்காட்டவும் , அவர்களின் கருத்துக்களை கூறவும் முடியும்.
பாராளுமன்றத்தில் குழுநிலையின் போது நாட்டை பிளவுப்படுத்தும் யோசனை அந்த திருத்தத்தில் உள்ளடக்கப்படுமென கருத்துக்களும் கூறுகின்றனர். ஆனால் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்தவர்களின் கைகளிலேயே குழுநிலையின் போது முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற பொறுப்பு இருக்கின்றது. இதன்படி குழுநிலையின் போது எந்தவொரு திருத்தமும் அதில் மேற்கொள்ளப்படாது. என்பதனை உறுதியாக கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
Powered by Blogger.