ஜாலியவுக்கு எதிராக வழக்கு தாக்கல் !

ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க நீதித் திணைக்களம் பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்தவுள்ளதாக, அதிகாரபூர்வ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்பிஐ எனப்படும் சமஷ்டி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு நீதிபதி ஒருவர் அனுமதி அளித்துள்ளார் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஜாலிய விக்ரமசூரிய வொசிங்டனில் சிறிலங்கா தூதுவராக இருந்த போது, அளிக்கப்பட்ட இராஜதந்திர சிறப்புரிமையை இலங்கை வெளிவிவகார அமைச்சு விலக்கிக் கொண்டதை அடுத்து, இந்த சட்ட நடவடிக்கைக்கு வழி பிறந்துள்ளது.
அவருக்கு எதிரான வழக்கின் அடிப்படையில், இராஜதந்திர சிறப்புரிமையை நீக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, வெளிவிவகார அமைச்சு அதனை நீக்கியுள்ளது.
எந்தவொரு இராஜதந்திரியினதும் இராஜதந்திர சிறப்புரிமையை எந்தவொரு நேரத்திலும் ஒரு அரசாங்கத்தினால் நீக்க முடியும் என்று இராஜதந்திர வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
அதேவேளை, ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.