கோட்டாவை கைது செய்யாமல் மைத்திரி அரவனைப்பு!

தற்போது நாட்டில் உள்ள சட்ட சிக்கல் காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாதுள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கடந்த கால குற்றங்கள் தொடர்பில் இன்று வரையிலும் முறையான தண்டனைகள் வழங்கப்படாதமையின் காரணத்தினால், குற்றங்களுடன் தொடர்பு பட்டவர்களுடன் நாம் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முறையான நீதியை நிலை நட்டுவதில் இழுபறி நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் கடந்தகால ஊழல்கள், கொலைகள், கடத்தல்களோடு தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அதேபோன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் காரணமான அவரை கைது செய்ய முடியுமா அல்லது முடியாதா என்ற சட்டக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுவந்தன.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்ட ஆலோசனைகளின் மூலம் அவரை கைது செய்ய முடியாது என நீதித்துறையினர் கூறுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த விடயம் தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது” என அவர் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்ற திருத்தச் சட்டங்கள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.