தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம்!

காவல் துறையினர் தூத்துக்குடியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் நாளை தமிழகம்
முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த செல்வசேகர் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். நேற்றிரவு தூத்துக்குடியில் ஒவ்வொரு வீடாகப் புகுந்து காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்த காணொளியும் வெளியாகியுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது.
காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு சென்ற தலைவர்கள் மீது 143,188, 153 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடியில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,செயல்படாத அதிமுக அரசை உடனே பதவி விலகக் கோரியும் 25.5.2018 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக, மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் சார்பில் நாளை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.