மனித புதைகுழி தமிழர்கள் என்பதால் விசாரணை நிறுத்தப்படலாம்!

மன்னார் நகரத்தின் நுழைவாசலில் உள்ள, பாலத்துக்கு அருகில்,
மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், மண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, எலும்புக் கூடுகள் இருப்பது உறுதியாகியுள்ளன.

குறித்த பகுதியில் இருந்த கூட்டுறவுச் சங்க கட்டடம் ஒன்றில், 1990 ஆம் ஆண்டு தொடக்கம், 2009 வரை இரணுவம் நிலை கொண்டிருந்ததாக தமிழ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். இந்த கூட்டுறவுக்கட்டடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் கட்டடத்திற்கு எதிராக தற்போதும் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ளது.

நீதவான் முன்னிலையில், விசேட தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் ஆராய்வை முன்னெடுத்தார்கள். விசேட சட்ட வைத்திய நிபுணர் று.சு.யு.ளு. ராஜபக்ஸ, களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர் அகழ்வை மேற்பார்வை செய்தனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகளான திருமதி ரணித்தா ஞானராஜ், வி.எஸ்.நிரஞ்சன், ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

ஐந்து மாடி கட்டடம் ஒன்றை கட்டுவதற்காக, குறித்த கூட்டுறவு கட்டடம், கடந்த மாரச் மாதம் இடிக்கப்பட்டிருந்தது. கட்டடம் அமைப்பதற்கான அடித்தள வேலைகளை முன்னிட்டு மணல் அகழப்பட்டது. அந்த அகழ்வின்போது மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்து, மன்னார் நீதிமன்றம் மண் அகழும் பணியை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தது. ஏற்கனவே அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண், குறித்த இடத்தில் இருந்து வேறு பகுதியில் கொட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிவானன் முன்னிலையில், இரண்டு இடங்களிலும் மண் ஆய்வு செய்யப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த ஆய்வு நாளை செவ்வாய்க்கிழமையும் இடம்பெறுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த மனித எச்சங்கள், எலும்புக் கூடுகள் எந்தக் காலப்பகுதிக்குரியவை என்பது குறித்து தடவியல் நிபுணர்களும் சட்ட நிபுணர்களும் மேலும் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிவிப்பார்கள். அதன் பின்னரே அடுத்த கட்ட விசாரணைகள் இடம்பெறும் என சட்டத்தரணி தெரிவித்தார்.

மன்னார், திருக்கேதீஸ்வரன் ஆலயத்திற்கு அருகில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பற்றிய விசாரணைகள் மூடி மறைக்கப்பட்ட நிலையில், இந்த விசாரணைகளும் அப்படியே கைவிடப்படலாம் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற மண் ஆய்வின்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகளை கன்காணித்ததாகவும், புலனாய்வு துறையினரும் அங்கு சிவில் உடையில் காணப்பட்டதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்று கொழும்பில் இருந்து மன்னாருக்கு செல்லவுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், எலும்புக்கூடுகளும் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
Powered by Blogger.