கடுமையான தலைவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டது!

நாட்டில் தற்போது பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய போன்று கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள சிறந்த தலைவர் இல்லையென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிவித்ரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன் பில தெரிவித்துள்ள அதேநேரம், இலங்கை இன்று பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ளதாக விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் பொது எதிரணியைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன டி சில்வாவின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டு மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் உத்தரவாதம் வழங்க முடியாதளவிற்கு பாதாள உலகக் குழுக்களின் மிக மோசமான செயலையிட்டு தற்போதைய அரசாங்கம் வெட்கப்படவேண்டும்.
இன்று பாதாள உலகக் குழுக்களின் கொலைகள் , கப்பம் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடையாது எனக் கூறினாலும், தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய போன்று கடுமையான தீர்மானம் எடுப்பதற்கோ அல்லது முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்கோ சிறந்த தலைவர் இல்லையென்ற முறைப்பாடுகள் எழுந்துள்ளன என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கருத்து தெரிவிக்கையில்;
கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்புப் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் பாதாள உலகக் குழு தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . இதனால் மக்கள் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான சந்தர்ப்பம் கொழும்பு நகர மக்கள் உட்பட ஏனைய நகர மக்களுக்கும் கிட்டியது.
கடந்த மூன்று வருட கால ஆட்சியில் கடந்த காலத்தில் இந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்த பாதாள உலகக் குழுவினரை தற்போதைய அரசியல் தலைவர்கள் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதனால் இன்று சர்வதேச கிரிக்கெட் வீரரின் தந்தைக்கே பாதுகாப்பு இல்லாத நாடாக சர்வதேச நாடுகளின் பார்வைக்கு இலக்காகியுள்ளது.
எனவே இவ்விடயம் குறித்து சிறந்த தீர்வையும் கடுமையான நடவடிக்கையையும் மேற்கொள்ளாவிடின் எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இன்னும் சிறுவர்கள் , பெரியோர்கள் என எத்தனை பேருக்கு இந்நிலை ஏற்படுமென்பது கேளிவிக்குறியான விடயமாகுமென அவர் தெரிவித்தார்.
Powered by Blogger.