வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்க வேண்டும்!

வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும்,குறித்த கொடுப்பனவுகளை வழங்க மத்திய அரசு நிதி  ஒதுக்கீட்டினை உடனடியாக மாகாண திறைசேரிக்கு வழங்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 இவ்விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது,

எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜனவரி மாதத்திலிருந்து அவர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கான வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் இது வரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மத்திய அரசிலிருந்து மாகாண திறைசேரிக்கு பழைய வீதத்திலான கொடுப்பனவுகள் வழங்குவதற்கே எமக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தது.

 புதிய வீதத்தின் அடிப்படையில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதாக இருந்தால் மொத்தமாக 280 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

 குறித்த விடயம் தொடர்பில் மாகாண திறைசேரி,பிரதம செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த போது தற்போது மாகாண திறைசேரியிலிருந்து வழங்குவதற்கான நிதி மாகாண திறைசேரியிடம் இல்லை.

 மாகாண திறைசேரியினால் மத்திய நிதி அமைச்சிற்கு குறித்த விடையம் தெரியப்படுத்தப்பட்டு மத்திய திறைசேரியிடமிருந்து இதற்கான நிதியை ஒதுக்கித்தருமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, நேரடியாகவும் மாகாண பிரதி பிரதம நிதி செயலாளர் கொழும்பு சென்று இவ்விடயம் தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

 மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி இன்னும் எங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது.  ஆகவே நிதி அமைச்சிலிருந்து இதற்கான நிதியை பெற்று மாகாண திறைசேரியூடாக மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும்.

 எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய சுகாதார அமைச்சருக்கும் மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.

 குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக வைத்திய சேவைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.  மத்திய அரசு உடனடியாக குறித்த நிதியை வழங்கி வைத்தியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 வடமாகாண வைத்தியர்கள் தொடர்ச்சியாக அடையாள பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டால் வடமாகாணத்தில் வைத்திய துறையில் பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.  எனவே குறித்த வைத்தியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  தெரிவித்துள்ளார்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.