சமுர்த்தி நிவாரணத்துக்கு புதிய நடைமுறை!

குறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சமூக வலுவூட்டல் அமைச்சர் பி. ஹரிசன் நிதியமைச்சுடன் இணைந்து புதிய நடைமுறையை தயாரிப்பதற்கான பணியை ஆரம்பித்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமுர்த்திச் செயற்பாடுகளில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டி சமுர்த்தி உதவித் திட்டத்தை மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்திருந்தார்.
அதற்கமைய புதிய நடை முறையை வகுப்பதற்காக ஆலோசனைகளை பிரதமர் சமூக வலுவூட்டல் அமைச்சருக்கு வழங்கியுள்ளார். சமுர்த்தி திட்டத்தில் காணப்படும் முறைகேடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளுக்குப் புறம்பாக வறுமைக்கோட்டிலுள்ள 14 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான காலமாக சமுர்த்தி உதவி பெறத் தகைமையுடைய மூன்று இலட்சத்து எண்பதாயிரம் குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய விதத்தில் உரிய நடைமுறைகளை வகுக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு வாரங்களுக்கிடையில் இந்தப் புதிய நடைமுறைகள் தயாரிக்கப்பட்டதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென சமூகவலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சமுர்த்தி வங்கியில் மோசடிகள் இடம்பெற்றிருக்கிறதா? என்பது குறித்து ஆராய அரசாங்கம் தீர்மானித்திருக்கிறதென அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.
உலகிலுள்ள அனைத்து வங்கிகளும் மத்திய வங்கியின் கீழேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் எமது அரசாங்கத்திலும் மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத வங்கியொன்று இருப்பது பற்றி நாம் இப்போது தான் சிந்திக்க ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Powered by Blogger.