நான் எதை நினைத்துக்கூட பார்க்கலையோ அதுதான் நடந்துச்சு!

பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவேன் என எதிர்பார்க்கவே இல்லை என அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் ராகுல் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஐபிஎல் வென்றிராத அணிகளில் ஒன்றான பஞ்சாப் அணி, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவருகிறது. சேவாக்கின் ஆலோசனையில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிவருகிறது. 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது.
எஞ்சிய 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதி பெற்றுவிடும். இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சிறந்த வீரர்களை அந்த அணி எடுத்தது. ராகுல், அஸ்வின், யுவராஜ் சிங், கருண் நாயர், மயன்க் அகர்வால், கெய்ல், ஆண்ட்ரூ டை உள்ளிட்ட சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
கெய்லும் ராகுலும் சிறந்த தொடக்கத்தை பஞ்சாப் அணிக்கு அளித்துவருகின்றனர். அதிலும் சிறந்த ஃபார்மில் இருக்கும் லோகேஷ் ராகுலின் ஆட்டம் அபாரமானது. ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கினார். அந்த இரண்டு போட்டிகளிலுமே ராகுலை ராஜஸ்தான் அணியால் அவுட்டாக்க முடியவில்லை.
10 போட்டிகளில் ஆடி, 4 அரைசதங்களுடன் 471 ரன்களை குவித்துள்ளார். இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடியதால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல், இந்த ஐபிஎல் சீசன் குறித்து பல கருத்துகளையும் பஞ்சாப் அணியில் தான் எடுக்கப்பட்டது குறித்த பார்வையையும் வெளிப்படுத்தினார். அதில் பேசியுள்ள ராகுல், நான் ஏற்கனவே ஆடிய பெங்களூரு அணியால் மீண்டும் எடுக்கப்படுவேன் என நினைத்தேன். அப்படியில்லை என்றாலும் சில அணிகளை மனதில் வரிசைப்படுத்தியிருந்தேன். அந்த வரிசையில் கடைசியாக நினைத்திருந்தது பஞ்சாப் அணியைத்தான். ஆனால் பஞ்சாப் அணி தான் என்னை ஏலத்தில் எடுத்தது. நான் பஞ்சாப் அணியால் எடுக்கப்படுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. 
ஐபிஎல் தொடங்கும் சமயத்தில், நல்ல மனநிலையிலும் ரன் எடுக்க வேண்டும் என்ற பசியிலும் இருந்தேன். பஞ்சாப் அணி நிர்வாகமும் என் மீது பெரும் நம்பிக்கையை வைத்திருந்தது. ஒவ்வொரு முறையும் களத்திற்கு செல்லும்போது அணி வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் என ராகுல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.