இரணைதீவு மக்கள் அடிப்படை உரிமையை உறுப்படுத்துமாறு கோரி முறைப்பாடு!

இரணைதீவில் மீள்குடியமர்வதற்கும் வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை முன்னெடுப்பதற்கும் தமக்கு உள்ள அடிப்படை உரிமையை உறுப்படுத்துமாறு கோரி, யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரணை தீவு மக்கள் போர் காலப்பகுதியான 1992ஆம் ஆண்டு கடற்படையினரால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக கிளிநொச்சி இரணை மாதா நகரில் வசித்து வருகின்றனர்.
தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை முழுமையாக முன்னெடுக்க முடியாது அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இரணை தீவிலுள்ள தமது பூர்வீக காணிகளில் மீள்குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக இரணை தீவில் தங்கியிருந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.