மட்டக்களப்பில் 10 பேர் மீது வழக்கு தாக்கல்!

மட்டக்களப்பு – கல்முனை வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 10 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை இரவு வீதியை மறித்து இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

கல்லடி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையிலேயே இந்த நிலை உருவானது.

கல்லடி பகுதியில் வீதி பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் அப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது போக்குவரத்து சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுத்தாகவும் அதன்போது வாய்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் விதிமுறைகளுக்கு மீறி நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் தமது கடமைக்கு இடையூறு எற்படுத்திய இளைஞரை வாக்குமூலம் வழங்குவதற்கு அழைத்த நிலையிலேயே இந்த சம்பவம் பெரும் பிரச்சினையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பின்னர் குறித்த இளைஞன் வரும் வரையில் போக்குவரத்தினை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து கல்முனை – மட்டக்களப்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததன் காரணமாக ஒன்றரை மணிநேரம் மட்டக்களப்பு – கல்முனை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த 10 பேர் மீது காத்தான்குடி பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.