யாழ் மல்லாக துப்பாக்கிச்சூட்டு தொடர்புடைய 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட 6 பேரும் நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் பகுதியில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் 19 முதல் 24 வயதுக்குட்பட்டோர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவின், மல்லாகம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 33 வயதான பா.சுதர்சன் என்பவர் உயிரிழந்தார்.

தெல்லிப்பளை – மல்லாகம் சந்தியில் கூரிய ஆயுதங்களுடன் இரு குழுக்கள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்ற பொலிஸாரை வாளால் தாக்குவதற்கு முயற்சித்தவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.Powered by Blogger.